search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    பேசியல் யோகா
    X
    பேசியல் யோகா

    முக அழகை மேம்படுத்தும் ‘பேசியல் யோகா’

    முகத்துக்குச் செய்யும் ‘பேசியல் யோகா' பயிற்சி, முகத்தில் ஏற்படும் முதுமையின் மாற்றங்களை கட்டுப்படுத்தும். முகத்தை இளமையாகவும் புத்துணர்வோடும் வைத்திருக்க உதவும்.
    தினசரி உடற்பயிற்சி செய்வது உடலுக்குப் புத்துணர்வு தரும். அதேபோல் முகத்துக்குச் செய்யும் ‘பேசியல் யோகா' பயிற்சி, முகத்தில் ஏற்படும் முதுமையின் மாற்றங்களை கட்டுப்படுத்தும். முகத்தை இளமையாகவும் புத்துணர்வோடும் வைத்திருக்க உதவும். தினமும் செய்ய வேண்டிய ‘பேசியல் யோகா' பயிற்சிகள் இதோ:

    பயிற்சி 1:

    வாய் முழுவதும் காற்றை நிரப்பிய பின்பு வாயை மூடி, தண்ணீரை கொப்பளிப்பது போல அசைக்க வேண்டும். வாய்க்குள் இருக்கும் காற்றை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாகவும், இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமாகவும் நகர்த்த வேண்டும். தொடர்ந்து 30 வினாடிகள் இந்தப் பயிற்சியை செய்யலாம்.

    பலன்கள்:

    முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கும். முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்க உதவும். முகத்தைப் பளபளப்பாக்கும்.

    பயிற்சி 2:

    முதலில் உதடுகளை பக்கவாட்டில் நன்றாக விரித்தபடி சிரிக்க வேண்டும். பின்பு உதட்டைக் குவித்து சிரிக்க வேண்டும். இவ்வாறு 10 முதல் 30 வினாடிகள் வரை செய்யலாம். இந்தப் பயிற்சியை நேராக பார்த்தபடி, மேலே பார்த்தபடி என இரண்டு முறைகளிலும் செய்யலாம்.

    பலன்கள்:

    இது தாடைப் பகுதியில் உள்ள தசைகளை வலுவாக்கும். முதுமையைத் தள்ளிப்போடும். கன்னத்தில் உள்ள கொழுப்பைக் குறைத்து, முகத்தின் வடிவமைப்பை அழகாக்கும்.

    பயிற்சி 3:

    உதட்டை பக்கவாட்டில் விரித்து, வாயின் உட்புறமாக இருக்கும்படி மடிக்கவும். இந்நிலையில் இருந்தபடியே சிரிக்க வேண்டும். இந்தப் பயிற்சியை 10 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்:

    உதட்டுக்கு மேல் இருக்கும் பகுதியை மேம்படுத்தும். முகத்தில் சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.

    பயிற்சி 4:

    வலது கையை நேர்கோடாக இருக்கும்படி, நெற்றியின் நடுவே வைக்கவும். இப்போது கண்கள் மேல் நோக்கி பார்த்தபடி புருவத்தை மேல் நோக்கி உயர்த்தி இறக்கவும். ஆரம்ப காலத்தில் இந்தப் பயிற்சியை செய்யும் போது லேசான கண் வலி மற்றும் தலை வலி ஏற்படலாம்.

    பலன்கள்:

    இந்தப் பயிற்சி நெற்றிப் பகுதியில் உள்ள சுருக்கங்கள் நீங்க உதவும். நெற்றி மற்றும் கண்களைச் சுற்றியுள்ள தசைகளின் அழுத்தத்தைக் குறைக்கும்.

    பயிற்சி 5:

    காதை ஒட்டியபடி முகத்தின் இரண்டு புறமும் கையை நேராக வைத்து, சிறிது அழுத்தம் கொடுக்கவும். இப்போது உதட்டை பக்கவாட்டில் நன்றாக விரித்து சிரிக்கவும். பின்பு உதட்டை நேராகக் குவிக்கவும். ஐந்து வினாடிகள் இந்த நிலையில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு வரவும். இப்பயிற்சியை 15 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்:

    முகச் சருமத்தில் உள்ள அடுக்குகளில் இருக்கும் செல்களுக்கு ஆக்சிஜன் தடையின்றி கிடைக்க உதவும். முகம் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். சருமம் வறண்டு போகாமல், பளபளப்புடன் வைத் திருக்க உதவும்.
    Next Story
    ×