search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பிள்ளைகளின் தமிழ் மொழிக் கல்வி
    X
    பிள்ளைகளின் தமிழ் மொழிக் கல்வி

    பிள்ளைகளின் தமிழ் மொழிக் கல்வியும், பயன்களும்..

    தமிழ் என்றைக்கும் பணி வாய்ப்பளிக்கும் கல்வியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி உலகம் முழுவதும் தங்கள் திறமைகளை தமிழர்கள் நிரூபித்து வருகின்றனர்.
    தமிழ் மொழிக் கல்வியில் இருக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகளை பற்றி தெளிவாக விளக்குகிறார், சீனு.செந்தாமரை. கடலூரை சேர்ந்தவரான இவர், தமிழ் துறையில் ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ் மொழியில் பல கவிதை படைப்புகளையும், புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். இவர் தமிழ் துறையின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் விளக்குகிறார்.

    ‘‘தமிழில் இளங்கலை (பி.ஏ.) பட்டப்படிப்பு முதல் முனைவர் (பிஎச்.டி.) பட்டம் வரை படிக்க முடியும். அத்துடன் ஆசிரியர் கல்வியியல் பயிற்சியும், பட்டப்படிப்பும் படிப்போருக்கு ஆசிரியர், பேராசிரியர் பணிவாய்ப்புகளும் காத்திருக்கின்றன. ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் துறை மட்டும் அல்லாது பல்வேறு துறைகளிலும் இந்த மொழி சார்ந்த பணியிடங்களைப் பெற முடியும்.

    பி.ஏ. பி.எட்., எம்.ஏ. எம்.எட். படிப்பவர்களுக்கு உயர்நிலைப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர் பணிகள் எளிதாகக் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இந்தத் துறையைத் தேர்தெடுத்துப் படிப்பவர்கள் குறைவாக உள்ளதால், ஏராளமான கல்வி நிலையங்களில் தமிழ் ஆசிரியர் தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அதே போன்று கலை அறிவியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தமிழில் எம்.பில்., பிஎச்.டி. படித்தவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்’’ என்பதோடு, தமிழ் மொழியினை கொண்டு அரசு வேலைவாய்ப்பும் பெற முடியும் என்கிறார்.

    ‘‘தமிழை ஒரு பாடமாகப் படித்தவர்கள், தமிழ்த் துறையில் பட்டம் பெற்றவர்கள் பல்வேறு துறைகளிலும் கோலோச்சுகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, அரசின் பல்வேறு துறைகளில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன. அதே போன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகளில் தமிழில் பயின்றோர் எளிதில் தேர்வு எழுத முடியும் என்பதுடன், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது’’ என்றவர், ஊடகத்துறையில் காத்திருக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகளை விளக்குகிறார்.

    ‘‘தமிழ்ப் படித்தவர்களுக்கு தமிழ் ஆசிரியர், பேராசிரியர் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதெல்லாம் பழைய கதை. இன்றைக்கு அதில் மாற்றம் செய்யப்பட்டு, பல நிலைகளில் சிறப்பான பணிகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    ஊடகத் துறையில் மொழி படிப்புகள் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எழுத்து, பேச்சு ஆகிய இரு நிலைகளிலும் சிறந்த ஆற்றல் கொண்டிருந்தால் எளிதில் வேலைவாய்ப்பைப் பெற முடியும். குறிப்பாக, பத்திரிகைகள், பதிப்பகங்கள், அச்சகங்கள், பருவ இதழ் நிறுவனங்கள் என இதழியல் துறையில் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதே போன்று தொலைக்காட்சி, வானொலி பண்பலை போன்றவற்றில் இந்தியாவில் மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் தமிழ் படித்தோருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக நிகழ்ச்சி தொகுப்பு, செய்தி வாசிப்பு ஆகிய பணிகளில் தமிழ் பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

    புகழ் பெற்ற பி.பி.சி. சீனா, ஜப்பான், இலங்கை, ஆஸ்திரேலியா, அமெரிக்க வானொலிகளில் தமிழ் மொழிப் பிரிவு உள்ளது. அங்கும் தமிழ் கற்றவர்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய பணிகள் கிடைக்கின்றன. இது தவிர தற்கால விளம்பரத் துறையிலும் தமிழ் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் காணப்படுகின்றன’’ என்கிறார்.

    ‘‘தமிழோடு பிறமொழி அறிவு இருப்பின், மொழிபெயர்ப்புத் துறைகளில் ஏராளமான வாய்ப்புகளைப் பெறலாம். இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால், தமிழ் என்றைக்கும் பணி வாய்ப்பளிக்கும் கல்வியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி உலகம் முழுவதும் தங்கள் திறமைகளை தமிழர்கள் நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளிலும் பணி நிமித்தமாக குடிபெயர்ந்து வருகின்றனர். அங்கு தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் மறந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழ் கற்பிக்கும் பள்ளிகளில் அவர்கள் சேர்க்கின்றனர். அங்கும் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு உலகம் முழுவதும் தமிழ்ப் படிப்புக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. தமிழ்ப் படிக்கும் மாணவர்கள் இதை உணர்ந்து தங்கள் தகுதிகளை தமிழ்த் துறையில் வளர்த்துக்கொண்டால் சிறப்பான எதிர்காலம் நிச்சயமாக உண்டு’’ என்று நம்பிக்கை யுடன் தெரிவிக்கிறார்.

    சீனு.செந்தாமரை
    Next Story
    ×