search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிள்ளைகளின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் தொழில்நுட்பங்கள்
    X
    பிள்ளைகளின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

    பிள்ளைகளின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

    விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் மாணவர்களே படிப்பிலும் பல தனித்திறமைகளிலும் சிறந்து விளங்கி எதிர்கால வாழ்விலும் சாதனையாளராக முன்னேற்றம் அடைகின்றனர்.
    கூட்டுக்குடும்ப வாழ்க்கை அஸ்தமனமாகி, தனிக்குடுத்தன வாழ்க்கை உதயமானபின், அடுக்குமாடி குடியிருப்புகளாகி விட்ட நகர வாழ்க்கையில் குழந்தைகள் தினசரி வெளியில் சென்று விளையாடுவதே அரிதாகி விட்டது. நகரங்களில் தான் இத்தகைய நிலை என்றால் கிராமங்களிலும் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை பார்க்க முடிவதில்லை.

    கையில் மொபைல் போனுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதன் விளைவாக உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்கள் இளம்வயதிலேயே வந்துவிடுகிறது. இந்தியாவில் நாற்பது சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிக்குழந்தைகள் உடல்பருமனால் அவதிபடுகின்றனர். உண்ணும் உணவுமுறைகளில் ஆரோக்கிய குறைபாடுகள் ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது குறைந்ததே இதற்கு காரணம். கணினி மற்றும் மொபைல் போனில் அதிக நேரம் செலவிடுவதால் விடுமுறை நாட்களில் கூட வீட்டிலேயே சிறார்கள் சிறைபடுகின்றனர்.

    விளையாட்டு உடலுக்கு தேவையான ஆரோக்கியம் தருவதோடு மனதிற்கும் புத்துணர்ச்சி தருகிறது. இன்றைய உலகில் வெற்றிகரமாக ஜொலிக்கும் தொழில் அதிபர்கள் தங்களை பற்றிய நேர்காணலில் “தன் சிறுவயதில் ஏதோ ஒரு விளையாட்டில் ஈடுபாட்டுடன் விளையாடியதாக” தெரிவிக்கின்றனர். விளையாட்டுக்கும் மன உறுதிக்கும் நேரடி தொடர்பு உள்ளது என பல உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் மாணவர்களே படிப்பிலும் பல தனித்திறமைகளிலும் சிறந்து விளங்கி எதிர்கால வாழ்விலும் சாதனையாளராக முன்னேற்றம் அடைகின்றனர். நவீன தொழில்நுட்பங்களின் தாக்கத்தால் வெளியில் சென்று விளையாடும் விளையாட்டுகள் மட்டுமின்றி வீட்டிலேயே சிறுக்குழுக்களாக விளையாடும் விளையாட்டுகளும் தற்போது குறைந்துகொண்டே வருகின்றன.

    அறிவுக்கூர்மையை சோதிக்கும் இந்தியாவில் உருவான விளையாட்டான சதுரங்க விளையாட்டும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஒருநபர் மட்டுமே கணினியுடன் மோதும் விளையாட்டாக மாறிப்போனது. குழு விளையாட்டுகளான கிரிக்கெட், கால்பந்து போன்றவைகளும் மொபைல் திரையிலேயே செயலிகளாக வந்துவிட்டன.

    இன்றைய நவீன தொழில்நுட்பம் மனிதனை நோய்களிலிருந்து பாதுகாப்பதை விட நோய்களுக்கே காரணமாக மாறிவருவது மறுக்க முடியாத உண்மை. வசதி படைத்தவர்கள் தங்கள் பணத்தை கிளப், ஜிம் போன்ற இடங்களில் கொட்டி உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்கி தங்கள் ஆரோக்கியம் காக்கின்றனர். ஏழைகளுக்கு இங்கு செல்வதெல்லாம் இயலாது. ஆனால் ஏழைகள் கடினமாக உழைக்கின்றனர். இந்த கடின உடல் உழைப்பே ஏழைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இன்றைய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் அகோர பணப்பசிக்கு இரையாவது நடுத்தர வர்க்க மக்களின் ஆரோக்கியமே.

    இதற்கு என்ன தான் தீர்வு என நினைக்கும்போது, பாம்பின் விஷத்தை வைத்தே பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து தயாரிப்பது போல, ஆரோக்கியத்தை கெடுக்கும் இத்தகைய தொழில்நுட்பத்தை வைத்து ஆரோக்கியத்தை காக்கவும் தொழில்நுட்பம் பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது. இது நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்று.

    வீட்டிலேயே நடைபயிற்சி செய்யும் உபகரணங்களில் ஆரம்பித்து வெளியில் நடைபயிற்சி செய்தால் எவ்வளவு தூரம் நடந்தோம், எந்த திசையில் நடந்தோம், நடக்கும்போது நம் இதயம் எத்தனை முறை துடித்தது, எவ்வளவு கலோரிகள் குறைந்தது என்ற தகவல்களை செல்போன் திரையில் பார்க்கக்கூடிய வசதிகள் தற்போது வந்துவிட்டன. சர்வதேச விளையாட்டுகளில் நடுவர்கள் துல்லியமாக முடிவெடுக்க தொழில்நுட்பத்தின் உதவியை நாடுகின்றனர். உலகத்தில் எங்கோ நடக்கும் விளையாட்டை திரையில் பார்ப்பது மட்டுமல்லாமல் நேரில் சென்று பார்க்கும் அனுபவத்தையும் வெர்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறது.

    ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கவும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்களில் ஆரம்பித்து அவர்கள் அணியும் ஆடைகளிலும் சென்சார் போன்ற உயர் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மூங்கிலை வைத்து நீளம் தாண்டும் போட்டியில் மூங்கிலுக்கு பதிலாக நைலான் பைபர் இழைகளால் ஆன கம்பங்கள் பயன்படுத்தி வருவது விளையாட்டு துறையில் எந்திரப் பொறியியலின் பங்களிப்பே. இது நம் அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் ஒரு ஆரோக்கியமான தொழில்நுட்ப வளர்ச்சியாகும்.

    விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களின் ஆரோக்கியம் மேம்படவும் உலக அளவில் பல ஆராய்ச்சிகள் ஆங்காங்கே நடந்துவருகின்றன. இதற்காக பல சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். பல நாடுகளை சேர்ந்த விளையாட்டு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்கள் ஒன்றிணைந்து குழுக்களாக அசோசியேசன்களை ஏற்படுத்தி அவசியமான தொழில்நுட்பங்களை பற்றி விவாதித்து வருகின்றனர்.

    சர்வதேச அளவில் பல ஆராய்ச்சி பயிலரங்கம் நடத்தி விளையாட்டில் தொழில்நுட்பத்திற்கான பங்கை அதிகரித்து வருகின்றனர். இந்தியாவிலும் டிஜிஸ்போர்ட்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் இந்திய இளைஞர்களின் தொழில்நுட்ப திறமையை வெளிக்கொணர பயிலரங்கம், சொற்பொழிவு போன்றவற்றை கன்னியாகுமரி போன்ற சுற்றுலா இடங்களில் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மருத்துவர்கள், சத்துணவு நிபுணர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் விளையாட்டு வீரர்களை தினசரி கண்காணித்து ஆலோசனை கூறி ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதேபோல இனிவரும் காலங்களில் தொழில்நுட்ப உதவியால் பயிற்சியின்போதே விளையாட்டு வீரர்கள் நுட்பமாக கண்காணிக்கப்பட்டு அவர்களின் திறனை மேம்படுத்தி வெற்றியை பெறுமாறு செய்யலாம். இந்தியா போன்ற நாடுகளில் பொறியியல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள் விளையாட்டு துறைக்கு தேவையான தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதற்கான நேரத்திற்கு வந்துவிட்டோம்.

    இந்தியர்களுக்கு இயற்கையாகவே கிரேட்டிவிட்டி எனும் ஆக்கத்திறன் அதிகம் உள்ளது. இந்த தனித்திறமையை விளையாட்டை மேம்படுத்தும் சிந்தனையிலும் நேரம் செலவழிக்க ஆரம்பித்தால் சுய முன்னேற்றம் ஏற்படுவதோடு வேலைவாய்ப்பு வசதிகளையும் பெருக்கலாம். பொறியியலில் மின்னணு வகை பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி மெக்கானிக்கல், உயிரியியல் மற்றும் கட்டிட பொறியியல் வல்லுநர்களும் விளையாட்டுத்துறைக்கும், அதனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் மேலான பங்களிப்பை விரும்பி கொடுக்கலாம்.

    ரா.ராஜ்குமார், துணை பேராசிரியர், தனியார் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னை.
    Next Story
    ×