என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    சமையல் குறிப்புகளை பார்த்து தின்பண்டங்கள் செய்யும் குடும்பத்தலைவிகள்
    X
    சமையல் குறிப்புகளை பார்த்து தின்பண்டங்கள் செய்யும் குடும்பத்தலைவிகள்

    சமையல் குறிப்புகளை பார்த்து தின்பண்டங்கள் செய்யும் குடும்பத்தலைவிகள்

    ஊரடங்கு காரணமாக நொறுக்கு தீனிகள் காலியானதால் குடும்பத் தலைவிகளே சமையல் குறிப்புகளை அலசி தின்பண்டங்களை தயாரிக்கிறார்கள். இந்த பண்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
    கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் வீட்டு சிறையில் இருந்து மீள முடியாமல், அகப்பட்டு கிடக்கிறார்கள். ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும், வெளியே சென்று விளையாடலாம் என்ற ஆர்வம் அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் உள்ள குழந்தைகள் தொலைக்காட்சி பெட்டிகளில் ஒளிபரப்பாகும் கார்ட்டூன் உள்பட சில நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்தும், செல்போன்களில் விளையாடியும் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

    பொதுவாக தொலைக்காட்சி பார்க்கும்போதும், செல்போன்களில் விளையாடும்போதும் என பல்வேறு தருணங்களில் குழந்தைகள் ஏதாவது ஒரு நொறுக்கு தீனியை ருசித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். ஊரடங்கு தகவல் வெளியானதும் பெரும்பாலானோர் தங்களுடைய வீட்டில் குழந்தைகளுக்காக நொறுக்கு தீனி வகைகளை முன்னெச்சரிக்கையாக வாங்கி இருப்பு வைத்தனர். ஆனால் வாங்கி வைத்த நொறுக்கு தீனிகள் அனைத்தும் பெரும்பாலான வீடுகளில் சில நாட்களிலேயே காலியாகிவிட்டன.

    ஊரடங்கு நாட்களில் கடுமையான கிராக்கி இருந்ததால், பெரும்பாலான மளிகைக்கடைகளிலும் நொறுக்கு தீனிகள் விரைவாகவே விற்று தீர்ந்துவிட்டன. சென்னையில் உள்ள பெரும்பாலான மளிகை கடைகளில் நொறுக்கு தீனி வைக்கப்படும் ரேக்குகள் காலியாக கிடப்பதையே காணமுடிகிறது. நொறுக்கு தீனிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டு கைதிகளாய் தவிக்கும் குழந்தைகள் தங்களுடைய பெற்றோரிடம் நொறுக்கு தீனிகளை கேட்டும் அடம் பிடித்து பாடாய் படுத்துகின்றனர்.

    கடைகளிலும் நொறுக்கு தீனி வகைகள் கிடைக்காத நிலையில், தாங்களே வீடுகளில் தின்பண்டங்களை செய்யவேண்டும் என்று குடும்பத்தலைவிகள் பலரும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள். இதற்காக குடும்பத் தலைவிகள் தங்களுடைய பெற்றோரிடம் ஆலோசனை கேட்டும், ‘யூடியூப்’ வீடியோக்கள், சமையல் குறிப்பு புத்தகங்களை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்தும் அலசுகிறார்கள். ஒரு வழியாக தாங்களே தின்பண்டங்களையும் செய்து, குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்களுக்கு பகிர்ந்து வருகிறார்கள்.

    முறுக்கு, வடை, பஜ்ஜி வகைகள், வெங்காய பக்கோடா, மிட்டாய் வகைகள், பால் கோவா என பல்வேறு நொறுக்கு தீனிகளை செய்து அசத்தி வருகிறார்கள். ஊரடங்கு காலக்கட்டம் தங்களுக்கு நொறுக்கு தீனிகளை செய்து படிப்பதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளதாக சிலர் கருதுகிறார்கள். குடும்ப தலைவிகளின் புதுவிதமான நொறுக்கு தீனிகளுக்கு, குழந்தைகளிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    இதேபோல், எப்போதும் கட்டவிழ்த்த காளையாக வலம்வரும் ஆண்கள் ஊரடங்கால் வீட்டுக்குள் கட்டிவைக்கப்பட்டு இருக்கிறார்கள். டி.வி. பார்ப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது என்று பொழுதை போக்குகிறார்கள். அதேசமயம் அவ்வப்போது சமையலிலும் மனைவிகளுக்கு ஒத்தாசையாக இருந்து வருகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் மட்டுமின்றி, தங்கள் கணவர்களுக்கும் விதவிதமாக சமைத்து ஆசைதீர உணவு அளித்து மகிழ்கிறார்கள் குடும்பத்தலைவிகள்.

    இத்தனை நாளாக உப்புமா, இட்லி, தோசை என்று மட்டுமே சாப்பிட்டு பழகிய ஆண்கள் தற்போது தினம் தினம் கிடைக்கும் ருசியான உணவுகளால் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். ‘இப்படியெல்லாம் சமைப்பியா நீ...’ என்று வியந்து மனைவிமார்களை பாராட்டி வருகிறார்கள்.

    அதேவேளை சமைத்த உணவுகளையும், கணவர் மற்றும் குடும்பத்தாரின் பாராட்டுகளையும் பெற்ற பெண்கள் உடனடியாக அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுகிறார்கள். மற்றவர்கள் அதை பாராட்டுவதை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியும் கொள்கிறார்கள்.

    இதுகுறித்து குடும்பதலைவிகள் கூறும்போது, “ஊரடங்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. கெட்டதிலும் ஒரு நன்மை நடக்கும் என்பார்கள். அதுபோல கடைகளில் வாங்கும் நொறுக்கு தீனிகள் பெரும்பாலும் ஆரோக்கியமானது இல்லை. இதனால் உடலுக்கு சத்தான பண்டங்களை சமையல் குறிப்புகளை பார்த்து தயாரிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் பண்டங்களை குழந்தைகள் ஆர்வமாக சாப்பிடுகிறார்கள்” என்றனர்.

    எது எப்படியோ கொரோனா பயத்தால் வீடுகளில் முடங்கியிருக்கும் ஆண்களுக்கு வாய்க்கு ருசியாக சாப்பாடு கிடைக்கிறது. இதனால் பண்டிகை கால மகிழ்ச்சி இல்லங்களில் நிலவி வருகிறது.
    Next Story
    ×