search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்களுக்கு தேர்வு அறிவுரை
    X
    மாணவர்களுக்கு தேர்வு அறிவுரை

    மாணவர்களே தடைகளை உடைத்திடு.. சரித்திரம் படைத்திடு..

    10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத செல்லும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    காலங்கள் பல நம்மைக் கடந்து செல்லும். கலக்கம், பயம், சோர்வு, வறுமை, பிணி, தோல்வி அனைத்தும் நம் அன்றாட வாழ்வில் வந்து வந்து போகும். இது குறித்து கவலைப்படுவதோ, புலம்புவதோ நாம் செய்யக்கூடாத ஒன்று. இதைச் செய்வதினால் எந்தப் பயனும் இல்லை. இவற்றை வளரும் மாணவர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் இதை கருத்தில் கொள்ளவேண்டும். தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் வருமாறு:-

    * தேர்வு பயம் எல்லோருக்கும் இருக்கலாம். தோல்வியை வரவழைக்கக் கூடியது பயம் மறதியைக் கூட்டும். பயத்தை விலக்கி பயிற்சியை மேற்கொள்ளும்போது உயர் என்ற உன்னத நிலை நம்மைத் தேடி வரும் என்பது திண்ணம்.

    * காலத்தின் மீது பழி போடாமல், சூழ்நிலையைச் சுட்டிக்காட்டாமல் வாழ்நிலையை எதிர் நோக்கிச் செயல்படு. தேர்விற்கான காலம் குறைவுதான். மனம் இருந்தால் மார்க்கமுண்டுஎன்பர். இனியாவது செயல்படு, வரலாறு உன்னை வரவேற்கக் காத்திருக்கிறது.

    * நேரத்தைத் திட்டமிடுங்கள். கால அட்டவணை ஒன்றை உங்களுக்காக தயார் செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து மணிக்கணக்கில் உட்கார்ந்து படிக்க வேண்டாம். இடையிடையே சற்றே ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

    * பாடங்களைப் புரிந்து படியுங்கள். மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகளை மட்டும் மனப்பாடம் செய்யுங்கள். பாடங்களை மீண்டும் மீண்டும் படிப்பது அவசியம். ஒரு பாடத்தை படித்து முடித்ததும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு படித்ததை மனதுக்குள் அசை போடுங்கள். படித்ததை நினைவுக்கு கொண்டு வருதல் ஒரு சிறந்த திறமை ஆகும்.

    * படித்த பாடங்களை எழுதிப் பார்ப்பதும் அவசியம். குறிப்பாக கணக்குப் பாடங்களை எழுதிப் பார்க்க வேண்டும். முக்கியமான சூத்திரம், சமன்பாடுகளை எழுதிப் பாருங்கள். மி.சி.ம., மி.பெ.வ, காரணி, பகுத்தல், வர்க்கமூலம் போன்ற கணக்குகளை படித்தால் தேர்வில் எளிதாக கூடுதல் மதிப்பெண் பெறலாம்.

    * உணர்ச்சி வசப்படாதீர்கள். கோபம் வேண்டாம், பதற்றம் வேண்டாம். இவை உங்களின் நினைவாற்றலை அதிகம் பாதிக்கும். இரவு அதிக நேரம் கண் விழித்துப் படிப்தைவிட, அதிகாலையில் எழுந்து படிப்பது சிறந்தது. நல்ல சத்துள்ள உணவை சாப்பிடுங்கள். அப்போதுதான் மூளை நன்றாக வேலை செய்யும். நொறுக்குத் தீனிகளை தவிர்த்திடுங்கள்.

    * திட்டமிடல், தயார் நிலை மற்றும் தேர்வு எழுதும் முறை ஆகிய மூன்றையும் சரியாக பின்பற்றி செயல்படுத்துவதன் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். இந்த நிலையில் ஏற்கனவே படித்த பாடங்களைப் படிப்பது, படிக்காத பாடங்களைப் படிப்பது என்ற நிலைகள் உள்ளன. எனவே மாணவர்கள் ஓர் அட்டவணை அமைத்து அதன்படி படிப்பதற்குத் தயாராக வேண்டும்.

    * தேர்வு எப்படி எழுதுவது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். இதற்கு தேர்வில் என்ன கேள்வி கேட்கப்பட்டுள்ளது என்பதை நன்றாக உள்வாங்கிக் கொண்டு அதற்கான பதிலை தெளிவாக மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். வினாவை ஒரு முறைக்கு இருமுறை படித்துவிட்டு அதற்கு சரியான பதில் அளிப்பதே முழுமையான மதிப்பெண் பெறுவதற்கான வழி. அத்துடன் தேவையான பகுதிகளில் படங்கள், உதாரணங்களை குறிப்பிடுதல், முக்கியமான பகுதிகளில் அடிக்கோடு இடுதல் வேண்டும்.

    * ஆசிரியர்களின் அறிவுறுத்தல்படி பாடங்களை எழுதிப் படித்தால் வெற்றி நிச்சயம். பழைய வினாத்தாள்கள், புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கேள்வி, பள்ளியில் நடைபெற்ற மாதிரி தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை எழுதிபார்த்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.

    * அடித்தல் திருத்தல் இல்லாமல் தெளிவான கையெழுத்து கூடுதல் மதிப்பெண் பெற்றுத்தரும். காலை, மாலை, பகல் என திட்டமிட்டு ஒவ்வொரு பாடத்திற்கு இவ்வளவு நேரம் என ஒதுக்கி படியுங்கள்.

    * பாடங்களை உடனே படிப்பதுடன், அடிக்கடி நினைவு படுத்திப் பாருங்கள். எழுதிப் பார்த்து உங்களுக்குள் திருத்திக் கொண்டால் மனதில் பதிந்தவை அழியாது. நீங்கள் செய்த தவறுகள் விளங்கும். அந்தத் தவறுகளை நீங்கள் மீண்டும் செய்ய மாட்டீர்கள். எளிதாக அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறலாம். தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் படியுங்கள்.

    வெற்றி இலக்கை நோக்கிப் பயணிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
    Next Story
    ×