search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பச்சிளங் குழந்தைகளின் கண்கள் மீது கவனம் தேவை
    X
    பச்சிளங் குழந்தைகளின் கண்கள் மீது கவனம் தேவை

    பச்சிளங் குழந்தைகளின் கண்கள் மீது கவனம் தேவை

    பெரும்பாலான தாய்மார்களால் பிஞ்சுக்குழந்தையின் கண்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா? என்று கண்டறிய முடிவதில்லை. ஆயிரம் குழந்தைகளில் ஒரு சிலவற்றுக்கு கண்களில் பாதிப்பு உள்ளது.
    ‘‘குழந்தை பிறந்ததும் தாய், அந்த குழந்தையின் முகத்தை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிப்பார். பத்து மாதம் சுமந்த கஷ்டமும், பிரசவ வலியில் துடித்த வேதனையும் அப்போதே அவரிடமிருந்து அகன்றுவிடும். தனது குழந்தையை அள்ளி எடுத்து கொஞ்சுவார். தனது குடும்பத்தின் வாரிசான அந்த குழந்தை எந்தவிதத்திலும் அங்க குறைபாடு கொண்டிருக்கக்கூடாது என்று கருதி, அதன் கை கால்கள் முழு வளர்ச்சியுடன் இருக்கிறதா என்றும், கேள்வித்திறன் எப்படி இருக்கிறது என்றும் பரிசோதிப்பார். ஆனால் பெரும்பாலான தாய்மார்களால் அந்த பிஞ்சுக்குழந்தையின் கண்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா? என்று கண்டறிய முடிவதில்லை. ஆயிரம் குழந்தைகளில் ஒரு சிலவற்றுக்கு கண்களில் பாதிப்பு உள்ளது. பிறந்த சில மாதங்களுக்குள் அதை கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சை அளித்து எளிதாக குணப்படுத்திவிடலாம். கவனிக்காமலே விட்டு விட்டால், அந்த குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பார்வைத்திறன் இழப்புகூட ஏற்படலாம்’’ என்று கூறுகிறார், கண் மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

    வெளிநாடுகளில் மருத்துவ கல்வி பயின்று, விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணராகத் திகழும் இவர் அரசு மகப்பேறு மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு பிறந்த குழந்தைகளின் கண்களை பரிசோதித்து, குறைபாடுகள் இருப்பின் சிகிச்சைக்காக பரிந்துரைக்கிறார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை களுக்கு சென்று அங்குள்ள மகப்பேறு மருத்துவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் கண்களில் குறைபாடு இருந்தால் எப்படி கண்டறிவது என்பதற்கான விளக்க நிகழ்ச்சிகளும் நடத்துகிறார். இவரது இந்த சேவையை பாராட்டி இந்தியாவிலும், வெளிநாட்டிலும் விருதுகள் கிடைத்துள்ளன.

    ‘‘தாய் வயிற்றில் இருந்து முழு வளர்ச்சி பெற்று, பத்து மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் பொதுவாகவே இயல்பான கண் வளர்ச்சி பெற்றுவிடுகின்றன. ஆனால் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் கண்கள் பெரும்பாலும் இயல்பான வளர்ச்சியை பெற்றிருப்பதில்லை. 35 வாரங்களுக்கு முன்பு பிறந்துவிடும் குழந்தைகளை, குறைமாதத்தில் பிறந்தவை என்கிறோம். அவை அனேகமாக 2 கிலோவுக்கும் குறைவான எடையை கொண்டிருக்கும். அத்தகைய குழந்தைகளின் கண்களில் நாம் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

    அதுபோல் குழந்தையின்மைக்காக சிகிச்சை பெற்று, தாய்மை யடைந்து பிரசவிக்கும் பெண்களும், ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களும் குழந்தைகளின் கண்கள் மீது கவனம் செலுத்தவேண்டும். சொந்தத்தில் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும், மரபணுகுறைபாடு கொண்ட குழந்தை களுக்கும் விழித்திரை பாதிப்பு ஏற்படலாம்.

    இந்த பாதிப்பை ‘ரெட்டினோபதி ஆப் பிரிமெச்சூரிட்டி’ (ஆர்.ஓ.பி) என்று குறிப்பிடுவோம். ஒருசில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே கண்புரை பாதிப்பு ஏற்படுவதும் உண்டு. கண்புரையை அகற்றினால்தான் குழந்தைகளின் கண்கள் முழு வளர்ச்சிபெறும். மிக அரிதாக லட்சத்தில் ஒரு குழந்தைக்கு கண்களில் புற்றுநோய் கட்டிகூட இருக்கும். அதையும் தொடக்கத்திலே கண்டறிந்து சரியான சிகிச்சை அளித்து, குழந்தையின் பார்வைத்திறன் பாதிக்காத அளவுக்கு சரிசெய்துவிடலாம்.

    குழந்தைகள் பிறந்து 2 மாதம் ஆன பிறகுதான் பார்வைத் திறன் லேசாக கிடைக்கும். அப்போது 8 அங்குலம் முதல் 12 அங்குலம் வரையிலான தூரத்தில் தாய் நின்றால்தான், குழந்தையால் தாயின் முகத்தை பார்க்க இயலும். பின்பு நிறங்களை பார்க்க முயற்சிக்கும். முதலில் சிவப்பு நிறத்தைதான் குழந்தைகள் உணரும். பின்பு மஞ்சள் நிறத்தை அடையாளங்காணும். பேசத் தொடங்கியதும், மெல்ல மெல்ல நிறங்களை அறிந்து சொல்லும். 5 வயதை கடக்கும்போதுதான் முழு பார்வைத்திறனை பெறும்.

    அதனால் மற்ற உடல் உறுப்புகளில் இருக்கும் குறைபாடுகளை எளிதாக அறிந்துகொள்வதுபோல், குழந்தைகளின் கண் பார்வைத்திறன் குறைபாட்டை பெற்றோரால் எளிதாக கண்டறிய இயலுவதில்லை. அதனால்தான் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று பெற்றோர்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்துகிறேன். இதை சேவை உணர்வோடு செய்து வருகிறேன்’’ என்கிறார்.

    ‘குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த விழித்திரை வளர்ச்சியின்மை குறைபாட்டை (ஆர்.ஓ.பி) கண்டறிவது எப்படி?’ என்று கேட்டபோது..

    ‘‘குறைமாதத்தில் பிறக்கும் குழந்தை களுக்கு நுரையீரல் சரியாக வளர்ச்சியடைந்திருக்காது. அதனால் சுவாசிக்கும் திறன் குறையும். அதை ஈடுகட்ட ஆக்சிஜன் கொடுப்பார்கள். சில குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆக்சிஜன் சென்றதால் விழித்திரை பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்தார்கள். அதன் பின்பு சீராக ஆக்சிஜன் கொடுக்கும் நிலை உருவானது. குறைமாதத்தில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் விழித்திரை வளர்ச்சி குறைபாடு இருக்காது. ஒருவேளை இந்த குறைபாடு இருந்தாலும், பிறந்து மூன்று நான்கு வாரங்கள் கழித்துதான் தெரிந்துகொள்ள முடியும்.

    இதற்கு பெற்றோர் என்ன செய்யவேண்டும் என்றால், குழந்தை பிறந்த நான்கு வாரத்திற்குள் கண்களை ‘ஸ்கிரீனிங்’ பரிசோதனை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய கருவி மூலம் எளிதாக இதனை கண்டறிந்துவிடலாம். விழித்திரை வளர்ச்சியின்மை இருந்தால், குழந்தைகளுக்கு லேசர் சிகிச்சை தேவைப்படும். இது மயக்க மருந்து கொடுத்து செய்யப்படுவதில்லை. அறுவை சிகிச்சையும் அவசியம் இல்லை. குழந்தைகளுக்கு நெருக்கடிகொடுக்காமல் 15 முதல் 20 நிமிடத்தில் இந்த லேசர் சிகிச்சையை முடித்துவிடலாம். இது குழந்தைகளின் எதிர்காலத்தோடு தொடர்புடையது என்பதால் பெற்றோர் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இப்போது கிராமங்களுக்கும் சென்றும் இந்த சேவையை செய்துகொண்டிருக்கிறோம்’’

    ‘கிராமத்து தாய்மார்களிடம் இருந்து உங்களுக்கு கிடைத்த அனுபவம் என்ன?’ என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில்..

    ‘‘உலக அளவிலான எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், இந்தியாவில்தான் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் நகரங்களைவிட கிராமத்து தாய்மார்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. குழந்தையின் உடலில் வெளிப்புறமாக எந்த குறைபாடு இருந்தாலும் அவர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் தெளிவாக கண்டறிந்துவிடுகிறார்கள். அவர்களால் குழந்தையின் உள்உறுப்பான கண்களின் பாதிப்பை உணரமுடிவதில்லை. இது பற்றி கிராமத்து தாய்மார் களிடம் எடுத்துக்கூறி, பிறந்த குழந்தைகளை தேடிச்சென்று ‘ஸ்கிரீனிங்’ பரிசோதனை செய்கிறோம். இதுவரை 2 லட்சம் குழந்தைகளுக்கு இந்த பரிசோதனையை செய்திருக்கிறோம். கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாக லேசர் சிகிச்சை செய்திருக்கிறோம்.

    இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா போன்ற பிற நாடுகளிலும் இத்தகைய பாதிப்பு இருக்கிறது. அதனால் உலக சுகாதார நிறுவனமும் இதில் அதிக கவனம் செலுத்துகிறது. உலக சுகாதார நிறுவனம் தனது செயல்திட்டத்தில் ‘விஷன் 2020 புரோகிராமில்’ இந்த விழித்திரை வளர்ச்சியின்மை விழிப்புணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அதனால் உலகமே இப்போது குழந்தைகளின் கண்களின் மீது தனது கவனத்தை ஆழமாக பதித்திருக்கிறது.

    நாங்கள் பச்சிளங்குழந்தைகளுக்கு உதவுவதற்காக ‘ப்ராஜெக்ட் விஷன் ஆப் வீல்ஸ்’ என்ற திட்டத்தையும் நடைமுறைப் படுத்துகிறோம். அதற்கான வாகனத்தில் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யக்கூடிய மெஷின்கள் இருக்கும். அதனை கிராமங்கள் தோறும் கொண்டு சென்று, பயிற்சி பெற்ற தொழில்நுட்ப ஊழியர்கள் குழந்தைகளை பரிசோதித்து அங்கிருந்து குழந்தைகளின் விழித்திரையை படமெடுத்து அனுப்புவார்கள். அதனை நாங்கள் இங்கிருந்து ஆய்வு செய்து, விழித்திரை வளர்ச்சியின்மை இருந்தால் அந்த குழந்தையை தாயாருடன் அந்த வாகனத்திலே அழைத்து வந்து சிகிச்சை அளித்து குணப்படுத்துகிறோம். இதனை சேவை உணர்வோடு பல்வேறு சேவை நிறுவனங்களின் உதவியோடு செய்து வருகிறோம். இது எங்களுக்கு மிகுந்த ஆத்மதிருப்தியை தருகிறது’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், டாக்டர் வசுமதி வேதாந்தம்.

    பாராட்டவேண்டிய சேவைதான்!

    டாக்டர் வசுமதி வேதாந்தம்
    Next Story
    ×