என் மலர்
குழந்தை பராமரிப்பு

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்
- இன்றைய குழந்தைகளே நாளைய தலைமுறைகள்.
- தொழில்நிறுவனங்களும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தி கொள்ளவேண்டும்.
உலகின் கண்மணிகள் குழந்தைகள். இப்படிபட்ட குழந்தைகள் தங்களது பருவத்தில் காலையில் புத்தகப்பையை சுமந்துகொண்டு பள்ளிக்கு சென்று கல்வி கற்பதும், மாலையில் வீட்டிற்கு வந்து சிறிதுநேரம் விளையாடுவதும் என்று எவ்வித கவலைகளும் இன்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டியவர்கள். ஆனால் சமூகத்தில் இன்றளவும் குடும்பத்தின் வறுமை எனும் சுமையை, படிக்கும் வயதிலான சில குழந்தைகளின் தலையில் ஏற்றி அவர்களை வேலைக்கு அமர்த்தும் வேதனை சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
நம் நாட்டில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே. இதில் சில நாடுகளில் குழந்தைகளின் வயது மாறுப்பட்டு சட்டங்கள் உள்ளன. மேலும் குழந்தை தொழிலாளர் உருவாவதை தடுக்க பல்வேறு சட்டதிட்டங்களும் உள்ளன. அத்துடன் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணிகளில் குழந்தைகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுடன் பல்வேறு குழந்தைகள் நல அமைப்புகள், இயக்கங்களும் கைகோர்த்து செயல்படுகின்றன.
இன்றைய குழந்தைகளே நாளைய தலைமுறைகள். அதனால் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதும், அதிகரிப்பதும் ஒரு நாட்டின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும். மேலும் நாடு எதிர்காலத்தில் ஒரு அறிவார்ந்த சமூகத்தை இழக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி விளையாடும், படிக்கும் வயதில் வேலைக்கு செல்வதால் குழந்தைகள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தை தொழிலாளர்கள் உருவாவதற்கு முக்கிய காரணம் குடும்ப வறுமை, கல்வியின் அவசியம் உணராமை, போதிய விழிப்புணர்வு இல்லாமைதான்.
எல்லா குழந்தைகளும் கட்டாய கல்வி பெறவேண்டும் என்று ஏட்டளவில் இல்லாது அதனை செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்களும் தாம் பெற்ற பிள்ளைகளுக்கு உணவும், கல்வியும் அளிப்பது நம் கடமை என்பதை உணரவேண்டும். வறுமை காரணமாக குழந்தைகளை பணிக்கு அனுப்புதல் கூடாது. பிள்ளைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம் என்பதை உணரவேண்டும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது தொண்டு நிறுவனங்களின் கடமை ஆகும்.
பெற்றோர்கள் எத்தகைய வறுமை வந்தாலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்புதல் கூடாது. தொழில்நிறுவனங்களும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தி கொள்ளவேண்டும். இருசாராரும் மனிதநேயத்துடன் நடந்து கொண்டால் குழந்தை தொழிலாளர் உருவாவதைத் தடுக்க முடியும்.
அந்த வகையில் உலகளவில் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்கவும், அதுபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி(இன்று) உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு சார்பில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி, உரிய கல்வி கிடைக்க வழிவகை செய்வது அனைவரின் கடமையாகும்.






