search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    சூரிய நமஸ்காரம்
    X
    சூரிய நமஸ்காரம்

    உடலுக்கு வலிமையையும், அழகும் மினுமினுப்பும் தரும் சூரிய நமஸ்காரம்

    உலகையே காக்கின்ற சூரிய பகவானை உள்ளத்தில் நினைத்து காலையில் கிழக்கு திசையிலும் மாலையில் மேற்கு திசையிலும் செய்யும் ஒரு யோகப் பயிற்சியை, மூச்சு பயிற்சியை நமது உடலால் சூரிய பகவானுக்கு நமஸ்காரம் செய்வதாக வடிவமைத்தனர்.
    உலகையே காக்கின்ற சூரிய பகவானை உள்ளத்தில் நினைத்து காலையில் கிழக்கு திசையிலும் மாலையில் மேற்கு திசையிலும் செய்யும் ஒரு யோகப் பயிற்சியை, மூச்சு பயிற்சியை நமது உடலால் சூரிய பகவானுக்கு நமஸ்காரம் செய்வதாக வடிவமைத்தனர்.

    சூரிய நமஸ்காரம் 12 நிலைகள் செய்முறை:

    விரிப்பின் மீது கிழக்கு திசை நோக்கி கையை கூப்பிய நமஸ்கார முத்திரையுடன் நிற்க வேண்டும். கால்கள் சேர்ந்து இருக்க வேண்டும். இது ஆயத்த நிலையாகும்.

    கூப்பிய கையை பிரிக்காமல் பின் நோக்கி வளைந்து கையை தலைக்குமேல் பின்னோக்கி கொண்டு வரவேண்டும். கை முட்டியை வளைக்கக்கூடாது. இது சக்ராசன நிலையாகும்.

    இப்பொழுது முன்னோக்கி குனிந்து கால்களை வளைக்காது கால் விரல்களை தொட வேண்டும். இது பாதஹஸ்தாசன நிலையாகும்.

    உள்ளங்கைகளை தரையில் ஊன்றி வலது காலை வேகமாக பின்னோக்கி கொண்டு வர வேண்டும். கால் முட்டியை தரையின் மீது அழுத்தி நிமிர்ந்து பார்க்க வேண்டும். இது ஓட்ட பந்தயத்திற்கு தயாராக நிற்கும் நிலையாகும்.

    இடது காலையும் வேகமாக பின்னோக்கி கொண்டு வர வேண்டும். இரண்டு பாதங்களையும் ஒன்று சேர்த்து கால் விரல்கள் மட்டும் தரை மீது வைத்து கால் முட்டிகளை நீட்டி உடம்பை பூமிக்கு இணையாக வைத்து உள்ளங்கைகளை ஊன்றி நிமிர்ந்து பார்க்கவும். கழுத்து பட்டியில் ஒரு பந்து வைத்தால் உருண்டு தரைக்கு வர வேண்டும். அந்தளவுக்கு உடம்பு பூமிக்கு இணையாக சமமாக இருக்க வேண்டும்.

    இரண்டு முட்டிகளையும் தரையின் மீது வைத்து உடம்பை பின்னோக்கி கொண்டு வந்து குதிகால் மீது உட்கார வேண்டும். உள்ளங்கைகளை மாற்றம் செய்யாது நெற்றி பொட்டை தரையில் வைத்து ஓய்வு எடுக்க வேண்டும்.

    உள்ளங்கைகளை ஊன்றி உடம்பை வேகமாக முன்னோக்கி கொண்டு வர வேண்டும். மார்பு, நெற்றி பொட்டு ஆகியவை தரையில் வைத்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இதுவே அஷ்டாங்க நமஸ்காரம் என்று கூறுவார். அதாவது பாதம் 2 , கால் முட்டிகள் 2 , உள்ளங்கைகள் 2 , நெற்றி பொட்டு 1 , தலை 1, ஆக 8 பாகங்கள் தரையின் மீது இருப்பதால் இந்த பெயர். அஷ்டம் என்றால் எட்டு என்று பொருள். இடுப்பு பகுதி தரையில் படாது புட்டத்தை உயர்த்தி நிறுத்த வேண்டும்.

    தலையை உயர்த்தி வானத்தை பார்க்க வேண்டும். முதுகை நன்கு பின் நோக்கி வளைந்து இருக்க வேண்டும். இது புஜங்காசன நிலையாகும்.

    உள்ளங்கைகளையும் பாத விரல்களையும் நன்கு தரை மீது அழுத்தி இடுப்பை மேல் நோக்கி உயர்த்தி தலையை குனிந்த நிலையில் இரண்டு கைகளின் இடையே கொண்டு வரும் பொழுது குதிகாலை பூமியின் மீது அழுத்தி வைக்க வேண்டும். இது ஒரு குன்று போன்ற நிலையாகும்.

    திரும்பவும் 5வது நிலைக்கு வரவேண்டும். கால் முட்டிகளை தரையின் மீது வைத்து குதிகால்கள் மீது அமர்ந்து நெற்றி பொட்டை தரைமீது வைத்து ஓய்வு எடுக்க வேண்டும்.

    நிமிர்ந்து, வேகமாக வலது கால் பாதத்தை இரண்டு கைகளுக்கு இடையே கொண்டு வந்து வைக்க வேண்டும்.

    இதே போல் அடுத்த இடது கால் பாதத்தை இரண்டு கைகளுக்கு இடையில் வலது பாதத்திற்கு பக்கத்தில் வைக்க வேண்டும். கால் முட்டிகளை வளைக்காது சரி செய்ய வேண்டும். இது பாதஹஸ்தாசன நிலையாகும்.

    நிமிர்ந்து நின்று தயார் நிலையான நமஸ்கார முத்திரை செய்து நேராக பார்க்க வேண்டும்.

    இது ஒரு சுற்று அல்லது ஒரு நமஸ்காரம் ஆகும், இது போல் 6 லிருந்து 12 முறை செய்தால் போதும்.

    பலன்கள்:

    சூரியன் உதயமாகும் நேரம் சூரிய நமஸ்காரம் செய்தால் தோல், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகிவிடும்.

    வயிறு, நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், குடல்கள், முதுகுத்தண்டு ஆகியவை பலம் பெறுகிறது. சுவாசம், ரத்த ஓட்டம், ஜீரண உறுப்புகளின் வேலையை தூண்டும். நரம்புகள் மூளையின் மையத்திலுள்ளது. இப்பயிற்சியால் இந்நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகிறது.

    அலைபாயும் மனதை ஒரு முகப்படுத்துகிறது. மெதுவாக செய்யும்பொழுது உடல் அல்லது மனம் சோர்வடைந்திருந்தால் புத்துணர்ச்சி பெறுகிறது.

    இப்பயிற்சியை ஆரம்பிக்க அரைமணி நேரம் முன்பாக தேன் கலந்த நீரை 1 டம்ளர் அருந்தி விட்டு பயிற்சி செய்தால் உடல் எடை சீக்கிரம் குறைகிறது. பெண்கள் இப்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கர்ப்பம் தரித்த பிறகு அதிக பால் சுரக்கும். மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. வாத கோளாறுகள், வயிற்று கோளாறுகளை தடுக்கிறது.

    உடல் நோய் எதிர்ப்புசக்தி கூடப் பெற்று, வலிமையையும், அழகும் மினுமினுப்பும் பெற்று திகழும். நீண்ட ஆயுள் உண்டாகும்.

    கண் பார்வை சிறிது சிறிதாக விருத்தியடைந்து முழுப்பார்வையும் பெற்று பயன் பெறலாம்.

    யோகாசனப் பயிற்சிகளுக்கு முன்பு 6 சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு பயிற்சியை தொடங்கினால் உடல் பிடிப்புகள் இன்றி ஆசனங்கள் எளிதில் பழகலாம். மூச்சு வாங்குவதில்லை.

    யோகக் கலைமாமணி

    பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com
    Next Story
    ×