search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்பவர்களை படத்தில் காணலாம்.
    X
    உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்பவர்களை படத்தில் காணலாம்.

    உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு: நீண்டநாட்களுக்கு பிறகு உடற்பயிற்சி செய்ய வந்தவர்கள் உற்சாகம்

    4½ மாதங்களுக்கு பிறகு உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது. பயிற்சியாளர்களும், நீண்டநாட்களுக்கு பிறகு உடற்பயிற்சி செய்ய வந்தவர்களுக்கு உற்சாகமாக பயிற்சி அளித்தனர்.
    கொரோனா ஊரடங்கால் கடந்த 4½ மாதங்களாக மூடப்பட்டு இருந்த உடற்பயிற்சி கூடங்களை திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து, தமிழகத்திலும் 10-ந் தேதி (அதாவது நேற்று) முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    மேலும் உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதில், 50 வயதுக்கு மேற்பட்டோர், உடல் நலக்குறைவு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 15 வயதுக்கு குறைவான குழந்தைகளை உடற்பயிற்சி கூடங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. உடற்பயிற்சியின்போது அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றிருந்தன.

    அதன்படி, தமிழகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் 4½ மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன. இது உடற்பயிற்சி செய்பவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து உடற்பயிற்சி கூடங்களும் நேற்று அதிகாலை முதலே சுறுசுறுப்படைந்தன. பயிற்சியாளர்களும், நீண்டநாட்களுக்கு பிறகு உடற்பயிற்சி செய்ய வந்தவர்களுக்கு உற்சாகமாக பயிற்சி அளித்தனர்.

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள தனியார் உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் ஒருவர் கூறியதாவது:-

    கிட்டத்தட்ட 4½ மாதங்களாக உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு இருந்தன. தற்போது, உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டாலும் முழுமையான அளவில் இயங்குவதற்கு இன்னும் 2 மாதங்களாவது ஆகும். எனவே, இந்த ஆண்டுக்கான வருமானம் பெரிதும் பாதிப்படைந்து உள்ளது.

    எங்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு, இதயத்துடிப்பு அளவீடுகள் சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கிறோம். ஒவ்வொரு கட்ட பயிற்சிக்கு பின்னரும், உடற்பயிற்சி தளவாடங்கள் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்படுகிறது. எனவே, உடற்பயிற்சி செய்ய வருபவர்கள் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×