search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    மழையில் குளிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லதா?
    X

    மழையில் குளிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லதா?

    • மழையில் நனைந்து உடல் நல பாதிப்புகளை எதிர்கொள்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.
    • மழைநீரில் அமிலத்தன்மை, அழுக்கு சேர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

    மழை காலம் வந்துவிட்டது. மழையின் அழகை ரசிப்பதோடு நின்றுவிடாமல் அதில் நனைந்து ஆனந்த குளியல் போடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி மழையில் குளிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லதா? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனெனில் மழையில் நனைந்து உடல் நல பாதிப்புகளை எதிர்கொள்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். மழையில் குளிப்பது நல்லதா? என்ற கேள்விக்கு டெல்லியை சேர்ந்த தோல் மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜாங்கிட் விளக்கம் அளிக்கிறார்.

    ''கோடை காலம் முடிவடைந்து தொடங்கும் முதல் மழை வெப்பத்தில் இருந்து ஆறுதல் அளிக்க உதவும். மழை பெய்யும் போது நனைவது, உளவியல் ரீதியாக நிம்மதியாக இருப்பது போன்ற உணர்வை தரும். இருப்பினும் காற்று மாசுபாடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற நச்சு ரசாயனங்கள், வாகன உமிழ்வுகள், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மழை குளியல் உகந்ததல்ல. ஏனெனில் மழைத்துளிகள் காற்றில் கலந்திருக்கும் ரசாயனங்கள், நச்சுக்களுடன் கலந்து சருமத்தை சேதப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. மழைநீரில் அமிலத்தன்மை, அழுக்கு சேர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

    உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்கள் அமில மழையில் குளித்தால் சருமம் சேதமடையக்கூடும். எனவே மழைக்காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதல் மழையில் குளிப்பது பொடுகு, முகப்பருவை போக்க உதவும் என்று பலரும் நம்புகிறார்கள். உண்மையில் மழை நீரில் அதிக மாசுக்கள் கலந்திருந்தால் முகப்பரு, சரும தொற்றுகள், சரும வெடிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்'' என்கிறார் டாக்டர் ஜாங்கிட்.

    மழையில் நனைந்த பிறகு சில சமயங்களில் சருமத்தில் அரிப்பு ஏற்படுவதை கவனித்திருக்கலாம். தலை முடியும் கடினமானதாக மாறும். மழை நீரில் பி.எச் அளவும் அதிகமாக இருப்பதால் சருமம் கடினத்தன்மை கொண்டதாக மாறக்கூடும். கூந்தலும் உலர்வடையக்கூடும். மழை நீரால் தக்கவைக்கப்படும் அதிக ஈரப்பதம் காரணமாக தலைமுடியில் பேன்கள் வளர்ச்சியும் அதிகரித்துவிடும்.

    மழைக்காலத்தில் பெண்கள் பின்பற்றவேண்டிய சில அழகு குறிப்புகள் பற்றி டாக்டர் ஜாங்கிட் விவரிக்கிறார்.

    "இந்தபருவமழையில், நீங்கள் எதிர்பாராதவிதமாக நனைந்தாலோ அல்லது மழையில் குளித்து மகிழ நினைத்தாலோ, வீட்டிற்கு வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் குளிக்க மறக்காதீர்கள். பேஸ் வாஷை பயன்படுத்தி சருமத்தில் படிந்திருக்கும் அசுத்தங்களை நீக்கிவிடுங்கள். சருமத்தின் மேற்பரப்புக்கு சோப்பையும், தலைமுடிக்கு ஷாம்பூவையும் பயன்படுத்துங்கள்.

    குளித்து முடித்ததும் கண்டிஷனரை பயன்படுத்த மறக்காதீர்கள். இது கூந்தலில் ஈரப்பதத்தை பாதுகாப்பதோடு மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். ஆடை அணிவதற்கு முன்பாக டவல் கொண்டு உடலை நன்கு உலர்த்துவது மழைக்கால நோய்த்தொற்றுகளை தவிர்க்க உதவும்'' என்கிறார்.

    Next Story
    ×