search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை சேமிக்கத் தூண்டும் அசத்தலான ஐடியாக்கள்
    X
    குழந்தைகளை சேமிக்கத் தூண்டும் அசத்தலான ஐடியாக்கள்

    குழந்தைகளை சேமிக்கத் தூண்டும் அசத்தலான ஐடியாக்கள்

    குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் குறித்து உங்களுக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்லுங்கள். மேலும், அது குறித்து தெளிவாக விளக்கும் முகவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து குழந்தைகளுடன் உரையாட வையுங்கள்.
    40 வயதுக்குப் பிறகே பலர் சேமிப்பு குறித்து அக்கறை கொள்கிறார்கள். ’ஒரு பத்தாண்டுக்கு முன் சேமிக்கும் யோசனை வந்திருந்தால், நாலைந்து லட்சமாவது கையில் இருந்திருக்குமே’ என்று புலம்பும் பலரை நாம் பார்த்திருப்போம்.

    உண்மையில் சேமிப்பைத் தொடங்க சரியான வயதுதான் என்ன?

    சட்டென்று உங்களின் பதில்… சம்பாதிக்க ஆரம்பித்ததுமே சேமிக்கத் தொடங்கிவிட வேண்டும் என்பதுதான்.

    ஆனால், சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுதான் செலவு செய்யத் தொடங்குகிறோமா… என்ன?

    இல்லைத்தானே… நாம் செலவு செய்ய எப்போது தொடங்குகிறமோ…. அப்போதே நாம் சேமிக்கவும் தொடங்குவதே சரியானது.

    ஆம். பாக்கெட் மணியாக வரும் காலத்திலிருந்தே சேமிக்கக் கற்றுக்கொடுப்பது அவசியம். சேமிப்பு என்பது ஒரு பழக்கம் மட்டுமல்ல. அது ஒரு மனநிலை. அந்த மனநிலையைக் குழந்தை பருவத்திலிருந்து கற்றுத்தர வேண்டும்.

    அதற்காக குழந்தைகள் விரும்பி வாங்கித் தின்பதைத் தவிர்க்கச் சொல்லி காசு சேமிக்க சொல்ல வேண்டுமா? என்று கேட்காதீர்கள்.

    பத்து ரூபாய் பாக்கெட் மணியில் ஒரு ரூபாயை மிச்சம் பிடிக்கச் சொல்வதே சேமிப்பின் தொடக்கம்.

    குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக நீங்கள் நிறைய திட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்வீர்கள். அது உங்களுக்குக் கூடுதல் போனஸ். அதன்வழியே நீங்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

    எது எப்படியானாலும் சேமிப்பின் வழியே உங்கள் குடும்பத்திற்கு பலன் கிடைக்கப்போவது என்பது நிச்சயமான ஒன்று.

    சரி… குழந்தைகளுக்குச் சேமிப்பு பழக்கத்தைத் தூண்டும் ஐந்து யோசனைகள்.

    முதலில் நீங்கள் சேமிக்கத் தொடங்குங்கள். எப்படிச் சேமிக்கிறீர்கள்… அதை எவ்வாறு முதலீடு செய்கிறீர்கள் என்பதை குடும்பத்துடன் உங்கள் குழந்தையைச் சேர்த்துக்கொண்டு உரையாடுங்கள். அதற்கான ஆவணங்கள் இருந்தால் அதை எளிமையாகச் சொல்லி எல்லோருக்கும் புரிய வைய்யுங்கள்.

    இது ஒருவகையில் குழந்தைகளின் மனதைத் தூண்டி விடுவதற்கான முயற்சி அல்லது சேமிப்பதால் பலன் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

    அவர்களுக்குத் தரும் பாக்கெட் மணியில் பத்து சதவிகிதம் சேமிக்கச் சொல்லுங்கள். அப்படிச் செய்தால் பாராட்டுங்கள். வீட்டுக்கு வரும் உங்கள் நண்பர்களிடம் கூறி பாராட்டச் சொல்லுங்கள்.

    ஒருவேளை பாக்கெட் மணியில் சேமிக்க மறுக்கிற குழந்தை எனில், நீங்கள் கூடுதலாக பத்து சதவிகித பணம் தந்து அதைச் சேமிக்கச் சொல்லுங்கள். ஒரு மாத முடிவில் எவ்வளவு சேமித்திருக்கிறார்களோ அதன் இன்னொரு மடங்கை நீங்கள் தந்து அதை வங்கி அல்லது உண்டியலில் போடச் சொல்லலாம்.
      
    உங்கள் குழந்தையின் சேமிப்பில் ஒரு பொருள் வாங்குங்கள். அதை எல்லோரும் பார்க்கும் இடத்தில் வைத்து, அதன்மீது ‘இந்தப் பொருள் எங்கள் குழந்தையின் சேமிப்பில் வாங்கியது’ என்று எழுதி ஒட்டுங்கள். அதைப் பார்க்கும்போதெல்லாம் சேமிக்க ஆசை ஏற்படும்.

    குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் குறித்து உங்களுக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்லுங்கள். மேலும், அது குறித்து தெளிவாக விளக்கும் முகவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து குழந்தைகளுடன் உரையாட வைய்யுங்கள்.

    சிறுவர் சேமிப்பு திட்டம் குறித்து எங்கேனும் நிகழ்ச்சிகள் நடந்தால் அவசியம் அழைத்துச் செல்லுங்கள்.

    இவையெல்லாம் உங்கள் குழந்தையின் மனநிலையில் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கும். பிறகு, சேமித்த பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பதையும் கற்றுக்கொடுங்கள். அதுவும் மிகவும் முக்கியமானது.
    Next Story
    ×