search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு கல்வி
    X
    குழந்தைகளுக்கு கல்வி

    குழந்தைகளுக்கு கல்வி சுமையானதா? சுவையானதா?

    எழுத்தறிவு என்பது கல்வியின் ஒரு பக்கம். அறம் சார்ந்த வாழ்வியல் முறைகளை இளம் பருவத்திலிருந்தே சிறார்களுக்கு கற்பிப்பது கல்வியின் மறுபக்கம்.
    பள்ளியில் படித்துவரும் தங்களது குழந்தை மீது நம்பிக்கை கொண்டு அக்குழந்தையின் திறமைக்கு ஏற்ற படிப்பைத் தேர்வு செய்யும் மனப்பக்குவத்தை பல பெற்றோர்கள் வளர்த்துக் கொள்ளாத துரதிர்ஷ்டவசமான சூழலில் நம் சமூகம் இருந்து வருகிறது. பெற்றோர்களின் இம்மாதிரியான செயல்பாடே வளர்ந்து வரும் இளந்தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கான தடைகற்கள் என்பதை பல பெற்றோர்கள் உணர்ந்து கொள்ளாமல் புறந்தள்ளி விடுகின்றனர். அவர்களின் பார்வையில் அதிக வருமானம் சம்பாதிக்க வழிவகுக்கும் படிப்புதான் சிறந்தது என்றும் அம்மாதிரியான படிப்பில் தன் மகனையோ மகளையோ எப்படியாவது சேர்த்து விட வேண்டும் என்றும் பெரும்பாலான பெற்றோர்கள் முடிவெடுத்து அதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருவதை காணமுடிகிறது.

    இம்மாதிரியான சூழலுக்குப் பெற்றோர்கள் மட்டும் காரணம் என்று கூறிவிட முடியாது. இன்றைய கல்வி முறையும் ‘கார்பரேட்‘ நிறுவனங்்்களைப் போன்று நடத்தப்பட்டுவரும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளும் பெற்றோர்களை இம்மாதிரியான முடிவுகள் எடுக்க தூண்டப்படுகிறது என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை. கை நிறைய சம்பாதிக்க உதவிகரமாக இருக்கும் படிப்பைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதால் மட்டும் இளைய தலைமுறையினரின் வாழ்வும் அவரைச் சூழ்ந்துள்ள சமுதாயமும் மேன்மை அடைந்துவிடுமா? என்ற கேள்விக்கான விடை தேடும் முயற்சி கள யதார்த்த நிலையை உணர்த்துகிறது.

    எப்படிபட்ட கல்விமுறை சமுதாயத்தைச் செழுமைப் படுத்தும் என்பது குறித்து கல்வித்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த தலைசிறந்த கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு அவரது அனுபவத்தை ஒருமுறை பகிர்ந்து கொண்டார். 1960-களின் இறுதியில் இந்திய நல்லெண்ணத் தூது குழு ஒன்றின் உறுப்பினராக மேலைநாடு ஒன்றுக்கு அவர் சென்றிருந்தார். பயண திட்டத்தின்படி உயர்ரக தொழிற்சாலை ஒன்றினைப் பார்வையிட்டு அந்த குடியிருப்பு வளாகத்தினுள் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக செயல்பட்டு வந்த ஆரம்ப பள்ளியைப் பார்வையிட அவர் சென்றார்.

    வகுப்பறையில் இருந்த சிறார்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடமும் பள்ளிக் குழந்தைகளிடமும் சிறிது நேரம் உரையாட அனுமதி கேட்டுப் பெற்றார் நெ.து.சுந்தரவடிவேலு. அவருடைய சட்டை பாக்கெட்டிலிருந்த பேனாவை எடுத்து வகுப்பறையில் அமர்ந்திருந்த குழந்தைகளிடம் காண்பித்து அந்த நாட்டு நாணய மதிப்பின்படி இந்த பேனாவை ‘ஐந்துக்கு வாங்கி பத்துக்கு விற்பனை செய்தால் என்ன கிடைக்கும்?‘ என்று கேட்டார்.

    ‘ஆறு மாதச் சிறைத் தண்டனை கிடைக்கும்‘ என்று குழந்தைகள் அனைவரும் உரக்கக் குரல் கொடுத்தனர். அக்குழந்தைகள் அவ்வாறு பதிலளிக்கக் காரணம் என்ன? என்று புரியாமல் ஆசிரியரைப் பார்த்தார் நெ.து.சு. ஒரு பொருளை இரண்டு மடங்கு விலைக்கு விற்பனை செய்வது குற்றமாகும். அதற்குரிய தண்டனையைத்தான் குழந்தைகள் கூறினர்‘ என்று விளக்கமளித்தார் அந்த ஆசிரியர்.

    ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டு திகைத்து நி்ன்றார் நெ.து.சு. வியாபாஇரத்திற்கும் மோசடிக்கும் உள்ள வித்தியாசத்தை ஆரம்பள்ளியில் படித்துவரும் குழந்தைகளின் மனதில் பதியும் வகையில் வடிவமைக்கப்பட்ட கல்வியை நேரில் கண்ட அவரது மனதில் நம் நாட்டு பாடத்திட்டம் நிழலோடியது. பால் வியாபாரி ஒருவர் 10 லிட்டர் பாலை வாங்கி அதில் 2 லிட்டர் தண்ணீர் கலந்து விற்பனை செய்தால் அந்த வியாபாஇரத்தில் அவருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்? போன்ற கருத்துகளை உள்ளடக்கிய பாடங்களைப் பள்ளி மாணவர்களுக்குப் போதிக்கப்படுவது அவர்களின் மனதில் எத்தகைய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்? அதற்கான தீர்வு என்ன? என்பது குறித்த சிந்தனைகளுடன் அந்த பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் இருந்து விடை பெற்றார் நெ.து.சு.

    நெ.து.சு.வின் மனதை வருடிய இச்சம்பவம் நிகழ்ந்து 50 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. காலப்போக்கில் கல்வித்துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாடத்திட்டங்களின் தரமும் உயர்த்தப்பட்டுள்ளன. படித்து பட்டம் பெற்ற பல்லாயிரக்கணக்கான நம் நாட்டு இளைஞர்கள் ஆண்டு தோறும் வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்று கை நிறைய டாலர்களில் சம்பாதிக்கும் நிலையை இன்றைய கல்விமுறை ஏற்படுத்தி உள்ளதை மறுக்க முடியாது.

    அதே சமயம் அறம் சார்ந்த வாழ்க்கை முறையிலிருந்து இன்றைய சமுதாயத்தை மடை மாற்றிச் செல்லும் தன்மை கொண்டதாக இன்றைய கல்விமுறை அமைந்துள்ளதா? என்ற சந்தேகமும் எழுகிறது. நேர்மையாக வாழ வேண்டும். சட்டத்தை மதித்துச் செயல்பட வேண்டும்். அநீதிகளுக்கு மறைமுகமாக கூட துணை போகக் கூடாது போன்ற அறம் சார்ந்த வாழ்வியல் முறைகளை முன்னிலைப் படுத்தப்பட்ட பாரம்பரியமிக்க நம் சமுதாயத்தின் இன்றைய நிலை சற்று வித்தியாசமாகத் தென்படுகிறது. கடந்த கால குற்ற நிகழ்வுகள் தொடர்பான புள்ளி விவரங்களை ஆய்வு செய்யும் போது சட்டத்திலுள்ள நெழிவு சுழிவுகளைப் பயன்படுத்தி குற்ற விசாரணையில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற அபரிமிதமான தைரியம் படித்தவர்களிடையே அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.

    மானம் பெரிது என வாழும் கவரிமானை உதாரணம்காட்டி பேசப்பட்டு வந்த நம் சமுதாயத்தில் குற்றங்கள் புரிவது இழிவான செயல் என்ற உணர்வு மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியதை உணரமுடிகிறது. நேர்மையற்ற முறையில் வாழ்வது ‘மானத்தை விற்று உடை வாங்குவது‘ போன்றதே என்பதை இளம்பருவத்திலேயே குழந்தைகளுக்கு உணர்த்த தவறி வருகிறோமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

    எழுத்தறிவு என்பது கல்வியின் ஒரு பக்கம். அறம் சார்ந்த வாழ்வியல் முறைகளை இளம் பருவத்திலிருந்தே சிறார்களுக்கு கற்பிப்பது கல்வியின் மறுபக்கம். இவ்விரண்டையும் ஒரு சேர கற்பிக்கும் கல்விமுறைதான் சமுதாயத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழி வகுக்கும். இத்தகைய கல்வியை இளம் தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்கும் வகையில் கல்வி நிலையங்கள் திகழ வேண்டும். குழந்தைகளைப் பேணி வளர்க்கும் பெற்றோர்களும் இதில் பங்கெடுத்துக் கொண்டால் வளரும் இளம்பருவத்தினருக்குக் கல்வி என்பது சுமையாக இருக்காது சுவையானதாக இருக்கும்.

    பெ.கண்ணப்பன் ஐ.பி.எஸ். காவல்துறை தலைவர் (ஓய்வு).
    Next Story
    ×