search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாதுகாப்பான பிரசவம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்....
    X

    பாதுகாப்பான பிரசவம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்....

    பாதுகாப்பான பிரசவத்திற்கு, பிரசவம் பார்க்கப்படும் மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர், மயக்க மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் இருந்திட வேண்டும்.
    தமிழகத்தில் 99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இதனால் தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. பல்வேறு நன்மைகள் இருப்பதால் உலக நல நிறுவனம் மருத்துவமனை பிரசவத்தை தான் பரிந்துரைக்கிறது. இந்தியாவில் பேறுகாலத்தில் இறக்கும் தாய்மார்களில் 38 சதவீதத்தினர் பிரசவத்திற்குப் பிந்தைய ரத்த போக்கால்தான் இறக்கின்றனர். 1990-ம் ஆண்டில், உயிரோடு குழந்தை பிறந்த 1 லட்சம் பிரசவங்களில் 516 தாய்மார்கள் இறந்தனர்.

    அந்த இறப்பு விகிதம் 2016-ம் ஆண்டில் 130 ஆக குறைந்தது. அதற்கு மிக முக்கிய காரணம் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும் முறை அதிகரித்ததே. பிரசவத்தில், தாய் உயிர் பிழைத்தாலும் அவளின் ஏராளமான குழந்தைகள் இறந்தன. உதாரணத்திற்கு 16 குழந்தைகள் பிறந்தால் அதில் 8 குழந்தைகள் வரை இறந்தன. இவற்றில் எல்லாம் இன்றையை அறிவியல் தொழில் நுட்பம் மாற்றி உள்ளது. சமூகப் பொருளாதார வளர்ச்சியும் இம்மாற்றம் உருவாக காரணமாகியுள்ளது.

    கருப்பையில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் சில குறைபாட்டை கூட அறுவைசிகிச்சைகள் மூலம் கருப்பையிலேயே சரிசெய்ய முடியும். குறை பிரசவக் குழந்தைகள், எடைகுறைவான குழந்தைகளைக் கூட காப்பாற்றிவிடும் ஆற்றல் பெற்றுள்ளோம். நவீன கருவிகள், சிறப்பு மருத்துவர்கள், புதிய மருந்துகள், பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை நிபுணத்துவம் இதை சாத்தியப்படுத்தியுள்ளது. பெண் உறுப்பு வழியாக குழந்தை பிறப்பில் திடீரென சிக்கல் ஏற்பட்டாலோ, குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, நல்ல மருத்துவமனையில் இருந்தால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, தாய்-சேய் இருவரையும் காப்பாற்ற முடியும். பிரசவத்திற்குப் பிறகு சிக்கல்கள் ஏற்பட்டாலும் உடனடியாக சிகிச்சை வழங்கி காப்பாற்ற முடியும்.

    பிறக்கும் போது குழந்தைகளின் கழுத்தைச் நச்சுக் கொடி சுற்றியிருந்தாலோ, தலைக்கு பதில் கால் முதலில் வந்தாலோ, குறுக்கு வாக்கில் குழந்தை இடுப்பெலும்புக்குள் சிக்கிக் கொண்டாலோ, நஞ்சுக்கொடி முன் கூட்டியே கருப்பையில் இருந்து பிரிந்தாலோ, பிரசவத்திற்கு முந்தைய ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, அடிப்படை கட்டமைப்புகள் உள்ள மருத்துவமனையில் பிரசவம் நடந்தால் காப்பாற்றிவிடலாம்.

    வசதிகள் இல்லாத மருத்துவமனைகளில் காப்பாற்ற முடியாது. ஆனால், நமது மருத்துவமனைகளின் தரம் குறைவாக உள்ளது. இது கூவத்தூர் போன்ற சம்பவங்களை உருவாக்குகிறது. பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசியமான மருத்துவர்கள் இல்லை. செவிலியர்கள் இல்லை. 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குறைந்த பட்சம் 6 செவிலியர்கள் தேவை. ஆனால் தமிழகத்தில் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு செவிலியரோ அல்லது இரு செவிலியரோ மட்டுமே உள்ளனர்.

    பாதுகாப்பான பிரசவத்திற்கு, பிரசவம் பார்க்கப்படும் மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர், மயக்க மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் இருந்திட வேண்டும். எப்போதும் தயார் நிலையில் உள்ள அறுவை அரங்கம் இருக்க வேண்டும். ரத்த வங்கியோ அல்லது ரத்த சேமிப்பு வங்கியோ நிச்சயம் தேவை. அல்ட்ராசவுண்டு ஸ்கேனும், சி.டி.ஜி (குழந்தையின் இதய துடிப்பை கண்டு பிடிப்பது) கருவி மிகவும் அவசியம். இவை இல்லாமல் பிரசவம் பார்க்கும் நிலையில், பிரசவத்தின் போது திடீர் சிக்கல்கள் ஏற்பட்டால், தாயையும் சேயையும் காப்பாற்ற முடியாது.

    எந்த பிரசவமும், எந்த நேரத்திலும் சிக்கலாக மாற வாய்ப்புண்டு. தாய் சேய் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே, எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்க கட்டாயப்படுத்தக்கூடாது. இவ்வாறு கட்டாயப்படுத்துவதே கூவத்தூர் போன்ற கொடுமைகளுக்குக் காரணம். பிரசவம் பார்ப்பதற்கும், அறுவை சிகிச்சை செய்வதற்கும் தேவையான அவசியக் கட்டமைப்பு உள்ள மருத்துவ நிலையங்களில் மட்டுமே பிரசவம் பார்க்க வேண்டும். வட்டாரம் தோறும் அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று அல்லது நான்கு மையங்களை உருவாக்கிட வேண்டும். அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இதுவே கூவத்தூர் போன்ற நிகழ்வுகளை தடுத்திடும்.

    டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
    Next Story
    ×