search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிள்ளைகளே நட்பால் உயர்வோம்
    X
    பிள்ளைகளே நட்பால் உயர்வோம்

    பிள்ளைகளே நட்பால் உயர்வோம்

    குட்டீஸ்... உங்களுக்கு எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள்? நல்ல நண்பர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியும், உயர்வும் நிச்சயம் கிடைக்கும்.
    குட்டீஸ்... உங்களுக்கு எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள்? உங்கள் செல்ல நாய்க்குட்டி, பூனைக்குட்டி, அம்மா, அப்பா, பள்ளியில் அவள், அவன் என்று ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்களா? அப்படியானால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். நல்ல நண்பர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியும், உயர்வும் நிச்சயம் கிடைக்கும். உலகில் சிறந்த உறவு முறைகளில் நட்புக்கு முக்கிய இடம் உண்டு. நட்பை பெருமைப்படுத்துவதற்காக ஒரு தினம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆம், நண்பர்கள் தினமான அது ஆகஸ்டு முதல் ஞாயிறு (வரும் 4-ந்தேதி) வருகிறது. இந்த நண்பர்கள் தினத்தில் நாம் நட்பின் பெருமை பற்றி சிறிது பேசுவோமா...

    நட்புறவு வாழ்க்கைக்கு முக்கியமானது. பிறந்த குழந்தைகள் 9 மாதம் ஆகிவிட்டால் அவர்கள் மற்றவர்களின் நட்புறவை நாடுவார்கள். நட்பை புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள் என்கிறது ஆராய்ச்சி. அவர்கள் தன்னுடன் பழகும் சகோதரன் சகோதரி மற்றும் பிற குழந்தைகளுடன் நட்புறவாக பழகுவதும், அவர்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை அறிந்து வைத்துக் கொள்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.

    நட்புறவு என்பது நமது மனநலன், உடல்நலனில் சிறந்த விளைவுகளை உருவாக்குவதாகவும் ஆய்வு சொல்கிறது. நிறைய நண்பர்களைப் பெற்றவர்கள் நீண்ட ஆயுள் பெறுகிறார்களாம். நண்பர்கள் மன அழுத்தங்கள், கவலைகளைப் போக்குவதில் பங்கெடுப்பதால் நம் மகிழ்ச்சி அதிகரித்து ஆயுளும் கூடுவதாக சொல்கிறார்கள். நண்பர்களுடன் கூட்டாக இருக்கும் சமயத்தில் மகிழ்ச்சியாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

    சில நேரங்களில் நண்பர் குழுவில் இருந்து வெளியேறி தன்னை ஈர்ப்புடையவராக, சிறந்தவராக காட்டிக் கொள்ள முற்படுவோம். இதற்கு “மகிழ்ச்சியான தலைமை விளைவு” என்று பெயர். அதாவது குழுவில் உள்ளவர்களின் பார்வை அல்லது சிந்தனை தன்னைப் பற்றியும் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் வெளியேற்றத்திற்கான காரணமாகும் என்கிறது ஆய்வு.

    நட்பு வட்டாரமானது 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேய்ந்து, மலர்வதாக தெரிகிறது. அதாவது சிறந்த நட்பாக இருப்பவர்களின் உறவு, 7 ஆண்டுகால தொடர் நட்புக்குப் பின்பு சரிவு காண்பதும், பின்னர் புதிய நட்பு வட்டாரம் ஒன்று உருவாவதும், அடுத்த 7 ஆண்டில் அதிலும் பாதிக்கு மேலான நட்புறவுகள் சிதைவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    பிள்ளைகளே நட்பால் உயர்வோம்

    மனிதர்களைவிட விலங்குகள் சிறந்த நட்புறவாக திகழும் என்கிறது ஒரு ஆய்வு. அதனால்தான் குழந்தைகளான உங்களுக்கு மற்ற பிள்ளைகளைவிட பொம்மைகள், விலங்குகள் முதலில் நண்பர்களாகிவிடுகிறார்கள். அவற்றிடம் பாசம் வைத்தால் அவை நம்மை ஏமாற்றாமல், எதிர்பார்க்காமல் அன்பை வெளிப்படுத்தும் என்பது உண்மையே. நாய், பூனை, ஆடு, மாடுகள் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் தங்களை வளர்ப்பவர்களுடன் நெருக்கமான பாசம் காட்டுவதை நாம் அறிவோம்.

    விலங்குகளும் நட்புறவு பேணும். மனித குரங்குகள், பபூன் குரங்குகள், செந்நாய், யானைகள், டால்பின்கள், குதிரைகள், வவ்வால்கள் போன்றவை தங்களுக்குள் மிகுந்த நட்புறவுடன் பழகுகின்றன.

    நம்முடன் நெருங்கிய குண ஒற்றுமை, மரபணு ஒற்றுமை கொண்டவர்களுடன்தான் நம்மால் நட்புறவு பேண முடியும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது. மற்றவர்களுடன் நாம் வலிந்து நட்புறவு ஏற்படுத்தினாலும் அவை நிலைப்பதில்லை. அவ்வப்போது கருத்து வேறுபாடுகளால் முட்டி மோதிக்கொள்ள வேண்டியது வரும்.

    உங்களால் எவ்வளவு நண்பர்களைப் பெற முடியும் என்றும் ஒரு ஆய்வு மதிப்பிட்டுக் கூறுகிறது. அதிகபட்சம் 396 நண்பர்களை நீங்கள் பெற்றுவிட முடியுமாம், ஆனால் அவர்களில் வெகு சொற்பமாக 36 பேர்தான் உண்மையான நட்புறவுடன் இருப்பார்கள். அதாவது நான்கில் ஒருவர்தான் நல்ல நட்புடன் பழகுவார். மற்றவர்கள் தேவை கருதியோ, சூழல் கருதியோ நட்பை தொடர்வார்கள் என்கிறது அந்த ஆய்வு.

    உங்களுக்கு சிறந்த நண்பர்கள் இருக்கிறார்களா? அவர்கள் உங்களுக்கு எப்போதும் கைகொடுப்பார்களா? நீங்களும் அவர்களின் தேவைக்கும், நட்புக்கும் கைகொடுத்து வாழ்வில் சிறந்த உயரங்களை எட்டுங்கள். மகிழ்ச்சி கொள்ளுங்கள்!
    Next Story
    ×