search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காயப்படுத்தும் பெற்றோரை கலங்கவைக்கும் குழந்தைகள்
    X
    காயப்படுத்தும் பெற்றோரை கலங்கவைக்கும் குழந்தைகள்

    காயப்படுத்தும் பெற்றோரை கலங்கவைக்கும் குழந்தைகள்

    குழந்தைகளின் உணர்வுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும். மாறாக குழந்தைகளை அடிமைப்படுத்தி வளர்க்க பெற்றோர் முயற்சிக்கக்கூடாது.
    குழந்தைகள் பெற்றோர்களால் உருவாக்கப்படும் பொம்மைகள் அல்ல. அவர்களும் உணர்வுள்ள மனிதர்கள். அதனால் குழந்தைகளின் உணர்வுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும். மாறாக குழந்தைகளை அடிமைப்படுத்தி வளர்க்க பெற்றோர் முயற்சிக்கக்கூடாது. அவர்களிடம் அன்பு செலுத்தவேண்டும். ஆனால் அளவுக்கு மீறிய அன்பு செலுத்தி, அவர்களிடம் பெற்றோர் அடிமையாகிவிடவும்கூடாது. அதே நேரத்தில் எல்லைகடந்து அடக்குமுறையை கையாளுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. குழந்தைகளை வார்த்தைகளால் காயப்படுத்துவதும் தவிர்க்கப்படவேண்டும்.

    இப்போது கூட்டுக்குடும்ப வாழ்க்கை நடைமுறையில் இல்லை. எங்கு பார்த்தாலும் தனித்தனி குடித்தனங்கள். ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளையே பெற்றுக்கொள்கிறார்கள். அந்த குழந்தைகளும் தோல்விகளை தாங்கிக்கொள்ளும் பக்குவத்திலோ, சூடான வார்த்தைகளை ஜீரணித்துக்கொள்ளும் மனநிலையிலோ இல்லை. பெற்றோர்களின் வார்த்தைகளால் அவர்கள் எளிதாக காயமடைந்து கவலைப்படுகிறார்கள். கவலை அதிகமாகும்போது, பெற்றோரிடமிருந்து விலகி காணாமலும் போய்விடுகிறார்கள். அதன் மூலம் பெற்றோருக்கு தண்டனை கொடுப்பதாக கருதி தங்கள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடுகிறார்கள்.

    பள்ளிப் பருவத்தில் இருக்கும் சிறுவர்- சிறுமியர்கள் திடீரென்று காணாமல் போய்விடுவது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மும்பையை சேர்ந்த இரண்டு பள்ளிச் சிறுவர்கள் காணாமல் போனதும், யாரோ பணத்திற்காக அவர்களை கடத்திச் சென்றுவிட்டார்கள் என்ற பயத்தில் பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தார்கள். இரண்டு சிறுவர்களும் நண்பர்கள். இருவரது பெற்றோரும் சுயதொழில் செய்து வருகிறார்கள்.

    போலீஸ் பல வழிகளில் தேடுதல் வேட்டை நடத்தியும், உடனடியாக சிறுவர்களை கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் நிம்மதியைத் தொலைத்த பெற்றோர் தங்கள் குழந்தைகள் இறந்துவிட்டார்களோ என்று அஞ்சினார்கள். இரண்டு வாரங்களுக்கு பிறகு பக்கத்து மாநிலத்தில் அந்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். போலீசார் அவர்களிடம், வீட்டை விட்டு ஏன் வெளியேறினீர்கள்? என்று கேட்டபோது, தங்கள் பெற்றோர்கள் மீது அடுக்கடுக்காய் குற்றஞ்சாட்டினார்கள். ‘எதற்கெடுத்தாலும் திட்டுகிறார்கள். சில நேரங்களில் அடிக்கிறார்கள். எப்போதாவது அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்துகிறார்கள். அவ்வப்போது அடிமைகள் போலவும் நடத்துகிறார்கள். அதனால் அவர்களை கவலைப்படவைத்து பழிவாங்கவேண்டும் என்பதற்காகத்தான் வீட்டைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலத்திற்கு வந்தோம்’ என்றிருக்கிறார்கள்.

    வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னால் இருவரும், அதற்காக வெளிப்படையாக பலமுறை விவாதித்து திட்டமிட்டிருக்கிறார்கள். பக்கத்தில் உள்ள மைதானத்திற்கு சென்று, தங்களுக்கு பெற்றோர் மீதிருக்கும் கோபத்தை வெளிப்படுத்த என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று விவாதித்திருக்கிறார்கள். காயப்படுத்தியவர்களை கலங்கடிக்கச் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு, அந்த காணாமல் போகும் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர்கள் நினைத்துப்பார்க்கவே இல்லை. மாநிலம் விட்டு மாநிலம் சென்றபோது அவர்கள் சமூக விரோதிகளின் கண்களில்பட்டிருந்தால் தங்கள் நிலை என்னவாகியிருக்கும் என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருக்கவே இல்லை.

    டெல்லியில் இதேபோன்று ஒன்றாக சில பள்ளிச்சிறுமிகள் காணாமல் போனார்கள். பதறிப்போன பெற்றோர் காவல் துறையின் உதவியை நாட, அவர்கள் அதிவேகமாக நகரெங்கும் தேடி, அந்த சிறுமிகளை கண்டுபிடித்து வீடு கொண்டுபோய் சேர்த்தனர். ‘உங்கள் எதிர்காலத்திற்காக நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஏன் இப்படி எங்களை கண்ணீர்விட வைத்துவிட்டீர்கள்?’ என்று கேட்டபோது, பதிலுக்கு அந்த சிறுமிகளும் அழுதுகொண்டு, ‘நாங்கள் வெளியே செல்ல நீங்கள் அனுமதிப்பதில்லை. ஆன்லைன் வகுப்புகளும் எங்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. வீட்டிற்குள்ளே அடைந்துகிடக்க பிடிக்காததால் நாங்கள் விளையாட்டுத்தனமாகத்தான் வெளியே கிளம்பினோம். ஆனால் பெற்றோரிடம் சண்டையிட்டு வந்த தோழி ஒருத்தி எங்களை தவறாக வழிநடத்தி வெகுதூரம் அழைத்துச்சென்றுவிட்டாள். ஒருகட்டத்தில் என்னசெய்வதென்று தெரியாமல் பயந்துபோய் அங்கே இருந்த போலீஸ்காரர் உதவியை நாடினோம்’ என்றிருக்கிறார்கள். மனங்குழம்பிய நிலையில் இருந்த அந்த சிறுமிகளை, அவர்களது தோழி தூண்டிவிட்டு ‘வீட்டைவிட்டு வெளியேறுவோம்’ என்று கூறியதால் இவர்களும் அவள் பின்னால் சென்றிருக்கிறார்கள்.

    இதில் கவலைக்குரிய இன்னொரு விஷயம் என்னவென்றால், முன்பு குழந்தைகளை கடத்திச்செல்பவர்கள்தான் குழந்தைகளை விடுவிக்க பேரம் பேசுவார்கள். இப்போது ஒரு சில சிறுவர்- சிறுமியர்கள் வெளியே எங்காவது போய் உட்கார்ந்துகொண்டு, தாங்கள் வீடு திரும்ப பெற்றோருக்கே நிபந்தனை விதிக்கிறார்கள். இவைகளை கருத்தில் கொண்டு குழந்தை வளர்ப்பில் பெற்றோர் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

    Next Story
    ×