search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    பிரியாணியை எந்த முறையில் சாப்பிட வேண்டும்?
    X

    பிரியாணியை எந்த முறையில் சாப்பிட வேண்டும்?

    • விருந்துகளில் நிச்சயம் தவிர்க்க முடியாத உணவாக பிரியாணி இருக்கிறது.
    • பிரியாணியோடு தயிர்ப்பச்சடி சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

    சைவம், அசைவம் என எந்த வகை உணவாக இருந்தாலும், 'பிரியாணி' என்றால் கூடுதல் ஸ்பெஷல்தான். இந்தியர்களின் விருந்துகளில் நிச்சயம் தவிர்க்க முடியாத உணவாக பிரியாணி இருக்கிறது. அந்த அளவிற்கு மக்களின் நாடி நரம்புகளில் பிரியாணியின் சுவை ஊறிப்போயிருக்கிறது.

    கோடைகாலத்தில் நிச்சயம் பிரியாணி எடுத்துக்கொள்ளும் அளவையும், காரத்தின் அளவையும் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஏற்கெனவே வியர்வை மூலமாக உடலில் இருக்கும் மினரல்ஸ் வெளியேறிவிடும். இந்நிலையில் அதிகம் காரம் சாப்பிட்டால், உடலில் அதிக எரிச்சல் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. குளிர்காலங்களில் காரம், மசாலாவும் நிறைந்த பொருள்களைச் சாப்பிடலாம். அதிலும் கட்டுப்பாடு அவசியம்.

    நாடெங்கிலும் நூற்றுக்கணக்கான பிரியாணிகள் இருக்கின்றன. சிலர் தக்காளி சேர்த்துச் செய்வார்கள். சிலர் தக்காளி இல்லாமல் செய்வார்கள். இடத்திற்கு இடம் அவர்கள் உபயோகிக்கும் மசாலாப் பொருள்கள், அரிசி போன்றவை மாறுபடும். செட்டிநாடு உணவு வகைகளில் சோம்பு இருக்கும்.

    ஆனால், வேறு சில பிரியாணி வகைகளில் சோம்பு இருக்காது. இப்படி நிறைய மாற்றங்கள் கொண்டுவந்து, ஒரிஜினல் பிரியாணியின் சுவை என்ன என்பதே மறந்துவிட்டது. எதுவாக இருந்தாலும், நம் உடல் நலத்திற்கு எது சிறந்ததோ அதைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது சிறந்தது.

    ஒவ்வொரு அரிசியிலும் வெவ்வேறு நற்குணங்கள் இருக்கின்றன. பாசுமதி அரிசி வகைகளிலேயே அன்பிளீச்சுடு ஹை-ஃபைபர் (Unbleached High-Fibre) பாசுமதி அரிசி தற்போது சந்தையில் அதிகம் கிடைக்கிறது. அதிலும், பிரவுன் நிற அரிசியில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. மெதுவாக குளுகோஸின் அளவை ரத்தத்தில் உயர்த்துவதில் பச்சரிசியைவிட பாசுமதி அரிசிக்கு சக்தி உண்டு.


    இதன் காரணமாகவே, பாசுமதி அரிசியை தினமும் சாப்பிடுபவர்களும் உண்டு. அரிசியைத் தேர்ந்தெடுக்கும்போதும் நார்ச்சத்து இருப்பதாகத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது நாம் சேர்க்கும் காய்கறிகளில் நார்ச்சத்து இருக்கும்படி பார்த்துச் சேர்க்கலாம். இப்படி சமச்சீர் செய்வதன்மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

    பிரியாணி என்றதும் சிலர் சிறிதும் இடைவெளியில்லாமல் அவசர அவசரமாகச் சாப்பிடுவார்கள். இன்னும் சிலரோ, மூன்று வேளையும் பிரியாணி கொடுத்தாலும் சளைக்காமல் சாப்பிடுவார்கள். ஆனால், அப்படிச் செய்வது உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும். எந்த உணவையும் மெதுவாக ரசித்து உண்ண வேண்டும்.

    இப்படிச் செய்வதால், குறைவான அளவு சாப்பிட்டாலே நிறைவாக இருக்கும். சிலர், காரமாக இருக்கிறது என்று சாப்பிடுவதற்கு இடையே தண்ணீர் குடிப்பார்கள். இது, ஜீரண சக்தியைக் குறைக்கும். சாப்பிட்டு முடிக்கும்வரை தண்ணீர் குடிக்கத் தேவையில்லாத அளவுக்கு பிரியாணியில் காரம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பிரியாணியோடு தயிர்ப்பச்சடி சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால், தயிரில் புரோ-பயாட்டிக் உள்ளது. இது, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். ஆனால், கடைகளில் வாங்கும் தயிரில் எந்த அளவிற்கு புரோ-பயாட்டிக் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. சுத்தமான வீட்டுத் தயிரில் பச்சடி செய்து பிரியாணியோடு சாப்பிடுவது சிறந்தது. இதில்தான் ஜீரண சக்தியை மேம்படுத்தும் நன்மை தரும் நுண்ணுயிர்கள் உள்ளன.

    Next Story
    ×