
நோயாளிகளுக்கும், உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கும் நடைப் பயிற்சி ஏற்றது. இதில் உடல் எடை அதிகமாக இருப்பவர்களில் சிலர் முதல் நாள் நடைப் பயிற்சியிலே ‘நம்மால முடியலேப்பா’ என்று அலுத்துக்கொள்வார்கள். அவர்கள் சரியான முறையில் நடக்கவில்லை என்பதுதான் அந்த அலுப்புக்கு காரணம்.
நடைப் பயிற்சியை தொடங்குவதற்கு முன்னால் நிமிர்ந்து நேராக நில்லுங்கள். தலை உயர்ந்து நேராக நிற்கவேண்டும். முன்னும், பின்னுமாக அசையக்கூடாது. உயரமான பகுதியில் ஏறும்போது மட்டும்தான் உடல் முன்னோக்கி வளையவேண்டும். சமதளத்தில் நடக்கும்போது அவ்வாறு வளைந்தால் அது சரியான நடை அல்ல.
கண்கள் நேராக பார்க்கவேண்டும். பார்வைபடும் தூரத்தை நோக்கி வேகமாக நடக்கவேண்டும். உயர்ந்திருக்கும் தோள்களை இயல்பான நிலைக்கு கொண்டு வாருங்கள். வயிற்றை சற்று உள்நோக்கி இழுத்துப்பிடியுங்கள். அப்படி இழுத்துப் பிடிக்காமல் வயிறு தளர்ந்துபோயிருந்தால், முதுகு பின்னோக்கி வளைந்திருக்கும் நிலை உருவாகும். நன்றாக மூச்சை இழுத்துவிட்டபடி நடைப்பயிற்சியை தொடங்கவேண்டும். இதே முறையை பின்பற்றி தொடர்ந்து நடைப்பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.