search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காபியை அதிகமாக பருகினால் முகப்பரு வருமா?
    X
    காபியை அதிகமாக பருகினால் முகப்பரு வருமா?

    காபியை அதிகமாக பருகினால் முகப்பரு வருமா?

    மாசு மட்டுமின்றி உணவுப்பழக்கமும் முகப்பருக்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. காபியை அதிகமாக பருகினால் கூட முகப்பரு பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
    புள்ளிகள், வடுக்கள், தழும்புகள் போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லாத சருமத்தைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முகப்பருமுதல் எதிரியாக அமைந்து விடுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் அழுக்கு முகத்தில் படர்வது முகப்பருக்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன. மாசு மட்டுமின்றி உணவுப்பழக்கமும் முகப்பருக்கள் தோன்றுவதற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது. பால் பொருட்கள், பிரெட்டுகள், காரமான மற்றும் எண்ணெய்யில் வறுத்த, பொரித்த உணவுகள் உள்பட பலதரப்பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும் முகப்பருக்கள் தோன்றும். காபியை அதிகமாக பருகினால் கூட முகப்பரு பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

    இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா கூறுகையில், “ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மைதான் முகப்பருக்கள் தோன்றுவதற்கு அடிப்படை காரணியாக அமைந்திருக்கின்றன. காபியை அதிகமாக பருகும் பழக்கம் கொண் டவர்களுக்கு முகப்பரு வருவதற்கு வாய்ப்புள்ளது. காபியில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை தூண்டிவிடுகிறது. அவை தேவையற்ற கலோரிகளை உடலில் சேர்வதற்கு வழிவகுப்பதோடு முகப்பருகள் தோன்றுவதற்கும் காரணமாகிவிடுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு அதிகம் கொண்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது. காய்கறிகள், பழங்களை உட்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு உதவும்” என்கிறார்.

    “அதிகமான அளவு காபி பருகுவதும், போதுமான அளவு உணவு உட்கொள்ளாததும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அப்போது உடலில் உள்ள அமிலத்தின் அளவு அதிகமாகிவிடும். அதாவது உடலில் அமிலத்தின் அளவு எவ்வளவு அதிகரிக்கிறதோ அதற்கேற்ப நீரிழப்பு ஏற்படும். காபியை அதிகமாக உட்கொள்ளும்போது அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் நீரில் கரையக்கூடிய தாதுக்கள் உடலில் இருந்து வெளியேறும். இதன் விளைவாகத்தான் நீரிழப்பு ஏற்படுகிறது. அத்துடன் அதிக காபி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியாகும். அப்போது இயல்பாகவே உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் போவது கூட முகப்பருவுக்கு காரணமாக அமையும்” என்கிறார் மற்றொரு ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா.

    முகப்பரு பாதிப்புக்கு தொடர்ந்து ஆளாகுபவர்கள் காபி அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.
    Next Story
    ×