என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    பொன்னேரி பஸ் நிலையத்தில்  3 பேரை அரிவாளால் வெட்டி கொள்ளை- 2 பேர் கைது
    X

    பொன்னேரி பஸ் நிலையத்தில் 3 பேரை அரிவாளால் வெட்டி கொள்ளை- 2 பேர் கைது

    • பிடிபட்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர்.
    • விசாரணையில் அவர், பொன்னேரி அடுத்த என்.ஜி.ஓ.நகரை சேர்ந்த விக்கி என்பது தெரிந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி பஸ் நிலையத்தில் இருந்து பழவேற்காடு, மீஞ்சூர், செங்குன்றம் கும்மிடிப்பூண்டி, அண்ணாமலை சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்வதால் பஸ்நிலைய பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

    இந்த நிலையில் பொன்னேரி தேரடி தெருவை சேர்ந்த யுவராஜ், கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்பு குளத்தைச் சேர்ந்த சரவணன், பொன்னேரி அடுத்த வைரங்குப்பத்தை சேர்ந்த பூவரசன் ஆகியோர் பொன்னேரி பஸ்நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென 3 பேரையும் வழிமறித்து கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி பணம் - செல்போனை கேட்டனர். இதனை அவர்கள் கண்டித்து பணம் இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பூவரசனுக்கு தலை மற்றும் முதுகில் பலத்த வெட்டு விழுந்தது. இதேபோல் யுவராஜ், சரவணன் ஆகியோருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. பின்னர் 3 பேரிடம் இருந்தும் பணம், செல்போனை மர்ம கும்பல் பறித்துக் கொண்டனர்.

    கொள்ளை கும்பல் அரிவாளுடன் சுற்றுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ்நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே இதுபற்றி அறிந்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். உடனே கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களில் போதையில் கத்தியுடன் தள்ளாடிக் கொண்டிருந்த ஒருவனை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மற்ற 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    பிடிபட்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், பொன்னேரி அடுத்த என்.ஜி.ஓ.நகரை சேர்ந்த விக்கி என்பது தெரிந்தது. அவன் கொடுத்த தகவலின் படி கூட்டாளியான தமிழ் செல்வன் என்பவனையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், ரூ.3500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இரவு நேரங்களில் பஸ் நிலையத்தில் அமர்ந்து சமூக விரோதிகள் மதுகுடித்து அடிக்கடி ரகளையில் ஈடுபடுகிறார்கள். இதனை கண்டிக்கும பொது மக்களை மிரட்டுகின்றனர். ஆனால் இதனை போலீசார் கண்டு கொள்வதில்லை. போலீஸ் ரோந்து வாகனங்கள் வருவதில்லை. இதனால் பஸ்நிலைய பகுதியில் அடிக்கடி பணம் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்கள் நடந்து வருகின்றன. இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×