search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆடவருக்கு அழகு சேர்க்கும் அட்டகாசமான குர்த்தாக்கள்...
    X
    ஆடவருக்கு அழகு சேர்க்கும் அட்டகாசமான குர்த்தாக்கள்...

    ஆடவருக்கு அழகு சேர்க்கும் அட்டகாசமான குர்த்தாக்கள்...

    குட்டையான (ஷார்ட்) குர்த்தாக்களானது பேன்ட், ஜீன்ஸ் மற்றும் ஷார்ட்ஸ்ஸுடன் அணியப்படுவதால் அவை நவீன எத்னிக் ஆடை என்று சொல்லப்படுகின்றது.
    இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் பாரம்பரியமாக ஆண்கள் அணியும் ஆடைகளில் குர்த்தாக்களும் இடம் பெற்றுள்ளது என்பதை நாம் உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால் உணரமுடியும். வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பருவங்களில் காட்டன் குர்த்தாக்களும், பண்டிகை மற்றும் விசேஷங்களுக்கு அணிய பட்டு மற்றும் சில்க் காட்டன் போன்ற துணிகளால் வடிவமைக்கப்பட்ட குர்த்தாக்களும் அணிவதை விரும்புகிறார்கள்.

    குட்டையான (ஷார்ட்) குர்த்தாக்களானது பேன்ட், ஜீன்ஸ் மற்றும் ஷார்ட்ஸ்ஸுடன் அணியப்படுவதால் அவை நவீன எத்னிக் ஆடை என்று சொல்லப்படுகின்றது. இவை பட்டு வேஷ்டிகளுடன் அணியும் பொழுது பாரம்பரிய நவீனத் தோற்றத்தைத் தருகின்றது.

    ஷார்ட் குர்த்தாக்களானது ஆண்கள் அன்றாடம் அணிந்து கொள்ளவும், முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப விழாக்களுக்கும் அணிந்து கொள்ளும் ஆடையாகி விட்டது. குர்த்தாக்களின் பல வகையான வெட்டுகள் (கட்ஸ்), கை வடிவமைப்பு, கழுத்து வடிவமைப்பு, வண்ணங்கள், மாதிரிகள், அலங்கார வேலைப்பாடுகள் இவற்றை நம்முடைய விருப்பத்திற்கேற்பவும், அணிந்து கொள்ள வசதியாக இருப்பவற்றையும் தேர்ந்தெடுத்து அணியலாம்.

    தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அணிய பாரம்பரிய குர்த்தா மற்றும் பைஜாமாவானது மிகவும் ஏற்ற ஆடையாக இருக்கும். பிரைட்டான லினென் மற்றும் பாலியஸ்டர் துணிகளில் காலர் வைத்த கழுத்தில் பெரும்பாலும் சிவப்பு மற்றும் கருப்பு நூலில் செய்யப்படும் எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் வருபவை வெள்ளை பைஜாமா மற்றும் கை வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட காலணிகளுடன் அணிய ஏற்றவை. சீனக்கழுத்து (மாண்டரின் நெக்) வடிவமைப்பில் எம்பிராய்டரி வேலைப்பாடு செய்யப்பட்ட பிரகாசமான மஞ்சள் நிற முழுக்கை குர்த்தாக்களுடன் க்ரீம் நிறப் பைஜாமாவை சிங்கிள் டோ செருப்புகளுடன் அணியும்பொழுது அவை ஒரு நேர்த்தியான தோற்றத்தை தரும் என்பதில் ஐயமில்லை.

    தென்னிந்தியத் திருமணங்களில் ஷார்ட் குர்த்தாக்களை ஆண்கள் பிரதானமான உடையாக அணிகிறார்கள். பளபளப்பான ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், சிவப்பு, க்ரீம் போன்ற வண்ணங்களில் வரும் ஷார்ட் குர்த்தாக்களை வேஷ்டிகளுடன் அணிகிறார்கள். ஒரு கையில் பிரேசிலெட் மற்றொரு கையில் மெட்டல் ஸ்ட்ராப் வாட்ச் மற்றும் கழுத்தில் செயினுடன் இந்த வேஷ்டி குர்த்தாவானது அணியப்படும்பொழுது அவை ஒரு மிடுக்கான மற்றும் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன.

    கல்லூரி நாள் விழா மற்றும் அலுவலக விழாக்களுக்கு அணிய கட்டங்கள் மற்றும் பிரிண்ட்டுகள் செய்யப்பட்ட குர்த்தாக்களானது மிகவும் சரியான தேர்வாகவும் ஒரு கூலான தோற்றத்தை தருபவையாகவும் இருக்கும். லெதர் சாண்டல்கள் மற்றும் ஜீன்ஸ் பேன்ட்டுகளுடன் அணியும் பொழுது ஆணழகன் பட்டத்திற்கு ஏற்றவராக இருப்பீர்கள்.

    குட்டை கைகள், மாண்டரின் கழுத்துடன் வரும் பச்சை நிற ஷார்ட் குர்த்தாக்களை கருப்பு நிற க்ராப் பேன்ட் மற்றும் போட் ஷூக்களுடன் அணியும் பொழுது ஸ்டைலான தோற்றத்தைத் தருவதாக இவை இருக்கும். அதேபோல் வளைந்த கழுத்துகளுடன் வரும் பிரண்டட் குர்த்தாக்களுக்கு சாண்டல் மற்றும் குளிர்கண்ணாடிகள் அணியும் பொழுது அவை அதிகமான ஸ்டைலான தோற்றத்தை தரும்.

    இருபது வருடங்கள் பின்னோக்கி சென்றால் கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் அறிஞர்களால் மட்டுமே குர்த்தாக்கள் அணியப்பட்டு வந்தது. அதேபோல், 1960 மற்றும் 1970களில் தொளதொள குர்த்தாக்களை அன்றைய இளைஞர்கள் அணிவதை பெருமையாக நினைத்தார்கள் என்றே சொல்லலாம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் பல்வேறு வகையான துணிகளில் தைக்கப்பட்ட குர்த்தாக்களை முறையான (ஃபார்மல்) மற்றும் முறைசாரா (இன்ஃபார்மல்) நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்வது, தினந்தோறும் அணிந்து கொள்வது என வகைப்படுத்தி ஆண்கள் அணிந்து கொள்கிறார்கள்.

    அதுவும் அப்பழுக்கற்ற தரமான மற்றும் வரம்பற்ற பாணிகளில் ஆண்கள் அணிவதற்கேற்ற பல்வேறு அம்சங்களுடன் கலக்கலாக குர்த்தாக்கள் வந்திருக்கின்றன. நீளம், வெட்டு, அலங்காரம், கழுத்து வடிவமைப்பு மற்றும் பல்வேறு மாதிரிகளில் வந்திருக்கும் குர்த்தாக்களை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்து வாங்க இணையதளங்களில் தங்கள் விற்பனையை கடைகள் துவங்கியுள்ளன.

    தங்கநிற குர்த்தாக்கள், மணி வேலைப்பாடுகளுடன் வரும் குர்த்தாக்கள், சிக்கன்காரி, காந்த்தா மற்றும் சீக்வின்ஸ் போன்ற பல்வேறு வேலைப்பாடுகளுடன் வரும் குர்த்தாக்கள் பண்டிகைகள் மற்றும் விசேஷ நாட்களில் அணிய ஏற்றவையாகும்.

    திருமண வரவேற்புகளுக்கு அணிய கம்பீரமான டிசைனர் குர்த்தா செட்டுகள் ஏற்றவையாக இருக்கும். கருப்பு சுரிதாருடன் ஒரு அழகான ஊதா மற்றும் கருப்பு செல்ஃப் டிசைன் செய்யப்பட்ட மாண்டரின் காலருடன் வரும் குர்த்தாக்களுக்கு ஸ்லிப் ஆன் ஷுக்கள் மற்றும் ஜாக்கெட்டுகளுடன் அணியும் பொழுது அபாரமாக இருக்கின்றது என்று பாராட்டத் தோன்றும்.

    இப்பொழுது பிரபலமாகி வருபவை பதானி குர்த்தாக்களாகும். ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ்களுடன் பிரகாசமான சிவப்பு மற்றும் மஞ்சள் பதானி குர்த்தாக்களை நேரு ஜாக்கெட்டுகளுடன் அணிந்து மிகவும் க்ளாசிக் தோற்றத்தைத் தருவதாக இருக்கும். இவை சங்கீத் நிகழ்ச்சிகளுக்கு அணிய சிறந்த ஆடைகளாகும்.

    குஜராத்தி ஸ்டைல் குர்த்தாக்கள், பிளையிட் குர்த்தா மஃப்ளர் ஸ்டைல் குர்த்தா, பட்டன்டு ஸ்லீவ் குர்த்தா, கௌல் ட்ரேப்டு குர்த்தா, சைடு ஓபன் குர்த்தா, பாரம்பரிய ரா சில்க் குர்த்தா, ப்ரோகேட் குர்த்தா, எம்பிராய்டரி நெக் குர்த்தா, ஸ்ட்ரெயிட் குர்த்தா, காட்டன் குர்த்தா, சைட் பட்டன்களுடன் வரும் ஷேர்வானி குர்த்தா, லினென் ஷார்ட் குர்த்தா, பாகிஸ்தானி குர்த்தா, மாண்டரின் காலர்களுடன் வரும் லாங் குர்த்தா, பிரிண்டட் குர்த்தா, எம்பிராய்டர்டு ஜோத்புரி குர்த்தா என்று குர்த்தாக்களின் வகைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
    Next Story
    ×