search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோடை வெயிலில் இருந்து காத்துக் கொள்வது எப்படி?
    X

    கோடை வெயிலில் இருந்து காத்துக் கொள்வது எப்படி?

    கோடைக்காலத்தை எப்படி சமாளிப்பது. கோடைக்காலத்தில் என்ன என்ன உடல் உபாதைகள் ஏற்படும்? அவற்றில் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படி? என்று பார்க்கலாம்.
    குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்தாலே பலருக்கு சிரமம் தான். கத்திரி வெயில் தான் சுட்டெரிக்கும் என்ற நிலைமாறி, வெயில் காலம் முழுவதுமே நம்மை சுட்டெரிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலும், வீசும் அனல் காற்றும் உடலை பெரிதும் பாதிக்க செய்வதே அதற்கு காரணம். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னே வெயில் 100 டிகிரியை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.

    கோடைக்காலத்தை எப்படி சமாளிப்பது. கோடைக்காலத்தில் என்ன என்ன உடல் உபாதைகள் ஏற்படும்? அவற்றில் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படி? உடல் வெப்ப தாக்குதல். உடல் சோர்வு, மஞ்சள் காமாலை, சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், ஆசன வாய்கடுப்பு, கண் எரிச்சல், தோல் நோய்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிரமப்படுவது ஏராளம். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள், அதிக ரத்த அழுத்த நோயாளிகள் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது நலம்.

    கோடை காலத்தில் உடலில் பித்தம் அதிகரிப்பதே பெரும்பாலான நோய் நிலைக்கு காரணம். அதுவே உடல் வெப்பநிலையை அதிகரித்து உடலின் நீர்ச்சத்து தோலின் வழியாகவே பெரும்பாலும் இழக்கப்படுவதால் உடல் சோர்வு, தாகம், நாக்கு வறட்சி, வியர்க்குரு, சிறுநீர் குறைவாக கழிதல், சிறுநீர் எரிச்சல், குடலில் வறண்ட மலத்தால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகிறது. பித்தம் அதிகரிக்க கல்லீரல் செயல்பாடு அதிகரிப்பதால் காமாலை நோய் ஏற்படும் நிலை எளிதில் உண்டாகிறது.

    அதிகமான பித்தத்தைக் குறைப்பதே காத்துக்கொள்வதற்கு சிறந்த வழி. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தினசரி 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிக அவசியம். உணவில் காரம், புளிப்பு, மசாலா சேர்ந்த உணவுப்பொருட்களை தவிர்த்து கொள்வது நல்லது. மதுபானத்தால் காமாலை நோய் சீக்கிரமே உண்டாகும். டீ, காபி இவற்றை முற்றிலும் தவிர்த்து பித்தத்தை குறைக்கும் படியாக பாலில் ஏலம், சீரகம், தனியா விதை சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம். தயிர், மோர் இவற்றினை மஞ்சள் பொடியிட்டு கொத்துமல்லி இலைகள் சேர்த்து தாளித்து தேவையான அளவு பருகலாம். உணவில் நீர்ச்சத்து நிறைந்த கீரைகளையும், காய்கறியையும் அதிகம் சேர்க்கலாம்.

    பகல் நேரம் பித்தம் அதிகமான காலம் என்பதால் அந்த நேரத்தில் வெள்ளரி பிஞ்சி, முலாம் பழம், தர்பூசணி, மாதுளை, நெல்லி, வில்வ பழம் இவற்றினை எடுத்து கொள்ளலாம். இதனால் நீர்ச்சத்து உடலில் சேர்க்கப்படுவதோடு பித்தமும் குறையும். சிறுநீர் எரிச்சல் நீங்கும். பழங்களை பிழிந்து சாறு மட்டும் குடிக்காமல் பழம் முழுவதும் எடுத்து கொண்டால் நார்ச்சத்து கிடைக்கும். அதனால் மலச்சிக்கல் நீங்கும்.

    கோடைக்காலத்தில் நீர் தூய்மைக்கேடு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. அதனால் குடிக்கும் நீரினை கொதிக்க வைத்து ஆறவைத்து பயன்படுத்தவும். இல்லாவிட்டால் தொண்டை வலி, வயிற்று போக்கு எளிதில் தோன்றும். மேலும் நீரில் வெட்டிவேர் அல்லது சீரகம் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். இவற்றால் உடல் உள்உறுப்புகள் குளிர்ச்சி அடையும், உஷ்ணம் தணியும்.

    அதிக உடல் சோர்வு உள்ளவர்கள் எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்புடன் சர்க்கரை சேர்த்து பகல் நேரங்களில் பருகலாம். கோடைக்கால வெப்ப நோய்களில் இருந்து காத்துக்கொள்ள சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள நன்னாரி மணப்பாகு, மாதுளை மணப்பாகு, துரிஞ்சி பழ மணப்பாகு இவற்றில் ஒன்றை பகல் நேரங்களில் அளவோடு எடுத்து கொள்ளலாம். மேலும் நெல்லிக்காய் லேகியம், வில்வபழ லேகியம் இவற்றை உட்கொண்டால் பித்தம் குறையும். மலச்சிக்கல் நீங்கும். கோடைக்கால அம்மை நோய்களில் இருந்து காத்துக்கொள்ள தாழம்பூ மணப்பாகினை எடுத்துக்கொள்ளலாம்.

    வெப்பக்கால நோய்களில் இருந்து தோலினை காத்து கொள்ள சந்தனாதி தைலம், குளிர் தாமரை தைலம், சீரக தைலம் இவற்றில் ஒன்றை கொண்டு வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுக்கலாம். வெறும் நல்லெண்ணெய் கூட, எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தலாம். இதனால் பித்தமும் குறையும். கண்களும் குளிர்ச்சி அடையும். வியர்க்குரு போக்க பனைநுங்கினை உண்பதுடன் தோலின் மீதும் பூசலாம்.

    தோல் வறட்சியை தடுக்கவும், நீர் இழப்பினை குறைக்கவும், பகல் நேரங்களில் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் இவற்றில் ஒன்றை கை, கால்களில் தேய்க்கலாம். தோல் நமைச்சல் இருந்தால் அருகம்புல் தைலம் மேலே தடவலாம். அதிக கண் எரிச்சல் உள்ளவர்கள் இரவில் உள்ளங்கால்களுக்கு நல்லெண்ணெய் தேய்த்து கொண்டு படுக்கலாம்.

    சரும பாதிப்பு வராமல் தடுக்க சோற்று கற்றாழையை மடல் நீக்கி, சருமத்தில் பூசி வரலாம். கல்லீரல் சார்ந்த நோய்களில் இருந்து காத்துக்கொள்ள கசப்பு சுவையுள்ள உணவு பொருட்களை சேர்த்து கொள்ளலாம். கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி இவற்றை வாரம் இருமுறை சேர்த்து கொள்ளலாம். பப்பாளி, சப்போட்டா போன்ற கல்லீரலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளலாம். இவ்வாறாக செயற்கையான குளிர்பானங்களையும், நிறமூட்டப்பட்ட உணவு பொருட்களையும் தவிர்த்து இயற்கையான உணவு வகைகளையும், பழக்கவழக்கத்தையும் பின்பற்றினால், இந்த கோடைக்காலம் மட்டுமல்ல, எந்தக்காலமும் நமக்கு குளிர்ச்சி தரும் காலம் தான்.

    சோ.தில்லை வாணன், அரசு சித்த மருத்துவர், பேரணாம்பட்டு.
    Next Story
    ×