
உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான சக்தி என்னிடம் இல்லை என்று சொல்பவர்களுக்கு தெரியாத ஒன்று. எளிய உடற்பயிற்சிகளை அவர்கள் முதலில் செய்யத் தொடங்கினால் விரைவில் அவர்கள் உடல் வலிமையுறுவதை உணர முடியும். உடற்பயிற்சி செய்ய விலையுயர்ந்த கருவிகளோ, உடற்பயிற்சி மையங்களோ தேவையில்லை. எளிய பயிற்சிகள் எத்தனையோ உள்ளது. நீங்கள் முழுமனதுடன் ஈடுபடுவது ஒன்று தான் தேவை.
சுறுசுறுப்பாக நடத்தல், நீச்சல், சைக்கிளோட்டுதல், நடனப் பயிற்சிகள் நுரையீரல் மற்றும் இதயத்தசைகளை வலுவடையச் செய்கிறது. இதயத்துடிப்பை சிறிது நேரத்திற்கு அதிகரித்து அதிக பிராண வாயு இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
இதுவரை நீங்கள் உடற்பயிற்சி ஏதும் செய்யாதவராயிருந்தால் முதல் நாள் ஐந்து நிமிடங்கள் செய்தால் போதும். அதன்பிறகு நீங்களே வலிமையடைவீர்கள். அடுத்துவரும் நாட்கள் சிறிது சிறிதாக பயிற்சி நேரத்தை அரை மணி முதல் ஒருமணி நேரம் வரை அதிகரிக்கவும் இப்படி வாரம் ஐந்து நாட்கள் செய்தால் போதும். ஆனால் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
அதிகாலையில், வெறும் வயிற்றில் இந்த எளிய பயிற்சிகளை செய்யலாம். ஏனெனில் காலையில் தான் அதிக கலோரிகள் தொடர்ந்து எரிக்க முடியும். இதனால் கொழுப்பு விரைவில் கரையும்.
நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் விளைவாக உங்கள் இதயத்துடிப்பானது உங்கள் அதிக பட்ச துடிப்பின் அளவில் 60 முதல் 80 சதவீதம் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் எட்டி இருக்க வேண்டும்.
அதிக பட்ச துடிப்பு எவ்வளவு இருக்க வேண்டும்? இதை தெரிந்து கொள்ள 220 லிருந்து உங்கள் வயதை கழிக்க வேண்டும்.
உதாரணம்: உங்கள் வயது 40 என்றால், 220-40= 180 என்பது உங்கள் அதிக பட்ச இதயத்துடிப்பு.
இதன் 60 % முதல் 80% என்பது நிமிடத்திற்கு 108 முதல் 144 துடிப்புகள் வரை உடற்பயிற்சிக்கு பின் சுமார் 30 நிமிடங்களாவது எட்டியிருக்க வேண்டும். இன்னிலையில் உங்கள் சுவாசம் தெளிவாக கேட்கும்படி இருக்கும். பேசும் போது சிறிது மூச்சு வாங்கும்.
பயிற்சியை சற்று தீவிரப்படுத்த நடப்பதற்கு மலைப் பாதையை தேர்வு செய்யலாம். பழு தூக்கலாம். கைகளை இதயத்துக்கு மேல் தூக்கி பயிற்சி செய்வதும் இதயத்துடிப்பை அதிகரிக்கும்.