search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிரசவித்த தாய்மார்களுக்கு ஏற்படும் கலக்கம்
    X
    பிரசவித்த தாய்மார்களுக்கு ஏற்படும் கலக்கம்

    பிரசவித்த தாய்மார்களுக்கு ஏற்படும் கலக்கம்

    பிறக்கப்போகிற குழந்தையை எப்போது பார்ப்போம், என்று தாய் மனது ஏங்கித் தவிக்கும். பிரசவமானதும் இந்த மனநிலை அப்படியே தலைகீழாக மாறிவிடும்.
    பிறக்கப்போகிற குழந்தையை எப்போது பார்ப்போம், குழந்தை எப்படி இருக்கும், யாரின் சாயலில் இருக்கும்... இப்படி எல்லாம் தாய் மனது ஏங்கித் தவிக்கும். பிரசவமானதும் இந்த மனநிலை அப்படியே தலைகீழாக மாறிவிடும். பிரசவ வலி தந்த பயம், சிசேரியனாக இருந்தால் அந்தக் காயமும் வலியும் ஏற்படுத்திய வேதனை என எல்லாம் சேர்ந்துகொள்ளும்.

    ‘இனிமே நமக்கு பழைய, சாதாரண வாழ்க்கை சாத்தியமே இல்லையோ’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். குழந்தையை எப்படி வளர்க்கப்போகிறோம்‘ என்கிற மிரட்சி தலைதூக்கும்.

    பிறந்த குழந்தையை தூக்கவோ, கையாளவோ தெரியாமல் தவிப்பார்கள். பிரசவமான அடுத்தடுத்த நாட்களில் ஆரம்பிக்கும் இந்தக் கலக்கம், இரண்டு வாரங்கள்வரை நீடிக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் காரணம், குழந்தைபெற்ற பெண்ணின் உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்கள். பெரும்பாலும் பிரசவமான இரண்டு வாரங்களுக்குள் இந்த மனநிலை மாறிவிடும். அப்படி மாறாமல் தொடர்ந்தால்தான் பிரச்சினை.

    சில பெண்களுக்கு இந்த பாதிப்பு சில மாதங்கள்கூட நீடிக்கலாம். அதற்குப் பிறகும் தொடர்ந்தால் அதை ‘போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ்’ என்று சொல்வார்கள். அதாவது இந்த நிலையில் இந்த அறிகுறிகளுடன் தன்னையோ, தன் குழந்தையையோ துன்புறுத்திப் பார்க்கிற குரூர மனநிலையும் கூட சேர்ந்துகொள்ளலாம். இது அரிதான பாதிப்பு என்றாலும், அலட்சியம் கூடாது.

    கூட்டுக்குடும்பங்களில் வாழ்கிற பெண்களுக்கு இந்த பாதிப்பு வருவதில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். மாறிவிட்ட வாழ்க்கைச்சூழலில், இப்போதெல்லாம் பல பெண்கள் பிரசவத்துக்கு தாய் வீட்டுக்குப் போவதைக்கூடத் தவிர்த்து, தாமே சமாளித்துக்கொள்ள நினைக்கிறார்கள். உறவுகள் இல்லாத, உதவிக்கு ஆட்கள் இல்லாத குடும்பச் சூழலே, பிரசவத்துக்குப் பிறகான மனக்கலக்கத்துக்கு முக்கியக் காரணம். ஒற்றை குழந்தையாக வளர்ந்த பெண்களுக்கும் இந்த பாதிப்பு வரலாம். மனதளவில் திருமணத்துக்கு தயாராகாத இளவயதிலோ, திருமண வயதை கடந்தோ இல்லற வாழ்வில் இணைகிறவர்களுக்கும் வரலாம். முதல் பிரசவத்தில் மேற்கண்ட பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, அடுத்த பிரசவத்திலும் அந்த பாதிப்பு தொடரலாம்.

    தீவிர மன அழுத்தம், காரணம் புரியாத கவலை, தோல்வி மனப்பான்மை. எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற நிலை, குற்ற உணர்வு, எதற்கும் லாயக்கற்றவள் என்ற எண்ணம், எப்போதும் பதற்றத்துடனும் பயத்துடனும் இருப்பது, தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம், தூக்கத்தில் மிரண்டு எழுந்திருப்பது, குழந்தையை பற்றி அளவுக்கு அதிகமாக கவலைப்படுதல், குழந்தையை பார்த்துக்கொள்ள முடியுமா? என்கிற பயம், வீட்டில் தனியே இருக்கவும் வெளியே செல்லவும் பயப்படுதல், அழுகை, கோபம், யாரைப் பார்த்தாலும் எரிச்சல், தலைவலி, டென்ஷன், பசியின்மை, எந்த வேலையிலும் ஆர்வமின்மை என்பன போன்ற அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடரும் பட்சத்தில், தாய்மார்கள் உஷார் ஆக வேண்டியது அவசியம்.

    உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். உளவியல் நிபுணரிடமும் ஆலோசனை பெறலாம். மருத்துவர் அல்லது மனநல ஆலோசகர்களால் மட்டுமே இந்த அறிகுறிகளை மிகச் சரியாக இனம்காண முடியும். அவர்களிடம் இந்த பிரச்சினையைக் கண்டறிவதற்கென கேள்விகள் அடங்கிய பட்டியல் இருக்கும். அந்த பட்டியலில் உள்ள கேள்விகளுக்கு தாய்மார்கள் எப்படி பதிலளிக்கிறார்கள்? என்பதை வைத்து பிரச்சினையை உறுதி செய்வார்கள். 
    Next Story
    ×