என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    உருளைக்கிழங்கை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான ஆலு - 65 செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 2
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    மிளகாய் வற்றல் - 4
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    பூண்டு - 10 பல்
    இஞ்சி - அரை அங்குலத் துண்டு
    தயிர் - கால் கப்
    மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
    சோள மாவு - ஒன்றரை மேசைக்கரண்டி
    உப்பு - கால் தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - அரை ஸ்பூன்
    எண்ணெய் - முக்கால் கப்


    செய்முறை :

    * உருளைக்கிழங்கை பாதியளவு வேக வைத்து சதுரமான துண்டுகளான வெட்டிக்கொள்ளவும்.

    * பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.

    * இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.

    * பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.

    * கொத்தமல்லித் தழையை ஆய்ந்து தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.

    * மைதா மாவு மற்றும் சோள மாவு இரண்டையும் தனித்தனியாக சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

    * மிக்ஸியில் மிளகாய் வற்றல், நறுக்கின இஞ்சி, பூண்டு போட்டு ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைகிழங்கு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், பேக்கிங் பவுடர், உப்பு, அரைத்த விழுது போட்டு உருளைக்கிழங்குடன் விழுது ஒன்றாக சேரும் படி நன்கு பிரட்டி விடவும்.

    * பிரட்டிய பிறகு அதில் தயிர், சோள மாவு, மைதா மாவு போட்டு நன்றாக பிரட்டி வைத்து, அதை அரைமணி நேரம் ஊற விடவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் உருளைக்கிழங்கை எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு சிவந்து பொன்னிறம் ஆனதும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும்.

    * மற்றொரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, போட்டு தாளித்த பின் அதில் வறுத்த  உருளைக்கிழங்கை போட்டு ஒரு நிமிடம் பிரட்டி இறக்கி வைக்கவும்.

    * சூடான ஆலு 65 தயார். இது ஒரு மாலை நேர சிற்றுண்டி. இதே போல் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மழைக்காலங்களில் வீட்டில் இருக்கும் போது செய்து சாப்பிட சுவையான எளிமையாக செய்யக்கூடிய மெது போண்டா செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்,
    டால்டா - 1 டேபிள்ஸ்பூன்,
    வெங்காயம் - 2
    இஞ்சி - 1 துண்டு,
    காய்ந்த மிளகாய் - 3,
    கறிவேப்பிலை - சிறிது,
    முந்திரிப்பருப்பு - 6,
    ஆப்ப சோடா - கால் டீஸ்பூன்,
    உப்பு - ருசிக்கேற்ப,
    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    * .மிளகாய், வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * டால்டா, உப்பு, ஆப்ப சோடா மூன்றையும் ஒன்றாக குழைத்துக்கொள்ளுங்கள்.

    * அதனுடன் கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு சேர்த்து பிசறுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று தளர பிசையுங்கள்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறுங்கள்.

    * சூப்பரான மெது போண்டா ரெடி.

    * திருமணங்களில் இடம் பெறும் ஸ்பெஷல் அயிட்டம் இது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மாலையில் மிகவும் பிடித்தமான கச்சோரி செய்து கொடுக்கலாம். இந்த கச்சேரியை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - அரை கப்
    மைதா மாவு - அரை கப்
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
    ஆப்பசோடா - ஒரு சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு

    பூரணம் செய்ய :

    பச்சைப்பட்டாணி - ஒரு கப்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
    சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
    சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
    சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    மாங்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கடலைமாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

    செய்முறை :

    * பச்சைப்பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, ஆப்பசோடா, சிறிது எண்ணெய் சேர்த்து பிசறி தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு கெட்டியாகப் பிசைந்து மாவை ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், வேகவைத்து மசித்த பச்சைப்பட்டாணியைச் சேர்க்கவும்.

    * இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், சோம்புத்தூள், சாட் மசாலாத்தூள், மாங்காய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கலக்கவும். பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் கடலைமாவை கலவையில் தூவி கிளறி இறக்கினால், உதிரியான பூரணம் தயார்.

    * கச்சோரிக்கு பிசைந்த மாவை திரட்டி, வட்டமாகத் தேய்க்கவும். இதன் உள்ளே பூரணம் வைத்து மூடி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான மாலைநேர ஸ்நாக்ஸ் கச்சோரி தயார்.

    குறிப்பு : கச்சோரியின் உள்ளே வைக்கப்படும் பூரணம் உங்கள் விருப்பப்படி காய்கறிகளாகவோ அல்லது முளைவிட்ட பயறு, கறுப்பு உளுந்து என வித்தியாசமாக வைத்தோ பொரித்தெடுத்துப் பரிமாறலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு விருப்பமான சீஸை வைத்து சூப்பரான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரைப்பதற்கு :

    புழுங்கல் அரிசி - 4 கப்,
    முழு உளுந்து - 1 கப்,
    துவரம் பருப்பு - கால் கப்,
    வெந்தயம் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    ஊத்தப்பத்துக்கு :

    வெங்காயம் - 2
    ப.மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 6 பல்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    துருவிய சீஸ் - 1 கப்
    எண்ணெய் - தேவைக்கு
    கேரட் - 3

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    * கேரட், இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
     
    * அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு முதல் நாளே அரைத்து தேவையான உப்புக் கலந்து, புளிக்க விடவும்.

    * தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு குழிக் கரண்டியால் கனமாக தோசை வார்த்து, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கேரட் தூவவும்.

    * கடைசியாக துருவிய சீஸை தூவி சுற்றி எண்ணெயை விட்டு, மூடி வைத்து, குறைந்த தணலில் வேக விடவும்.

    * வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    * சூப்பரான கேரட் - சீஸ் ஊத்தப்பம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு முட்டையை ஆம்லேட், பொரியல் செய்து கொடுத்திருப்போம். சற்று வித்தியாசமாக முட்டை சப்பாத்தி ரோல் செய்து கொடுத்து அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 4
    சப்பாத்தி - 6
    பெரிய வெங்காயம் - 3
    பச்சை மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளறி உதிரியாக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும்.

    * அடுத்து செய்து வைத்துள்ள சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு சூடானவுடன் இந்த முட்டை பொரியலை சிறிது நடுவில் வைத்து சுருட்டவும். இதே போல் அனைத்தையும் செய்து வைக்கவும்.  

    * இப்போது சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைக்கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி வடை போல் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புழுங்கல் அரிசி - கால் கப்
    உளுந்து - அரை கப்
    ஆய்ந்த முருங்கை இலை - 1 கைப்பிடி
    எள் - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவைக்கு
    பெரிய வெங்காயம் - 1
    பச்சைமிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * உளுந்து, அரிசியை ஊற வைத்து, ஊறியதும் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    * முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரைத்த மாவில் முருங்கை இலை, உப்பு, எள், ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி, போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சுவையான முருங்கைக்கீரை வடை ரெடி.

    * இது இரும்புச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்தது. கீரை சாப்பிடாத குழந்தைகள்கூட விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை வேளையில் காப்பி, டீயுடன் ஏதேனும் காரமாக சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டால், சூப்பரான ஸ்நாக்ஸ் காராபூந்தியை செய்து சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    வேர்க்கடலை - அரை கப்,
    முந்திரி - தேவைக்கு,
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை :

    * ஒரு பெரிய பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, நன்கு அடர்த்தியாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். அவ்வாறு கலக்கும் போது மாவுக் கலவையானது மிகவும் மென்மையாகவும், லேசான அடர்த்தியிலும் இருக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூந்திக் கரண்டியை (சிறுசிறு துளைகள் உள்ள கரண்டி) எடுத்துக் கொண்டு, அந்த கரண்டியை எண்ணெயின் மேற்புறத்தில் வைத்து பிடித்துக் கொண்டு, அந்த கரண்டியில் கடலை மாவுக் கலவையை ஊற்ற வேண்டும்.
     
    * அவ்வாறு ஊற்றும் போது அதிலிருந்து மாவானது, துளைகள் வழியாக எண்ணெயில் விழும், அதனை பொன்னிறமாக பொரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். இதேப் போன்று அனைத்து மாவையும் ஊற்றி, பூந்திகளாக செய்துக் கொள்ளவும்.

    * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வேர்க்கடலை, முந்திரி, கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு பொரித்து, பூந்தியுடன் சேர்த்து, கிளற வேண்டும்.

    * இப்போது சுவையான மொறுமொறு காராபூந்தி ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையான சூப்பரான காலிபிளவர் - பட்டாணி குருமாவை செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    காலிபிளவர் - 1 சிறியது
    பச்சை பட்டாணி - 50 கிராம்
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிது

    வறுத்து பொடிக்க :

    பட்டை - 1 இன்ச் அளவு
    கிராம்பு - 2
    சோம்பு - 1 தேக்கரண்டி

    தாளிக்க :

    எண்ணெய் - தேவைக்கு
    பட்டை - 1/2 இன்ச் அளவு
    கிராம்பு - 1
    பெரிய வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது  

    அரைக்க :

    தேங்காய் துருவல் - அரை கப்

    செய்முறை :

    * பச்சை பட்டாணியை 4 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

    * வெந்நீரில் முழு காலிபிளவரை போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து காலிபிளவரை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.   

    * கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு மூன்றையும் பொன்னிறமாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

    * தேங்காயையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து  எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமானதும் பட்டை கிராம்பு பொடி, வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.  

    * தக்காளி நன்கு சுருள வதங்கியதும் காலிபிளவருடன் ஒரு கை தண்ணீர் தெளித்து வேகும் வரை நன்கு வதக்கவும்.

    * காலிபிளவர் நன்கு வெந்ததும் வேக வைத்துள்ள பட்டாணி, மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி 2 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.  

    * அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    * குருமா திக்கானதும் அதில் கொத்தமல்லித் தழையை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

    * சுவையான காலிபிளவர் - பட்டாணி குருமா ரெடி.

    * இது சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் சூடாக ஸ்நாக்ஸ் சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும். இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    உருளைக்கிழங்கு - 4
    பாசிப்பருப்பு - கால் கப்
    அரிசி மாவு - 3 ஸ்பூன் (வறுத்தது)
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் -2
    இஞ்சி - சிறிய துண்டு
    சீரகம் - 1 ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    எண்ணெய்  - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை எடுத்து விட்டு மசித்து கொள்ளவும்.

    * வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * இஞ்சியை துருவி வைத்து கொள்ளவும்.

    * பாசிப்பருப்பை நன்றாக ஊற வைத்து கழுவி மிக்கியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் அரைத்த பாசிப்பருப்பு, மசிந்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, அரிசி மாவு, கொத்தமல்லி, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பதமாக கலந்து சிறிய உருண்டையாக உருட்டி வைத்து கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.

    * மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு போண்டா தயார்.

    * இந்த உருளைக்கிழங்கு போண்டாவை மாலை நேரத்தில் புதினா சட்னி, தேங்காய் சட்னியோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகு புட்டு மிகவும் சத்தானது மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். இப்போது அந்த சத்தான கேழ்வரகு புட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
    தேவையானப் பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்
    சர்க்கரை - 1/4 கப் அல்லது தேவைக்கேற்றவாறு
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்
    ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
    நெய் - 2 முதல் 3 டீஸ்பூன் வரை
    உப்பு - ஓரிரண்டு சிட்டிகை

    செய்முறை :

    * கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பையும் போட்டு அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும். மாவைக் கையில் எடுத்து பிடித்தால் பிடிக்கும் படியும், கையிலிருந்து பாத்திரத்தில் போட்டால் உதிரும் படியும் இருக்க வேண்டும்.

    * ஒரு சுத்தமான துணியை எடுத்து, தண்ணீரில் அலசிப் பிழிந்துக் கொள்ளவும். பிசறி வைத்துள்ள கேழ்வரகு மாவை இந்த ஈரத்துணியில் போட்டு, லூசாக மூட்டை போல் முடிந்துக் கொள்ளவும். இதை இட்லி தட்டின் மேல் வைத்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    * வெந்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.

    * பின்னர் அதில் நெய்யை உருக்கி ஊற்றவும். அத்துடன் சர்க்கரை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    குறிப்பு: சர்க்கரைக்குப்பதில், வெல்லத்தைப் பொடித்தும் சேர்க்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த வெள்ளை பணியாரத்தை செய்வது மிகவும் சுலபம். மாலையில் சூடாக சாப்பிட சுவையான வெள்ளை பணியாரம் செய்து எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    உளுந்து - 4 டேபிள்ஸ்பூன்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * அரிசி, உளுந்தை சேர்த்து சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவிடவும்.

    * நன்றாக ஊறிய பிறகு உப்பு, சர்க்கரை சேர்த்து நைஸாக அரைக்கவும் (தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்).

    * வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வட்ட வடிவ அகலக் கரண்டியால் மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும். இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.

    * சுவையான செட்டிநாடு வெள்ளை பணியாரம் ரெடி.

    குறிப்பு:  மாவு புளிக்கக் கூடாது. அரைத்த 10 நிமிடத்தில் செய்யவும். இதற்கு கார சட்னி சூப்பர் காம்பினேஷன்!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டையை வைத்து வித்தியாசமாக சூப்பரான முட்டை அடை குழம்பை நாளை (சன்டே) செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 4
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகு தூள் - அரை ஸ்பூன்
    உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு
    கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
    மல்லித்தூள் - அரை ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
    முந்திரி - 10
    கடுகு - அரை ஸ்பூன்
    சீரகம் - அரை ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தக்காளியை சுடுதண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு ஆறியதும் தோலை உரித்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * முந்திரி, தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் முட்டை, மிளகு தூள், சிறிது மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    * நன்றாக அடித்த முட்டை கலவையை ஓவன் என்றால் 5 நிமிடம் அல்லது பிரஷர் குக்கர் என்றால் 10 நிமிடம் வைத்து வேக வைக்கவும். வெந்தவுடன் ஆறி வைத்து சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.



    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    * அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை போட்டு நன்றாக கிளறவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த வைத்துள்ள தேங்காய் விழுது, 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

    * கிரேவி நன்றாக கொதித்து கெட்டியாகி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.

    * கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * சுவையான முட்டை அடை குழம்பு ரெடி.

    குறிப்பு : முட்டையை குழிப்பணியார சட்டியில் ஊற்றி பணியாரங்களாக செய்து குழம்பில் போட்டும் செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×