search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்!
    X

    குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்!

    • மனிதன் உருவான நாளில் இருந்து கதைகளும் உருவாகிவிட்டன.
    • கதைகளை சுமக்காத மனிதர்கள் யாருமே இல்லை.

    குழந்தையாக இருந்தபோது பாட்டியிடம் கதை கேட்டு தூங்கிய அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் அந்த அனுபவத்தை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்திட நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம். அதற்கு பெற்றோராகிய உங்களை தயார்படுத்தும் சிறிய முயற்சி இது.

    மனிதன் உருவான நாளில் இருந்து கதைகளும் உருவாகிவிட்டன. கதைகளை சுமக்காத மனிதர்கள் யாருமே இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கு பின்னும் ஒரு கதை இருக்கும். அந்த கதை வலி நிறைந்ததாகவும், மகிழ்ச்சியானதாகவும், மறக்க நினைப்பதாகவும், மறக்க முடியாதாகவும் இருக்கலாம்.

    தனது கதைகளை மற்றொருவருக்கு சொல்வதன் மூலம் தனது கருத்தை, எண்ண ஓட்டத்தை மற்றவரிடம் பகிர்கிறார்கள். இதன் மூலம் தங்களது மனக்கவலை நீங்குகிறது என்றும் நம்புகிறார்கள். கதைகள் என்பவை கற்பனையாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்கிற வரைமுறை இல்லை. நாம் பார்த்தவை, நமக்குள் நடப்பவை, சில சமயம் நமக்குள் எழுகிற கனவுகள்கூட கதைகளாக மாறுகின்றன.

    எனவே கதைகள் என்பவை எங்கோ தூரத்தில் இல்லை, நம்மோடுதான் இருக்கின்றன. அவற்றை கவனிக்க வேண்டும். பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றித்தான் பல கதைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. அவற்றை வாசிக்க வேண்டும். வாசித்தபின் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்.

    ஏன் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்? அவர்களையே அந்த புத்தகத்தை படிக்க வைத்துவிடலாமே என்ற கேள்வி பலருக்கு எழலாம். கதைகள் குழந்தைகளை அவர்கள் பார்த்திராத புதியதோர் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அவர்களின் கற்பனைத்திறனையும், கேட்கும் திறனையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கும். அடுத்தவரை பற்றி புரிந்து கொள்ள வழிவகை செய்யும்.

    தான் வாழும் சமூகத்தையும், தான் வாழ உதவி செய்யும் எல்லா உயிர்களையும் நேசிக்க கதைகள் கற்றுக் கொடுக்கின்றன. எத்தனை கதைகளை குழந்தைகள் கேட்டாலும் ஒரு சில கதைகள் அவர்களோடு ஐக்கியமாகிவிடுகின்றன.

    அவர்களது வாழ்க்கையை ஆக்கப்பூர்வமாய் மாற்றுகின்ற வேலையையும் கதைகள் செய்கின்றன. எனவே குழந்தைகளுக்கு கதைகளை சொல்லுங்கள். ஒவ்வொரு கதைக்கு பின்னும் ஒரு கருத்து நிச்சயம் இருக்கும். அதில் எந்த கருத்து உங்கள் குழந்தைக்கு தேவையோ அந்த கதையை சொல்லுங்கள்.

    உதாரணமாக உங்கள் குழந்தை பயப்படுகிறது என்றால் தைரியத்தை முன்நிறுத்தும் கதையை சொல்லுங்கள். அந்த கதை உங்கள் குழந்தையின் உள்ளத்துக்குள் சென்று நம்பிக்கையை கொடுக்கும். அதனால் பெற்றோர் கதைகளை வாசிப்பதற்கு ஆர்வம் காண்பிக்க வேண்டும்.

    அதில் வாழ்வியல் போதனைகளை வழங்கும் கதைகளை குழந்தைகள் ரசிக்கும் விதத்தில் சொல்லலாம். கதைகள் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் பக்குவமிக்க மனிதர்களாக மாற்றும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

    Next Story
    ×