search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆஸ்துமா வருவதற்கான காரணங்களும் - தீர்வும்
    X

    ஆஸ்துமா வருவதற்கான காரணங்களும் - தீர்வும்

    ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், கட்டுப்படுத்த முடியும். ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் என்னென்ன… அறிகுறிகள் என்னென்ன… வராமல் தடுப்பது எப்படி? என்று பார்க்கலாம்.
    மனிதகுலத்துக்கு சவாலாக விளங்கும் நோய்களில் ‘க்ரானிக்’ (Chronic) எனப்படும் நாள்பட்ட நோய்கள் பிரதானமானவை. மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் பிரச்சனைகளைத்தான் ‘க்ரானிக்’ என்று வகைப்படுத்துகிறார்கள். இந்த வகை நோய்களுக்கு முக்கியமான உதாரணம், சுவாசக் கோளாறால் ஏற்படும் ஆஸ்துமா. இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், கட்டுப்படுத்த முடியும். ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் என்னென்ன… அறிகுறிகள் என்னென்ன… வராமல் தடுப்பது எப்படி? என்று பார்க்கலாம்.

    “ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்பப் பின்னணி போன்றவைதான் ஆஸ்துமாவுக்கான காரணிகள். இது மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் ஏற்படும் பிரச்னை என்பதால், நேரடியாக அவற்றுக்கு மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். ஆகவேதான் ஆஸ்துமாவைப் பொறுத்தவரை, மாத்திரைகளுக்குப் பதில் இன்ஹேலர் மூலம் மருந்து உட்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.

    ஆஸ்துமாவுக்கான மருந்துகளிலும் எல்லா மருந்துகளையும்போல சில பக்கவிளைவுகள் இருக்கின்றன. மாத்திரை வடிவில் அந்த மருந்துகளை உட்கொள்ளும்போது, அவை உடலின் மற்ற உறுப்புகளையும் சென்றடைந்து, பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இன்ஹேலர் வழியாக உறிஞ்சும்போது, மருந்து நேரடியாக நுரையீரலைச் சென்றடையும் என்பதால், பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.

    பரிசோதனைகள்

    பாதிக்கப்பட்டவருக்கு எந்த மாதிரியான அறிகுறிகள் தெரிகின்றன, மூச்சுத்திணறல் தொந்தரவின் தீவிரம் எந்தளவுக்கு உள்ளது, இருமல் இருக்கிறதா, நெஞ்சு இறுக்கம் காணப்படுகிறதா, தொடர்ச்சியாகப் பேசுவதில் சிக்கல் இருக்கிறதா, குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் ஆஸ்துமா தொந்தரவு இருந்திருக்கிறதா போன்ற தகவல்கள் முதலில் பெறப்படும்.

    தொடர்ந்து, எந்தெந்தச் சூழலில் மேற்கூறிய அறிகுறிகளின் தீவிரம் அதிகமாக இருக்கின்றன என்று பார்க்கப்படும். உதாரணமாக இரவு அல்லது அதிகாலை நேரங்களிலோ, அதிகப் புகையை சுவாசிக்கும்போதோ, செல்லப்பிராணிகளுடன் விளையாடும்போதோ, அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளாகும்போதோ மூச்சுத்திணறல், இருமல் போன்ற அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் ஆஸ்துமா பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.



    அடுத்தகட்டமாக, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (Lung Function Test) செய்யப்படும். குறிப்பாக, `பல்மனரி ஃபங்ஷன் டெஸ்ட்’ (Pulmonary Function Test) செய்யப்படும். ‘மெத்தகோலின் சேலஞ்ச் டெஸ்ட்’ (Methacholine Challenge Test), ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) இயந்திரப் பரிசோதனை, பீக் ஃப்ளோ போன்றவற்றையும் செய்ய வேண்டும். மூச்சுக்குழாயின் சுவாசப்பாதையில் எந்தளவுக்கு பாதிப்பு அல்லது அடைப்பு உள்ளது என்பது இவற்றின் மூலம் கண்டறியப்பட்டு, அதற்கேற்றவாறு மருந்தின் அளவு பரிந்துரைக்கப்பட்டு இன்ஹேலர் அளிக்கப்படும்.

    ஆஸ்துமாவைக் கட்டுக்குள் வைத்திருக்க…

    ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குளிர் மற்றும் வெயில் காலங்களில் வைரஸ் தொற்றுகள் வேகமாகப் பரவும். எனவே, அந்தக் காலகட்டத்தில் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. அவற்றை முறையாக உட்கொண்டால், பிரச்சனைகள் ஏற்படாது.

    தினமும் சரியான அளவு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதிகமாகவோ, குறைவாகவோ பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து, காலத்துக்கு ஏற்ப மருந்தின் அளவு மாறுபடும் என்பதால், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை ஆஸ்துமா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

    ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள், தங்களுக்கு எத்தகையச் சூழல் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையுடன் அதைத் தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதில் வேண்டுமானாலும் யாருக்கும் ஏற்படலாம். எனவே, எத்தகையச் சூழலிலும் அறிகுறிகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது.
    Next Story
    ×