search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்களே கூச்சம் தவிர்ப்போம்... கூர்மை வளர்ப்போம்...
    X
    மாணவர்களே கூச்சம் தவிர்ப்போம்... கூர்மை வளர்ப்போம்...

    மாணவர்களே கூச்சம் தவிர்ப்போம்... கூர்மை வளர்ப்போம்...

    கூச்ச சுபாவம் கொண்டவர்கள், வெளித்தோற்றத்தில் அமைதியானவர்களாக காட்சியளித்தாலும், அவர்கள் மனதிற்குள் போராட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
    மாணவர்களே நீங்கள் நன்றாக படிக்கிறீர்கள்..., ஆனால் ஆசிரியர் கேள்வி கேட்கும்போது பதில் தெரிந்தும் பலர் முன்னிலையில் அதை விளக்கிச் சொல்ல கூச்சமாக இருக்கிறதா?. சராசரி மாணவர்கள், தங்கள் பேச்சுத்திறமையால் தனக்குத் தெரிந்த பதிலைச் சொல்லி பாராட்டு பெற்றுவிடும்போது, பதில் தெரிந்தும் சொல்ல முடியாத நிலை பரிதாபகரமானது. அது உங்கள் பிரகாசமான எதிர்காலத்தை பாதிக்கக்கூடியது. கூச்சம் ஏன் வருகிறது, கூச்சம் தவிர்த்தால் வெற்றி எப்படி தேடி வரும் என்பதை பார்ப்போம்...

    பலர் முன் பேச கூச்சம், பந்தியில் பிடித்ததை கேட்டு வாங்க கூச்சம், மற்றவர் முன்னிலையில் தன் பெயரைச் சொல்லி யாராவது அழைத்தாலே கூச்சம், புரியாததை புரியவில்லை என்று சொல்ல கூச்சம் என ஒவ்வொருவரும் விதவிதமாக வெட்கப்படுவது உண்டு.

    குழந்தைகளிடம் கூச்சம் அதிகரிக்க பெற்றோர் முதன்மை காரணமாக அமைகிறார்கள். ஆசிரியர்களும், நண்பர்களும், உறவினர்களுக்கும் அவர்களின் கூச்சத்தில் பங்கு இருக்கிறது.

    வாயை மூடு, அமைதியாக இரு என்று அதட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் எளிதில் கூச்ச சுபாவத்திற்கு உள்ளாகிறார்கள். பெண் பிள்ளைகள் பேசக்கூடாது, சிரிக்கக்கூடாது என்று கட்டுப்படுத்துவதும் பயந்த மற்றும் கூச்சம் மிக்கவர்களாக அவர்களை வளரச் செய்துவிடுகிறது. நல்லபிள்ளைக்கு அடையாளம் பேசாமல் இருப்பது என்ற நற்சான்றிதழ் பலரை அவசியமான நேரத்தில்கூட பேச முடியாத மவுனிகளாக மாற்றிவிடுகிறது. இப்படி வளர்க்கப்படும்
    குழந்தை
    கள் எது நல்லது, எது கெட்டது, எதை சரியாக பேச வேண்டும், எதை பேசாமல் தவிர்க்க வேண்டும் என்பது தெரியாமலே வளர்ந்துவிடுகிறார்கள். பின்னாளில் எதைப் பேசுவதற்கும் தயக்கம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.

    தவறு செய்யும்போது மிரட்டுவதும், கண்டிப்பதும் பிள்ளைகளை பயம் கொண்டவர்களாகவும், தயக்கம் உடையவர்களாகவும் உருவாக்குகிறது. ஆசிரியர்களின் கண்டிப்பும் இதில் அடங்கும். மாணவரின் (குழந்தைகளின்) குறையை சுட்டிக் காட்டும்போதும், பலர் முன்னிலையில் கேவலப்படுத்தும் போதும், இந்த தயக்க உணர்வு பெருகிக் கொண்டே வந்து அவர்களை செயல்பட விடாமல் செய்துவிடுகிறது. அதுவே தாழ்வு மனப்பான்மையாகப் பெருகி, தன்னம்பிக்கையற்றவராக மாற்றிவிடுகிறது. அவர்கள் திறமை இருந்தும் தோல்வியாளர்களாக பின்தங்கிவிடுகிறார்கள்.

    பெண்பிள்ளைகள், மாணவிகளுக்கு இந்த கூச்ச உணர்வு கொஞ்சம் மிகுதியாகவே இருக்கலாம். ஆண்-பெண் இருபாலரும் படிக்கும் பள்ளியில் படிக்காத மாணவிகள், எதிர்பாலினத்தவரை கண்டாலே கூச்சம் கொள்ளலாம். எதையும் பேசத் தயங்கலாம். பயம் கொள்ளலாம். உங்களின் தயக்கத்தை பெற்றோரிடம் விளக்கி தெளிவு பெறலாம்.

    ஆணும், பெண்ணுமாக சேர்ந்து வாழும் சமூகத்தில் யாரையும் புறக்கணித்து வாழத் தேவையில்லை என்பதால் தங்கள் குழந்தைகளை இருபாலரும் பயிலும் பள்ளியில் சேர்ப்பது அவர்களிடம் வேண்டாத தயக்கத்தை தவிர்த்து, எதையும் இயல்பாக எதிர்கொள்ளும் பண்பை வளர்க்கும் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

    கூச்சத்தைப் போக்க சில வழிகளை பின்பற்ற வேண்டும். அவை...

    உங்களுக்கு எப்போதெல்லாம் தயக்கம் வருகிறது என யோசியுங்கள். மேலே சொன்னதுபோல ஆசிரியர் -மாணவர்கள் முன்னிலையிலா, அறிமுகமற்ற நபர்கள் கூடியிருக்கும் பொது வெளியிலா? எந்த சூழல் தயக்கம் தருகிறது என பாருங்கள். ஏன் தயங்குகிறோம்? மற்றவர்களிடம் இல்லாத தயக்கம் எனக்கு மட்டும் ஏன்? இது கூச்சம் கொள்ள வேண்டிய சூழலா? என்பதை யோசித்து அடுத்தமுறை தயக்கமின்றி நடக்கப் பழகுங்கள். மாறாக அதுபோன்ற சூழல்களை தவிர்த்து ஒதுங்கிச் செல்லக்கூடாது.

    ஆசிரியர் கேள்வி கேட்கும்போது பதில் தெரிந்தும் பேச தயக்கமாக இருந்தால், தெரியாது என்று சொல்லி தண்டனை பெறுவதைவிட, தெரிந்ததை முடிந்தவரை சொல்லிப் பார்ப்பது மேல். அது ஒன்றும் அவமானமல்ல. அதுவே தயக்கத்தைப் போக்கும் சரியான வழி.

    நண்பர்களையோ, உறவுகளையோ சந்தித்தால் நீங்களாகச் சென்று பேச்சுக் கொடுத்து பழகுவது கூச்சத்தை விட்டொழிக்க சிறந்த வழி. அவர்கள் உங்கள் தவறுகளை கேலி கிண்டலுடன் சொல்லித் திருத்துவார்களே தவிர, உங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் எதையும் செய்ய மாட்டார்கள். அப்படி அவர்கள் இழிவுபடுத்துவதாகத் தெரிந்தாலும் அதை எதிர்த்துப் போராட நீங்கள் கூச்ச உணர்வை விட்டொழித்தால்தான் முடியும்.

    இப்படி தெரிந்தவர்கள் முன்னிலையில் சகஜமாக பேசிப் பழகினால், பள்ளியிலும், நாளை அலுவலகத்திலும், சமூகத்தில் பலர் முன்னிலையிலும் உங்களால் எதையும் துணிச்சலாக கூறவும், வெற்றி பெறவும் முடியும்.

    மற்றவர்களுடன் உரையாடும்போது, கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசுவது கூச்சம் போக்கும். அவ்வப்போது தலையசைத்து பேச்சை ஆமோதித்தல், புன்னகைத்தல், கைகுலுக்குதல் போன்ற பழக்கங்களும் தயக்கத்தை விரட்டும்.

    பொது நிகழ்ச்சிகள், விவாத அரங்கங்களுக்குச் சென்று பங்கேற்பது, பேசுவதை ஆவலுடன் கவனிப்பது கூச்சத்தைப் போக்கும். மாணவர் குழுக்கள், தேசிய மாணவர் படை போன்ற அமைப்புகளில் சேர்ந்து செயலாற்றுவது கூச்சத்தைப் போக்க சிறந்த வழிகள்.

    சக மாணவர்கள், உறவினர்களிடம் பேசுவதற்கு பொருளே இல்லாவிட்டாலும் விைளயாட்டு, குடும்பம், பிடித்தது, பிடிக்காதது மற்றும் சுற்றுப் பயணங்கள் என பொதுவான விஷயங்களைப் பற்றி பேசலாம். அது உறவை வளர்க்கும், கூச்சம் போக்கும்.

    எதற்கும் ஒத்திகையும், பயிற்சியும் சிறந்த பலன் தரும். பேச்சாளர்களும், பாடகர்களும் எத்தனையோ ஒத்திகைகள், சின்னச்சின்ன மேடைகளை சந்தித்து பயிற்சி பெற்றுத்தான் இறுதியில் உயர்ந்த நிலைக்குச் செல்கிறார்கள். எனவே முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. தவறுகளுக்குத் தயங்கலாம், எண்ணியதைச் சொல்ல தயங்கலாமா?

    கூச்சம் தவிர்ப்போம், வெற்றிகள் குவிப்போம்.
    Next Story
    ×