என் மலர்
பொது மருத்துவம்

பகலில் குட்டித்தூக்கம்... நல்லதா? கெட்டதா? -ஆய்வு கூறுவது என்ன?
- மனித மூளை சுருங்கும் வேகத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க உதவுகிறது என்று தெரியவந்தது.
- நினைவுத்திறன் இழப்பை தடுக்க மிகச்சிறந்த மருந்து என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
பகலில் தூங்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால், பகலில் குட்டி தூக்கம் என்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருவதாக உருகுவே நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது.
இந்த ஆய்வுக்காக 40 முதல் 69 வயதுடைய 35 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களிடம் பகல் நேர தூக்கம் மூளை ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை கண்டறிய `மெண்டலியன் ரேண்டமைசேஷன்' எனப்படும் ஒரு நுட்பம் பயன்படுத்தப்பட்டது. பகல் நேர குட்டி தூக்கம், வயதாகும்போது மனித மூளை சுருங்கும் வேகத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க உதவுகிறது என்று தெரியவந்தது.
இதே போல வேறொரு ஆய்வில், `டெர்சிமோனியன் லைர்ட்' என்ற நுட்பத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 291 விளையாட்டு வீரர்களிடம் நடைபெற்றது. ஒரு சாதாரண இரவு தூக்கத்திற்கு பிறகு, பகலில் அரை மணி நேரம் குட்டித்தூக்கம் போடுவது அறிவாற்றல் மற்றும் உடல் செயல்திறனை மேம்படுத்தி, உடல், மனதில் ஏற்படும் சோர்வு உணர்வை குறைத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதாக கண்டறியப்பட்டது.
இந்த 2 ஆய்வு முடிவுகளின்படி, ஒரு இரவு வழக்கமான சாதாரண தூக்கம் மட்டுமின்றி பகலில் 30 நிமிடங்கள் குட்டித்தூக்கம் தூங்குவது என்பது வயதாகும் காலத்தில் மூளை சுருக்கத்தை தடுத்து, நினைவுத்திறன் இழப்பை தடுக்க மிகச்சிறந்த மருந்து என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.






