search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சிறுநீரக கற்களுக்கு லேசர் சிகிச்சை சிறப்பானது
    X

    சிறுநீரக கற்களுக்கு லேசர் சிகிச்சை சிறப்பானது

    • காபி, டீ அதிகம் அருந்துபவர்களுக்கும் பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும்.
    • சிறுநீரகத்திற்குள் ஏற்படும் கற்களால் ஒரு வலியும் இருக்காது.

    காட்பாடி இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கர், சிறுநீரக கற்கள் எதனால் உண்டாகிறது, அதற்கு அளிக்கப்படும் அதிநவீன லேசர் சிகிச்சை குறித்து கூறியதாவது:-

    சிறுநீரகத்தில் ஒரு கோளாறு என்றால் அது சிறுநீரக கற்களால் ஏற்படும் வியாதியாக இருக்கும். இந்த சிறுநீரக கற்கள் ஒருவருக்கு உருவாகி இருந்தால் அந்த நபருக்கு திடீரென்று வயிற்று வலி, வாந்தி, உடலில் அதிக வேர்வை வருதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஆகியவை ஏற்படும்.

    அதிகம் தண்ணீர் அருந்தாமல் இருப்பதாலும், வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும், துரித உணவு சாப்பிடுபவர்களுக்கும், அதிக தூரம் பிரயாணம் செய்பவர்களுக்கும் சிறுநீரக கற்கள் உண்டாகும். அதிக வாகன ஓட்டிகளுக்கும், காபி, டீ அதிகம் அருந்துபவர்களுக்கும் பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும்.

    சிறுநீரக கற்களின் அறிகுறிகள்

    சிறுநீரகத்தை மூன்று பகுதியாக பிரிக்கலாம். சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீரகப்பை ஆகியவை ஆகும். இந்த 3 பகுதியில் எந்தப் பகுதியிலும் சிறுநீரக கற்கள் ஏற்படலாம். ஆனால் அந்தந்த இடத்தில் ஏற்படும் வலிக்கான அறிகுறிகள் வேறுபடும்.

    உதாரணத்திற்கு சிறுநீரகத்திற்குள் ஏற்படும் கற்களால் ஒரு வலியும் இருக்காது. 3 சென்டிமீட்டர் அளவுக்கு கல் இருந்தாலும் அது வலியை தராது. ஆனால் அதுவே சிறுநீர் குழாயில் ஒரு சிறிய அளவு 4 மில்லி மீட்டர் அளவு கற்கள் அடைப்பு ஏற்பட்டாலும் அதிக வயிற்று வலி, வேதனை, வாந்தி, சிறுநீரக எரிச்சல், காய்ச்சல் வருதல் ஆகியவை ஏற்படும். இதில் மூன்றாவது வகை, சிறுநீரகப் பையில் ஏற்படும் கற்களால் சிறுநீர் போகும் போது எரிச்சல், ரத்தம் கலந்த சிறுநீர் கழித்தல், சிறுநீரில் கடுப்பு ஏற்படுதல், சிறுநீர் கழிக்கும் போது கஷ்டப்பட்டு கழித்தல், சொட்டு சிறுநீர் ஆகியவை அறிகுறிகள் ஆகும். இதனால் வெவ்வேறு பகுதிகளில் கற்களினால் ஏற்படும் அறிகுறிகள் வித்தியாசப்படும்.

    லேசர் சிகிச்சை

    பழைய முறையில் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் சிறுநீர் பையில் கற்கள் இருந்தாலும் சிறுநீர் குழாயில் கற்கள் இருந்தாலும் அறுவை சிகிச்சை முறையில் மட்டுமே கற்கள் அகற்றப்பட்டது.

    ஆனால் இப்போது அறுவை சிகிச்சை இல்லாமல் வயிற்றுப் பகுதியில் ஒரு கீறலும் இல்லாமல், லேசர் சிகிச்சையின் மூலம் கற்களை கரைத்து சிறுநீர் வழியாக ஸ்டண்ட் வைத்து அதை வெளியேற்றலாம்.

    சிறுநீரக குழாயில் மற்றும் சிறுநீரகத்தில் செய்யப்படும் லேசர் முறையால் கற்களை சிறு, சிறு துகள்களாக உடைப்பார்கள் அந்த துகள்கள் வெளியேறுவதற்கும் சிறுநீரக குழாயில் அடைப்பு ஏற்படாமல் ஒரு வீக்கம் வருவதை தடுப்பதற்காக இந்த ஸ்டண்ட் வைக்கப்படுகிறது. இது பொதுவாக 15 நாட்களில் இருந்து 25 நாட்களுக்குள் அகற்றப்படும்.

    பழைய அறுவை சிகிச்சை முறையில் 5 நாட்கள் முதல் 7 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டி இருந்தது. தற்போது லேசர் சிகிச்சை செய்பவர்கள் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்தில் வீடு திரும்பலாம்.

    திரும்ப கற்கள் உண்டாகுமா?.

    சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு கால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை ரத்தத்தின் அளவில் அதிகமாக இருப்பதால் இது போன்ற கற்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆதலால் ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு, கால்சியம் அளவு எதனால் அதிகம் இருக்கிறது என்பதை ரத்த பரிசோதனை செய்து அதற்கு வேண்டிய சிகிச்சை முறையை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர்களுடைய உணவு பழக்க வழக்கங்கள், நீர் அருந்துதல், துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு செய்து நம்முடைய வாழ்க்கை முறையை சிறிது மாற்றிக் கொண்டால், சிறுநீரக கற்களில் இருந்து பூரண விடுதலை பெறலாம் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×