search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    18 வயதில் கர்ப்பம்
    X
    18 வயதில் கர்ப்பம்

    17 வயதில் காதல்... 18 வயதில் கர்ப்பம்... பெண்களின் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படும் அதிர்ச்சிகள்

    இளம் வயது கர்ப்பிணிகள் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும்.
    பெண்கள் ஒருபுறத்தில் கல்வி, ஆரோக்கியத்தில் அதிக விழிப்புணர்வு பெற்று முன்னேறிக்கொண்டிருந்தாலும், இன்னொரு புறத்தில் பழைய சோக கதைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பள்ளிப் பருவம் முடியும் 17 வயதிலே காதல்வசப்படுவது, 18 வயதானதும் ரகசிய திருமணம் செய்துகொண்டு, அவசரமாய் தாய்மை அடைவது போன்றவை இப்போதும் அன்றாட செய்திகளாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

    இந்த சூழ்நிலைக்கு உள்ளாகும் அவசர ஜோடிகளுக்கு சமூகநெருக்கடிகளும், பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டு அவர்களது வாழ்க்கையை சின்னாபின்னப்படுத்திவிடுவது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகிறது.

    சுகாதாரத்துறை நிபுணர்கள் 20 வயதுக்கு கீழ் உள்ள எல்லா கர்ப்பிணிகளையும் ‘இளம் வயது கர்ப்பிணிகள்’ என்ற பட்டியலில் சேர்க்கிறார்கள். இந்த வயதுகளில் பிரசவிக்கும் பெண்கள் அதிகபட்சமான மனஅழுத்தத்திற்கும், ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் உள்ளாகிறார்கள். 19 வயதுக்கு கீழ்உள்ள பெண்கள் எந்தவிதமான கர்ப்பத்தடை முறைகளையும் கடைப்பிடிக்காமல் தாம்பத்ய உறவுகொண்டால் ஒரு வருடத்திற்குள் அவர்கள் கர்ப்பிணியாகிவிடும் வாய்ப்பு 90 சதவீதம் இருக்கிறது. இந்த பருவத்தில் உள்ள டீன்ஏஜ் பெண்களில் 33 சதவீதம் பேர் பாலியல் உறவில் அதிக வேட்கையுடனும் இருப்பார்கள். இத்தகைய சூழ்நிலைகளால் இளம் வயது கர்ப்பம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    இளம் வயதிலே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் உடனே கர்ப்பமாவதை தவிர்க்கவேண்டும். அவர்கள் இருவருக்குள்ளும் மானசீக நெருக்கம் ஏற்பட்ட பின்பே அவர்கள் தாய்மையை பற்றி பரிசீலிக்கவேண்டும். 20 வயதுக்கு பிறகு 24 வயது வரை தலைபிரசவத்திற்கு ஏற்ற காலமாக இருப்பதால் அது வரை பொறுமை காக்கவேண்டும். கர்ப்பத்தடை உறைகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள் போன்ற பலவகை தடுப்பு முறைகள் இருக்கின்றன. டாக்டரின் ஆலோசனைபடி அதில் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து கடைப்பிடித்து இளம் வயது கர்ப்பத்தை தவிர்க்கவேண்டும்.

    இதனை மேற்கொள்ளாமல் 20 வயதுக்கு முன்பே பிரசவித்துவிடும் பெண்களுக்கு ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் ரத்தப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் உருவாகக்கூடும். பிரசவம் நடந்த உடனே அல்லது அடுத்த 24 மணிநேரத்திற்குள் ஏற்படக்கூடிய அசாதாரணமான ரத்தப்போக்கு சில நேரங்களில் அந்த பெண்களின் கருப்பையை நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமையை சிக்கலாக்கிவிடுகிறது.

    இளம் வயது கர்ப்பிணிகள் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும். குழந்தைகளின் எடை 2 கிலோவிற்கும் குறையாமல் இருக்கவேண்டும். எடைகுறைவாக பிறக்கும் குழந்தைகளை தொற்றுகளும், நோய்களும் தாக்கும் வாய்ப்பு அதிகம். எதிர்காலத்தில் அவர்களுக்கு உடல் வளர்ச்சி மற்றும் மனோவளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.

    இளம் வயது கர்ப்பிணிகள் பல்வேறுவிதமான சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இளம் வயதிலே காதலிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், வீட்டைவிட்டு வெளியேறிச் செல்கிறார்கள். பெற்றோர் தேடிவந்து தங்களை பிரித்துவிடக்கூடாது என்பதற்காக, அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். அதன் பின்புதான் அவர்களுக்கு அவசரப்பட்டுவிட்டதும், குடும்பத்தினர் யாருடைய அனுசரனை இல்லாமல் இருப்பதும் தெரிகிறது. அதனால் தவித்துப்போகும் அவர்கள் மீண்டும் குடும்பத்தினரின் அன்புக்கு ஏங்குகிறார்கள்.

    ‘தாய்மையடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்துவிட்டால், அந்த குழந்தை இரண்டு குடும்பத்தினையும் இணைக்கும் பாலமாகிவிடும்’ என்று உடனடியாக கர்ப்பிணியாகிவிடுகிறார்கள். ஆனால் அவர்களது அந்த செயல் மிகப்பெரிய தப்புக்கணக்காகிவிடுகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தை பிறந்த பின்பும் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் நிஜம்.
    Next Story
    ×