search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கொரோனா முதல் அலைக்கும், 2-வது அலைக்குமான வேறுபாடு
    X
    கொரோனா முதல் அலைக்கும், 2-வது அலைக்குமான வேறுபாடு

    கொரோனா முதல் அலைக்கும், 2-வது அலைக்குமான வேறுபாடு என்ன?

    முதல் அலையில் வயதானவர்களைத்தான் அதிகம் பாதித்தது. 2-வது அலையில் இளம் வயதினரும் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். முதல் அலையை விட 2-வது அலையில் இறப்பும் அதிகமாக இருக்கிறது.
    கொரோனா பரவல் குறித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி பொது மருத்துவத்துறை தலைவரும், கொரோனா வார்டு கண்காணிப்பு அதிகாரியுமான டாக்டர் பிரின்ஸ் பயஸ் கூறியதாவது:-

    முதல் அலையில் கொரோனா பரவல் சாதாரண காய்ச்சல் போலவும், இருமல் போலவும் மெல்லிய பாதிப்பாக இருந்தது. ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ஊசி போட்டால் சரியாகி விடும். 2 நாள் கழித்து மீண்டும் காய்ச்சல் வரும். சின்ன, சின்ன சிகிச்சைகள் பெற்றாலே குணம் கிடைப்பதுபோல் இருக்கும். 2-வது வாரத்தில்தான் அதன் வேலையை காட்டும். நடக்கும்போது மூச்சு விடுவது கஷ்டமாக இருக்கும். அதன்மூலம் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து கொள்ளலாம். கிட்டத்தட்ட 50 சதவீதம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு விடும்.

    ஆனால் 2-வது அலையில் வைரஸ் தனது வேலையை வேகமாக காட்டுகிறது. அதாவது வைரசின் வீரியம் அதிகமாக உள்ளது. முதல் அலையில் கடுமையான காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டன. 2-வது அலையில் லேசான காய்ச்சல், தலைவலி, இருமல், உடல் வலி, வாந்தி- பேதி, கண் நோய், அரிப்பு போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இது முதல் வாரத்தில் வரும். இந்த அறிகுறிகள் வந்த உடன் மக்கள் பரிசோதனைக்கு வருவது கிடையாது. 2-வது வாரத்தில் நுரையீரலை பாதிக்கும். மூச்சு விட சிரமம் ஏற்படும். அப்போதுதான் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள். இதனால் சிலரது உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்பட்டு விடுகிறது.

    முதல் அலையில் வயதானவர்களைத்தான் அதிகம் பாதித்தது. 2-வது அலையில் இளம் வயதினரும் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். முதல் அலையை விட 2-வது அலையில் இறப்பும் அதிகமாக இருக்கிறது. கடந்த முறை பாதிப்பின்போது கர்ப்பிணிகள் சின்ன, சின்ன பாதிப்புகளில் இருந்து மீண்டு வந்தனர். 2-வது அலையில் பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி ஒருவர் இறந்து விட்டார். இன்னொரு கர்ப்பிணி மூச்சு விடுவதற்கு கஷ்டப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சோதனைச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில்தான் மொத்த பாதிப்பில் 7 சதவீத பாதிப்பு கண்டறியப்படுகிறது. மே மாதம் 2-வது வாரத்தில் 2-வது அலையின் வேகம் உச்சத்தை தொட வாய்ப்புள்ளது.

    ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கூட கொரோனா தொற்று தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட நோயாளிக்கு 2-வது வாரத்தில் சி.டி.ஸ்கேன் எடுத்தால்தான் பாதிப்பு விவரம் தெரிய வரும். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு ஆக்சிஜன் தேவைப்படும் அளவுக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகள்தான் அதிகம் இறக்கிறார்கள். அவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் பிரின்ஸ் பயஸ் கூறினார்.
    Next Story
    ×