
இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில் தான் உள்ளது. மாணவன் என்றால் மாண்-அவன் என்று பிரிக்கலாம். மாண் என்றால் பெருமை. மாணவன் என்றால் பெருமைக்குரியவன், மாண்புடையவன் என்று பொருள். அதனால்தான் மாணவர்கள் என்று இந்த பருவத்தினரை ஊக்கப்படுத்தி வருகின்றார்கள். பெருமை மிக்க திறமைகள் இப்பருவத்தில் தான் கிடைக்கும்.
மாணவர்களின் கைகளில் தான் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது. மாணவர்களின் சுயதிறன் திண்மை பெற வேண்டும் என்றால் கல்வியின் தரம் உயரவேண்டும். முக்கியமாக விஞ்ஞானம், கணிதம், கணினி பயிற்சி கற்று புதிய படைப்புகளை உருவாக்கவேண்டும். கல்விப்புரட்சி ஒன்றுதான் மாணவர்களின் சிந்திக்கும் சக்தியை வளர்க்க செய்யும்.
தொட்டனைத்தூறும் மணற்கேணிபோல் தோண்ட தோண்ட பெருக்கெடுக்கும் வல்லமை படைத்தது படிப்பறிவு ஒன்றுதான். படிக்கும் போதே நாம் ஒரு லட்சியத்தை நோக்கி பயணிக்கவேண்டும். லட்சிய பாதையில் எத்தனையோ சறுக்கல்களும், தோல்விகளும் நம் பயணத்தை தடைசெய்யக்கூடும். ஆனால் தோல்வி நமது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் தோல்வி என்பது நம் தன்னம்பிக்கையை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது.
மாணவர்-ஆசிரியர் இடையே அத்தகைய அறிவு பரிமாற்றம் ஏற்படவேண்டும். அதனால் தான் பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்று கூறப்படுகிறது. புதிய கல்வித்திட்டம் அறிவொளி மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கட்டும். இன்றைய மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். ஏனெனில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இந்தியாவின் நலனில் அக்கறை உள்ளது. சுதந்திர இந்தியாவின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்போம், நாட்டை வல்லரசாக உயர்த்துவோம் என்று உறுதிக்கொள்ளுங்கள்.