என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    ரத்த அழுத்தம் பரிசோதனை... அவசியத்தை அறிவோமா?
    X

    ரத்த அழுத்தம் பரிசோதனை... அவசியத்தை அறிவோமா?

    • ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்குள் இருப்பதே சிறந்தது.
    • ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவ கட்டுக்கோப்பான உணவு பழக்கத்துடன் உடலளவில் சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டும்.

    அமெரிக்க இதய சங்கம் மற்றும் அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரி ஆகியவை இணைந்து இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. அதன் முக்கிய சாராம்சங்கள் குறித்து பார்ப்போம்.

    ஆபத்து

    இதய செயலிழப்பு, கரோனரி தமனி நோய், இதயத்தின் மேல் அறைகள் (ஏட்ரியா) ஒழுங்கற்றதாகவும், வேகமாகவும் துடிப்பதால் ஏற்படும் பாதிப்பான ஏட்ரியல் பைப்ரிலேஷன் உள்ளிட்ட இதயம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பக்கவாதம் ஏற்பட உயர்ரத்த அழுத்தமே காரணமாக இருக்கிறது. அதுவே இதயத்துக்கு மிகப்பெரிய ஆபத்து காரணியாக இருக்கிறது என்று அமெரிக்க இதய சங்கம் கூறுகிறது.

    அவசர சிகிச்சை

    ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்குள் இருப்பதே சிறந்தது. இந்த அளவை விட கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம். மார்பு வலி, மூச்சுத்திணறல், முதுகுவலி, உணர்வின்மை, பலவீனம், பார்வை திறனில் மாற்றம், பேசுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அவசர சிகிச்சை மிகவும் முக்கியமானது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும்.

    வழக்கமான பரிசோதனை

    ஒவ்வொருவரும் ரத்த அழுத்தத்தை தவறாமல் சரிபார்க்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த பரிசோதனை செய்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

    உணவு

    பெரியவர்கள் தினமும் 2,300 மி.கி. சோடியம் (சுமார் ஒரு டீஸ்பூன் உப்பு) அல்லது அதற்கும் குறைவான அளவையே உணவு மூலம் உட்கொள்ள வேண்டும். 1,500 மி.கி. என்ற அளவுக்கு படிப்படியாக உப்பின் பயன்பாட்டை குறைத்துக்கொள்வது சிறந்தது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான எண்ணெய்கள் போன்ற இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுத்திட்டத்தை பின்பற்ற வேண்டும். உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க அல்லது குறைக்க மதுப்பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

    உடல் எடை

    உடல் பருமன் கொண்டவர்களாக இருந்தால், உங்கள் உடல் எடையில் 5 சதவீதம் குறைப்பது கூட உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் அல்லது தடுப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் எடையை 5 சதவீதம் குறைப்பது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் அது ரத்த அழுத்தம் மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

    உடல் செயல்பாடு

    ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவ கட்டுக்கோப்பான உணவு பழக்கத்துடன் உடலளவில் சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டும். தியானம், சுவாச பயிற்சி, யோகா உள்ளிட்ட மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்பாடுகளிலும் கவனம் பதிக்க வேண்டும்.

    Next Story
    ×