search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தொண்டை வலிக்கு நவீன சிகிச்சை
    X

    தொண்டை வலிக்கு நவீன சிகிச்சை

    மருத்துவ பரிசோதனை மூலமாக தொண்டை வலியின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து, நவீன மருத்துவ சிகிச்சை மூலமாக தொண்டை வலி நோயிலிருந்து நிரந்தரமாக நிவாரணம் பெறலாம்.
    நம்மில் பலருக்கு அடிக்கடி தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டையில் எரிச்சல், தொண்டையில் கரகரப்பு, அதிக உமிழ்நீர் வடிதல், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு போன்ற அறிகுறிகள் வருடத்தில் பல தடவை வந்து போகும். பலர் இத்தகைய அறிகுறிகளை அலட்சியம் செய்துவிட்டு அவ்வப்போது கிடைக்கின்ற தற்காலிக நிவாரணிகளை உட்கொண்டு வருகின்றனர்.

    இத்தகைய நடவடிக்கையால் இந்த நோயின் அடிப்படை காரணமான பி-ஹுமாலிடிக் ஸ்டெப்டோ காக்கை என்னும் ஒருவித நச்சுக்கிருமி ரத்தத்தில் வீரியமடைந்து, நாளடைவில் அதன் நச்சுத்தன்மை கால் மூட்டுகள், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் நிரந்தர பாதிப்புக்கு காரணமாகி விடும் என்பது நம்மில் பலருக்கு தெரியாத விஷயம்.

    நோயின் அறிகுறியாக தொண்டையில் வலி இருக்கும். அடிக்கடி காய்ச்சல் வரும். தொண்டையில் வெளிப்பொருள் அடைத்து கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அடிக்கடி உடல் தளர்ந்து போகும். கை, கால் மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் போன்றவை ஏற்படும். மேல் சுவாசக்குழாய் தொற்று உள்ளவர்களுக்கு இந்த நோய் அதிகமாக ஏற்படுகிறது.

    இதற்கு சிறந்த காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகி ஆரம்ப கட்டத்திலேயே தொண்டை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நவீன தொண்டை என்டாஸ்கோப்பி பரிசோதனை மூலம் சிகிச்சை பெற்று குணம் அடையலாம். மூக்கு தண்டு வளைதல் இருந்தால் அதனை என்டாஸ்கோப்பி மூலமாக சரி செய்ய முடியும். சைனஸ் நோய் இருந்தால் அதனை நிரந்தரமாக சரி செய்யலாம். சளி பிடிக்கின்ற உணவு வகைகளை தவிர்த்து முக்கு, தொண்டை, வாய், பற்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும்.

    இந்த நோயினை ரத்தபரிசோதனை மூலமாக எளிதில் கண்டறியலாம். குறிப்பாக தொண்டையில் இருந்து சிறிது சளியை எடுத்து அதனை கல்சர் டெஸ்டிங் என்று சொல்லப்படுகிற கிருமி ஆய்வு செய்வதன் மூலமாகவும், ஏ.எஸ்.ஓ. டிட்ரி என்று சொல்லப்படுகிற ரத்த பரிசோதனை மூலமாகவும் தற்போதைய அதிநவீன ஆய்வுக்கூட நோய் எதிர்ப்பு திறன் ஆய்வுகள் மூலமாகவும் எளிதில் கண்டறிய முடியும்.

    மருத்துவ பரிசோதனை மூலமாக தொண்டை வலியின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து, நவீன மருத்துவ சிகிச்சை மூலமாகவோ அல்லது தேவைப்பட்டால் சைனஸ் அறுவை சிகிச்சை அல்லது டான்சில் அறுவை சிகிச்சை மூலமாகவோ தொண்டை வலி நோயிலிருந்து நிரந்தரமாக நிவாரணம் பெறலாம்.
    Next Story
    ×