
சிறுவயதிலேயே எடை அதிகமுள்ள சாதனங்களை பயன்படுத்தி கடினமான உடற்பயிற்சிகளை செய்வது பல வகைகளில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தொடக்கத்தில் இலகுவான உடற்பயிற்சிகளை செய்து பழகுவதே நல்லது. சரியான வழிகாட்டுதலின் கீழ்தான் அந்த உடற்பயிற்சிகளையும் தொடங்க வேண்டும்.

17 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பளு தூக்கும் பயிற்சிகளை செய்யக்கூடாது என்பது உடற்பயிற்சி நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அந்த பயிற்சிகள் உடலில் காயங்களை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. சிறுவர்கள் தசைகளின் வளர்ச்சிக்கு உதவும் பயிற்சிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இளம் வயதினர் எடை தூக்கும் பயிற்சிகள் செய்தால் தசைகள் சோர்வடைந்து அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் 14-16 வயதில் தசைகள் வலுவாக இருக்காது. இதனால் தசைகள் எளிதாக சோர்ந்து பலவீனமாகிவிடும். கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறவர்கள் அதற்கு ஏற்றபடி போதுமான ஊட்டச்சத்து மிகுந்த உணவினை உட்கொள்ளவேண்டும். ஆனால் சிறுவர்கள் பெரும்பாலும் சரிவிகித உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதற்கே ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி போதிய ஊட்டச்சத்துக்களை சாப்பிடாமல் பயிற்சி மேற்கொண்டால் பின்னாளில் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக இடுப்பு, முழங்கால் வலி, திசுக்கள் சேதமடைதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.