search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நோயாளிகளுக்கான உடற்பயிற்சிகள்
    X
    நோயாளிகளுக்கான உடற்பயிற்சிகள்

    நோயாளிகளுக்கான உடற்பயிற்சிகள்

    எந்த வகையான நோயாளிகள் எந்த உடற்பயிற்சியை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
    உடற்பயிற்சி செய்வதால் மூளை மற்றும் இதயத்துக்கு ரத்தம் சீராகச் செல்கிறது. இதனால் ஆரோக்கியம் கூடும்; நினைவாற்றல் அதிகரிக்கும்; கவனக்குறைவு ஏற்படாது. ஆனால், உலக அளவில் ஆண்களில் 60 சதவிகிதம், பெண்களில் 74 சதவிகிதம் பேர் உடற்பயிற்சி செய்வதில்லை என்கிறது அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்றின் தகவல்.

    சர்க்கரை நோயாளிகள்

    சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். இதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்படியாகக் குறைவதோடு, இன்சுலினின் தரம் மேம்படும். தினமும் நாற்பது நிமிடங்கள் வீதம் வாரத்தில் ஐந்து நாள்கள் நடைப்பயிற்சி செய்யலாம். சர்க்கரை நோய் இருப்பதால் செய்யக்கூடாத உடற்பயிற்சி என்று எதுவும் இல்லை. ஆனால், மருத்துவரிடமோ டிரெயினரிடமோ ஆலோசனைகளைக் கேட்கலாம். உடற்பயிற்சியின்போது சரியான ஷூவைத் தேர்ந்தெடுத்து அணிவது நல்லது.

    ரத்த அழுத்த நோயாளிகள்


    ரத்த அழுத்த நோயாளிகள் சீரான வேகத்தில் நடைப்பயிற்சி செய்யவேண்டும். இதனால், இதயத்துடிப்பு சீராகும். டிரெட்மில்லில் ஓடவோ நடக்கவோ செய்யலாம். இது இதயத் தசைகளைப் பலப்படுத்தும். தலையை அசைப்பது போன்ற பயிற்சிகளைச் செய்யக்கூடாது. டிக்லைன் பென்ச் பிரஸ் (Decline Bench Press), டிக்லைன் ட்ரைசெப்ஸ் (Decline Triceps) போன்ற பயிற்சிகளைத் தவிர்க்கலாம். நீண்ட நாள்களாக உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், பளு தூக்கும் பயிற்சிகளைச் செய்யக்கூடாது. இவர்களின் இதயம் பலவீனமாக இருக்கலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயிற்சிகள் செய்யக்கூடாது.

    இதய நோயாளிகள்

    இதய நோயாளிகள், உடற்பயிற்சி செய்வதற்குமுன் மருத்துவரை அணுகவேண்டும். நோயின் தன்மையைப் பொறுத்து இவர்களுக்கு வேகமான நடைப்பயிற்சி (Brisk Walking), சாதாரண நடைப்பயிற்சி (Normal Walking), குறைந்த நடைப்பயிற்சி (Reduced Walking) போன்றவற்றில் ஏதாவது ஒன்று பரிந்துரைக்கப்படும். இதயம் தனக்கு வரும் ரத்தத்தில், குறைந்தது 60 சதவிகிதத்தை வெளித்தள்ள வேண்டும். இது இதயத்தின் எஜெக்‌ஷன் ஃபிராக்‌ஷன் (Ejection Fraction) எனப்படுகிறது. இந்த அளவு 60 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் கைகால்களை ஆட்டி வேகமாக நடக்கலாம். 40 முதல் 60 சதவிகிதம் வரை இருக்கிறவர்கள், வேகமான நடைப்பயிற்சி செய்யக்கூடாது; சாதாரண நடைப்பயிற்சிதான் செய்யவேண்டும்.

    40 சதவிகிதத்தைவிடக் குறைவாக இருப்பவர்கள், வீட்டுக்குள்ளேயே நடப்பதுபோன்ற மிகக்குறைவான நடைப்பயிற்சிதான் செய்யவேண்டும்.

    மாரடைப்பு வந்தவர்கள்

    மாரடைப்பு வந்தவர்கள் கடினமான பயிற்சிகளைச் செய்யக்கூடாது. கடினமான பயிற்சிகள் செய்தால் ரத்தக்குழாய் சுருங்கி மீண்டும் மாரடைப்பு வரலாம். நடைப்பயிற்சி செய்தால் ரத்தக்குழாய்கள் விரிவடையும். ஆனால், கைகாலை ஆட்டி வேகமாக நடக்கக்கூடாது. மிதமான வேகத்தில் நடக்கலாம்.

    பக்கவாதம் வந்தவர்கள்

    சாதாரண நடைப்பயிற்சி செய்யலாம். வேகமான நடைப்பயிற்சி வேண்டாம். பளு தூக்குவதைத் தவிர்க்கலாம்.
    Next Story
    ×