என் மலர்

  ஆரோக்கியம்

  புத்தாண்டு புதுவாழ்வு..
  X
  புத்தாண்டு புதுவாழ்வு..

  புத்தாண்டு.. புதுவாழ்வு..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புத்தாண்டில் வருடத்தின் எண் உயர்கிறது. இனி ஒவ்வொரு ஆண்டிலும் நம் வாழ்வின் சாதனைகள் உயரட்டும். எண் உயர்ந்தால் புத்தாண்டு எண்ணம் உயர்ந்தால் புதுவாழ்வு.
  எதிர்பார்த்து காத்திருந்த 2020 புத்தாண்டு நாள் இன்று. விண்ணில் மிளிர்ந்த வான வேடிக்கைகளும், மண்ணில் இசைத்த இசைக்கருவிகளும், ஒரு மத்தாப்புக் கொண்டாட்டத்தை மனசெல்லாம் மகிழ வைத்தது. வருடத்தில் எந்நாளும் விடியாதது போல் இந்நாள் விடிந்ததாக அனைவரின் மனதிலும் ஓர் உற்சாக துள்ளல்.

  முகந்தெரியாத மனிதர்களுக்கெல்லாம் “ஹேப்பி நியூ இயர்” என்று சத்தமாய் வாழ்த்து சொல்லி, வாட்ஸ்-அப்பின் ஸ்டேட்டஸில் புது வருட வாழ்த்தினை வித விதமாக எல்லோருக்கும் அனுப்பி புத்தாண்டை மகிழ்ச்சியாய் கொண்டாடியாகிவிட்டது.

  தீபாவளியை குடும்பத்தோடும், பொங்கலை சுற்றத்தோடும், கொண்டாடி மகிழ்வது போல் புத்தாண்டும், குடும்பமும் சுற்றமும் சூழ நிறைந்திருந்தால் அது கொண்டாட்டம். மாறாக, காற்றையும், காதையும் கிழித்திடும் சைலன்ஸர் கழட்டிய இருசக்கர வாகனங்களும், பாடல்களை இரைச்சலாக்கி அபாய வேகத்தில் ஓட்டும் வாகனமும், நடுரோட்டில் நண்பர்களோடு முகம் சுழிக்கும் வகையில் நடனமிட்டு புத்தாண்டை வரவேற்றிருந்தால் அது கொண்டாட்டமல்ல, கும்மாளம்.

  உறவுகள் ஒன்று சேர்ந்து வீட்டில் பின்னர் வீதியில், விளக்கேற்றி, உதிக்கின்ற புத்தாண்டு ஓர் உன்னத ஆண்டாக அமைய பிரார்த்தித்து, இருக்கின்ற இனிப்புகளை இல்லாதோருக்கு வழங்கி, தொடங்குகின்ற புத்தாண்டு, ஒரு புது வாழ்வாகும்.

  புத்தாண்டு என்பது காலண்டர் போல. அதில் நேற்றைய நாள் என்பது பயனற்ற நாள். ஆகவே, அது கிழித்து எறியப்படும். அதுபோல நேற்றைய வாழ்வில் நம்மில் படிந்திருந்த தீய பழக்கங்களைத் தூக்கியெறிந்து, இன்றைய வாழ்வினைப் புது விடியலாய்த் தொடங்கும் நாள்தான் புத்தாண்டு.

  பழையன கழிதலில் கும்பகர்ணரை எழுப்பிப் பார்த்து, முடியாமல் கைவிட்டு, சாபமிட்ட கிங்கரர்களைப் போல், பெற்றோரை சாபமிட வைக்காமல் அதிகாலையில் தானாகவே துயிலெழுதல், விடிந்ததும் செல்போனில் கண்களைப் புதைத்து நள்ளிரவு வரை அதிலேயே வாழ்ந்து மடியும் விட்டில் பூச்சி வாழ்க்கையைத் தவிர்த்தல், சோம்பியிருக்க மறுத்தல், சினத்தினைத் தவிர்த்தல், குட்டிப் பொய் கூட சொல்ல மறுத்தல் என நல்ல உறுதி மொழிகளை எடுக்கும் நாள், இந்நாள். அதனை வழக்கத்திற்குக் கொண்டு வரும் ஆண்டு 2020 என்போம். மதுவுக்கும், போதைக்கும் விடைகொடுப்போம். நல்ல மனிதனாய் வாழ்வதே சிறப்பென்று உறுதியேற்போம் என உரக்கச் சொல்லும் ஆண்டு 2020.

  ஒவ்வொரு வருடத்திலும் இளைஞர் தினம், மகளிர் தினம், யோகா தினம், மனித உரிமைகள் தினம் என எத்தனையோ தினங்கள் கொண்டாடப்படுகின்றன. உலகின் மிகச் சிறந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடத்திலும் ஏதாவது ஒரு குறிக்கோளை வலியுறுத்தியும், அதற்காக வாசகத்தினை முன்னிறுத்தியும் கொண்டாடுகிறது. அதே போல், ஒவ்வொரு படிநிலையிலுள்ள மனிதனும், புதுவருடத்தில் தனக்கென ஒரு குறிக்கோளுடன் கூடிய ஒரு வாசகம் கொண்டால் அவரது வெற்றியான வாழ்வேயாகும். அவ்வாறில்லையெனில் காற்றில் பறந்த துரும்பாய், துடுப்பில்லாத கலமாய் வாழ்க்கை அலைபாய்ந்து செல்லுமிடம் தெரியாமல் மறைந்து, ஒரு வருடம் மறைந்தோடி விடும்.

  புதியன புகுதலில், அளவான உணவு, அனுதினமும் உடற்பயிற்சி, படிப்பதெற்கென்றே பல மணி நேரம், மரம் நடுதல், பிறருக்கு உதவியாயிருத்தல் என வாழ்க்கையை உயர்த்தும் நேரங்களைத் தேடிப்பிடித்து அட்டவணைப்படுத்தி மகிழும் நாள், புத்தாண்டு.

  ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு சரித்திரம். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கங்கள். ஒவ்வொரு நாளிலும் தனக்கோ, தன் குடும்பத்திற்கோ, சமுதாயத்திற்கோ பயன்படாத நாட்கள், வெறும் பக்கங்களாகவே இருக்கும். இப்பக்கங்கள் கிழிக்கப்படும்; இல்லையெனில் பிறரால் கிறுக்கப்பட்டுவிடும். நம் பண்டைய தமிழ் மக்கள் போரில் சென்று எதிரியின் அம்புகளை நெஞ்சினிலே தாங்காத நாட்களை இம்மண்ணில் வாழாத நாட்களாக அறிவித்திருக்கிறார்கள். இதனைத் திருவள்ளுவர் “விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் தந்நாளை எடுத்து” என்று இரண்டடியில் அடிக்கோடிடுகிறார். எனவே, ஒவ்வொரு நாளும் பயனுள்ளதாக வாழ்வதால் மட்டுமே நம் வாழ்நாள் பக்கங்களை அலங்கரிக்க முடியும்.

  சாதனையான ஒரு வருடம் வேண்டுமெனில், வெற்றிகரமான மாதங்கள் அவசியம். வெற்றிகரமான ஒரு மாதத்திற்கு அற்புதமான வாரங்கள் அடிப்படை. அற்புதமான வாரங்கள் அமைய உழைத்து மகிழும் ஒவ்வொரு நாள் அவசியம். அத்தகைய ஒவ்வொரு நாளையும் நட்சத்திரங்களை சேகரிக்கும் வானம் போல் சேகரிப்போம். நமது வாழ்க்கையையும் நம்பிக்கை நட்சத்திரமாக்குவோம். அதற்கு தயாராகும் நாள் தான் புத்தாண்டு. இதற்கான தீர்மானத்தை எவரிடமும் காப்பியடிக்காது, சொந்தமாக நிர்மாணிப்பவனே தனது தலைவிதியைத் தீர்மானிக்கிறான்.

  அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர். அவரது பேச்சினை ஓர் அரங்கத்தில் வியந்து கேட்ட ஓர் இளைஞன், “ஐயா! கடந்த அரை மணி நேரம் உங்களால் எப்படி இவ்வளவு அற்புதமாக பேச முடிந்தது? என்றார். அதற்கு, நான் மேடையில் பேசிய அரை மணி நேரம் தான் என்னை நீ பார்த்தாய். அதற்காக நான் ஆறு நாட்கள் தயாரானதை நீ பார்க்கவில்லையே” என்றார். ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றி பெறும் வீரனின் வெற்றி, அவன் சாதாரண நாட்களில் மைதானத்தில் மேற்கொள்ளும் பயிற்சியில் அடங்கியுள்ளது. அதே போல், ஒரு மனிதனின் வெற்றி, அவன் ஒவ்வொரு நாளையும் வெற்றியாக்குவதில் தான் உள்ளது.

  ஒவ்வொரு நாளையும் நமது செயல்பாட்டால் உயர்த்தும் போது, நாமும் உயர்கிறோம். ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளும் போது, “நான் சிறந்தவன்; இந்த நாள் பிறந்தது எனக்காக; இந்நாளில் நான் வெற்றியடைவேன், மனதாலோ, சொல்லாலோ, செயலாலோ நான் யாரையும் காயப்படுத்த மாட்டேன், பிறருக்கு இன்று உதவி செய்வேன்; என்ற மந்திர வார்த்தைகளோடு பயணிக்கும் நாட்கள் வெற்றியான நாட்களாய் அமையும். அன்றைய நாளில் செய்ய வேண்டியது யாவை? செய்யக்கூடாதது எவை எவை? என்று முந்தைய நாளில் திட்டமிட்டு இரவு தூங்கச் சென்றால் ஒவ்வொரு நாளும் நாம் எதிர்பார்த்தது போல் புத்தாண்டாய் விடியும்”.

  புத்தாண்டில் வருடத்தின் எண் உயர்கிறது. இனி ஒவ்வொரு ஆண்டிலும் நம் வாழ்வின் சாதனைகள் உயரட்டும். எண் உயர்ந்தால் புத்தாண்டு எண்ணம் உயர்ந்தால் புதுவாழ்வு.

  முனைவர் இரா.திருநாவுக்கரசு, ஐ.பி.எஸ்.,

  காவல் துணை ஆணையாளர்,

  நுண்ணறிவுப் பிரிவு, சென்னை.
  Next Story
  ×