search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுடன் செலவிடும் நேரம், குடும்பத்தின் மூலதனம்
    X
    குழந்தைகளுடன் செலவிடும் நேரம், குடும்பத்தின் மூலதனம்

    குழந்தைகளுடன் செலவிடும் நேரம், குடும்பத்தின் மூலதனம்

    குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள், எவ்வாறு வளர்கிறார்கள் என்று கூடத்தெரியாமல் பெற்றோர்கள் வீட்டில் நடந்து கொள்ளுதல் மன நிம்மதியற்ற வாழ்க்கை போராட்டத்திற்கு உங்கள் குடும்பம் போய்க்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
    ஒரு பெற்றோர், போலீஸ் நிலையம் வந்து 9-ம் வகுப்பு படிக்கும் தங்கள் மகளை அந்த தெருவில் வசிக்கும் ஒரு பையன் ஏமாற்றி கூட்டி சென்றுவிட்டான். மகளை மீட்டு தரவேண்டும் என்று கூறி கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர். வேறு ஒரு தம்பதி தினமும் அருகில் இருக்கும் ஒரு மளிகை கடைக்கு சென்று வந்த தன் பத்து வயது மகளிடம் அந்த கடைக்காரர் தவறுதலாக நடந்து கொண்டார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இப்படி நடைபெறும் பல சம்பவங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறைபாட்டை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி காட்டுகின்றன.

    இப்படி குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குபவர்கள் நம்மை சுற்றியிருப்பவர்கள், நம்மிடம் தினமும் பார்த்து பேசி பழகி கொண்டு இருப்பவர்கள் என்ற உண்மை அதிர்ச்சியை அளிக்கிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் தினமும் 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 22 சதவீதம் அதிகம். இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் வேலைக்கு செல்வது, வியாபாரத்தை கவனிப்பது என்று குழந்தைகளுடன் பேசுவதற்கு கூட நேரமின்றி எந்திரக்கதியில் பரபரப்புடன் இயங்கி கொண்டு இருக்கிறார்கள்.

    குழந்தைகளிடம் அன்பு காட்டி, அரவணைத்து அவர்கள் எந்த சூழ்நிலையில், என்ன தேவையில் உள்ளார்கள் என்பதை அறிந்து அதற்கான நேரம் ஒதுக்கி அறிவு வளர்ச்சியுடன், சுற்றி நடப்பவைகள் பற்றியும், ஒழுக்கத்தையும் கற்று தரவேண்டிய கடமையும், பொறுப்புணர்வும் பெற்றோர்களுக்கு உண்டு.

    தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கணினி மயம், இணைய வசதி, ஆண்ட்ராய்டு தொலைபேசி என எல்லாவற்றிலும் குழந்தைகளும் இணைந்திருப்பதால் அவர்கள் பார்க்கக்கூடாத இணையதளங்களை பார்க்க நேரிடுகிறது. இதனால் நல்லது எது? கெட்டது எது? என்று அவர்களால் தீர்மானிக்க முடியாத நிலையில் மனசஞ்சலத்துக்கு ஆளாகிறார்கள். இதன்காரணமாக சிறு வயதிலேயே அவர்கள் கவனம் படிப்பு தவிர மற்ற விஷயங்களில் திசை மாறிச்செல்ல வாய்ப்பாக மாறிவிடுகிறது. இந்த விபரீத நிலையை தடுக்கும் விதத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் சிறுவயதிலேயே அவர்களுடன் உட்கார்ந்து பேசி, கொஞ்சி விளையாடி மகிழ்ந்து அன்புகாட்டி அரவணைத்து செல்ல வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் வாலிப பருவத்தில் வேறு நபர்களால் சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறமாட்டார்கள். வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் வீட்டை தங்கும் விடுதிபோல பயன்படுத்தாமல் குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

    நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போல் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வீட்டில் நல்ல பண்புகளை குறிப்பாக பொய் கூறாமை, உண்மையாக நடத்தல், விட்டுக்கொடுத்து பழகுதல், கடின உழைப்பின் அவசியம், உடற்பயிற்சி, விளையாட்டின் அவசியம், பாடப்புத்தகம் தவிர மற்ற புத்தகங்கள் படித்தல் போன்றவற்றை சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். தேவையற்ற செயல்களில் நேரம் செலவிடுவதை தவிர்த்து முக்கிய வேலைகளில் நேரத்தை செலவிடச் செய்ய உடன் இருந்து சொல்லி கொடுக்க வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை, பள்ளியில் படிக்கும் தோழிகளை மதித்து நடந்துகொள்ளுதல், ஒழுக்கத்துடன் பழகுதல், பேசுதல் போன்றவற்றை வீட்டிலும், பள்ளியிலும் கற்றுத்தர வேண்டும்.

    சிறுவயதிலேயே மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வாழ்கையை பாழாக்கிக்கொண்டு பெற்றோர்களையும் நிம்மதியின்றி வாழும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவதை தடுக்க சரியான வழிகாட்டல் அவசியம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது பழமொழி. சிறு வயது முதலே நற்குணங்களுடன் வளரும் சூழ்நிலையை குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.

    இக்கால பெற்றோர்கள் தான்பட்ட துன்பம் குழந்தைகள் படக்கூடாது என அவர்களின் தேவைக்கு அதிகமாகவே தேவையில்லாத வசதிகளை கேட்டவுடன் செய்வதால், குழந்தைகளுக்கு கஷ்டம் தெரிவதில்லை. கஷ்டப்பட்டு வாங்கும் எந்த பொருளுக்கும் விலை அதிகம். எந்த ஒரு பொருள் கொடுக்கும்போதும் அதன் மதிப்பு, கிடைப்பதில் உள்ள கஷ்டம் சொல்லி வளர்த்தால் அப்பொருளின் மதிப்பு உயர்ந்து நிற்கும். பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் நடத்துவதன் மூலம் ஒழுக்கத்தை அவர்கள் படிக்கும் ஒரு பாடமாகவே ஒரு குறிப்பிட்ட வகுப்பு வரை சொல்லி கொடுத்தல் அவசியம்.

    மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டிலும், மனித மாண்புகளுக்கு முக்கியத்துவத்தை அளித்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற கற்றுக்கொடுக்க வேண்டும். நன்கு பள்ளியில் படித்து மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம் வாழ்கையில் வென்றுவிடவும் இல்லை, நன்றாக படித்து மதிப்பெண் எடுக்காதவர்கள் எல்லாம் வாழ்க்கையில் தோற்று விடவும் இல்லை. இது எல்லாவற்றையும் தாண்டி ஆண் பிள்ளையானாலும், பெண் பிள்ளையானாலும் சரியான முறையில் வளர்க்கப்படுகிறார்களா? என்பதை உறுதி செய்யும் பொறுப்பு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அதிகம் உள்ளது என்பதே நிதர்சன உண்மை.

    குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள், எவ்வாறு வளர்கிறார்கள் என்று கூடத்தெரியாமல் பெற்றோர்கள் வீட்டில் நடந்து கொள்ளுதல் மன நிம்மதியற்ற வாழ்க்கை போராட்டத்திற்கு உங்கள் குடும்பம் போய்க்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இதை உணர்ந்து குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்யுங்கள், அவர்களின் வாழ்க்கைக்கு வலுவான அடித்தளமாக இருங்கள். மீன்பிடிக்க கற்றுக்கொடுங்கள், நீங்கள் பிடித்த மீன்களை எவ்வளவு தொழில் நுட்பத்துடன் சேமித்தாலும், அதிக நாட்களுக்கு அவை உதவாது. சொத்தை சேமிப்பதை விட்டுவிட்டு உங்கள் குடும்ப சொத்தான உங்கள் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து வார்ப்பு எடுத்தால் குடும்ப வாழ்க்கை இனிமையாக, மகிழ்ச்சியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    முனைவர் ஜெ.லோகநாதன், ஐ.பி.எஸ். போலீஸ் டி.ஐ.ஜி. தஞ்சாவூர் சரகம்.
    Next Story
    ×