search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும்
    X

    கூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும்

    டயட் என்கிற பெயரில் கொழுப்புச்சத்தை அறவே தவிர்ப்பவர்களுக்கு கூந்தல் நுனிப் பிளவு பிரச்சனை எளிதில் பாதிக்கும். கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதமும் வழுவழுப்புத் தன்மையும் இருந்தால்தான் அது வறண்டு போகாமலும் வெடிக்காமலும் இருக்கும்.
    பெரும்பாலானவர்களின் முடியை உற்றுப் பார்த்தால் அது உடைந்து, நுனிகளில் வெடித்து, உயிரற்றுக் காணப்படுவது தெரியும். கூந்தல் நுனிப் பிளவு என்பது மிகவும் பரவலான ஒரு பிரச்சனை. அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.

    காரணங்கள்...

    * ஊட்டச்சத்தில்லாத உணவு.

    * முடியை பின்னோக்கி வாருவது, ஈரமாக இருக்கும் போது வாருவது (ஈரத்தில் சீவும் போது, முடியானது 25 சதவிகிதம் அதிகமாக இழுக்கப்படவும் உடையவும் கூடும்), நிறைய நிறைய பிரஷ் செய்வது.

    * கடுமையான கெமிக்கல் சிகிச்சைகள்... சரியான முறையில் செய்யப்படாவிட்டாலோ, சிகிச்சைக்குப் பிறகான முறையான பராமரிப்பு இல்லாவிட்டாலோ கூந்தல் நுனிகள் வெடிக்கும்.

    * கூந்தலை உலர்த்த டிரையர் உபயோகிப்பவர்களுக்கு நுனிகள் அதிகம் வெடிக்கும். முடிந்தவரை இயற்கையான முறையில் உலரச் செய்வதே நல்லது. முடியாத
    பட்சத்தில் டிரையரின் சூட்டைத் தணித்தும், சற்றே தள்ளி வைத்தும் உபயோகிக்கலாம்.

    * ஈரமான கூந்தலை டவல் கொண்டு பரபரவென அழுத்தித் தேய்ப்பதும் இதற்கொரு காரணம்.

    தீர்வுகள்

    * டயட் என்கிற பெயரில் கொழுப்புச்சத்தை அறவே தவிர்ப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை எளிதில் பாதிக்கும். கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதமும் வழுவழுப்புத் தன்மையும் இருந்தால்தான் அது வறண்டு போகாமலும் வெடிக்காமலும் இருக்கும். எனவே காய்கறிகள், பழங்கள், ஆலிவ் ஆயில், மீன், முட்டை மற்றும் முளைகட்டிய பயறு போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * எலாஸ்டிக் ஹேர் பேண்டுகள் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

    * தலைக்குக் குளித்ததும், டவலால் மென்மையாகத் துடைத்து ஈரம் போனதும், சிலிகான் கலந்த சீரத்தை முடியில் தடவிக் கொண்டு, அகலமான பற்கள் கொண்ட சீப்பினால் வாரி விடலாம்.

    * டூவீலரிலோ, பேருந்து மற்றும் ரயிலில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தபடியோ பயணம் செய்கிற போது, கூந்தலை விரித்து விடாமல், ஒரு துணியால் மூடியபடி கட்டிக்கொள்ள வேண்டியது அவசியம். இதையெல்லாம் தாண்டியும் கூந்தல் வெடிப்பும் நுனிப் பிளவும் சரியாகாவிட்டால், ட்ரைகாலஜிஸ்டை அணுகி, சரியான காரணத்தையும், அதற்கான தீர்வையும் கண்டறியலாம்.

    நன்கு பழுத்த அவகடோ (பட்டர் ஃப்ரூட்) - பாதி, நன்கு கனிந்த வாழைப்பழம் - பாதி, 1 முட்டை, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் - எல்லாவற்றையும் நன்கு கலந்து அடிக்கவும். கூந்தலின் மேல் பாகம் தொடங்கி நுனி வரை தடவி, 1 மணி நேரம் ஊற வைத்து அலசவும்.

    * புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளவும். பொரித்த மற்றும் இனிப்பு சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவும்.

    * 4 வாரங்களுக்கு ஒரு முறை கூந்தலின் நுனிப் பகுதிகளை வெட்டி விடவும். இது கூந்தல் நுனிப் பிளவுகளை அதிகரிக்காமல் காக்கும்.

    * தினமும் ஷாம்பு போட்டுக் குளிப்பதைத் தவிர்க்கவும்.

    * கூந்தலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு ரத்த ஓட்டம் அவசியம். எனவே வாரம் ஒரு முறையாவது கூந்தலின் வேர்க்கால்களை நன்கு மசாஜ் செய்து விடவும். அதிக எண்ணெய் பசையான கூந்தல் உள்ளவர்கள் மசாஜ் செய்வதைத் தவிர்க்கவும்.

    * கூந்தலின் வேர் பகுதிகள்தான் சீபம் என்கிற எண்ணெய் பசையைச் சுரப்பவை. எனவே அந்தப் பகுதிகளுக்கு போதுமான கண்டிஷனிங் கிடைத்து விடும். கூந்தலின் நுனிப் பகுதிகளில் கண்டிஷனர் தடவி, காத்திருந்து அலச வேண்டியது முக்கியம்.

    * உடைந்த கூந்தலில் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயிலை தடவி, மேலே ஒரு பிளாஸ்டிக் கவரால் சுற்றிக் கொண்டு எவ்வளவு நேரம் முடியுமோ (முடிந்தால் இரவு முழுக்கக் கூட) இருந்துவிட்டு, பிறகு அலசலாம்.
    Next Story
    ×