search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    • இன்று இரவு 10 மணி வரையிலும் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
    • 12-ந்தேதி வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடைகிறது.

    பூலோக வைகுண்டமாகவும், 108 வைணவ திருத் தலங்களில் முதன்மையானதாகவும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    பகல் பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார்.

    பகல் பத்து உற்சவத்தின் போது நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் எழுந்தருளி சேவை சாதிப்பார். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 23-ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். பகல் பத்து உற்சவத்தின் 10-வது நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது. முன்னதாக 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி, கிளி மாலை மற்றும் திருவாபரணங்கள் அணிந்து புறப்பட்டார்.

    பின்னர் ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்க வாசலை வந்தடைந்தார். சரியாக 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் சொர்க்கவாசலை கடந்தனர். சொர்க்கவாசலை கடந்த நம்பெருமாள் மணல் வெளியில் உள்ள திருக்கொட்டகையில் 5 மணி வரை காட்சி அளித்தார்.

    இந்த நிகழ்வில் தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கலெக்டர் மா.பிரதீப்குமார், மாதவரம் எம்.எல்.ஏ. மூர்த்தி, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி தினமான இன்று காலை 4.45 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    சொர்க்கவாசல் திறப்பு தினமான இன்று முதல் ராப்பத்து எனப்படும் திருவாய் மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார்.

    ராப்பத்து உற்சவத்தின் ஏழாம் திருநாளான வருகிற 8-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 9-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 11-ந்தேதி தீர்த்த வாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடைகிறது.

    பக்தர்கள் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் உள்பிரகாரத்தில் 117 சி.சி.டி.வி. கேமராக்களும், கோவிலுக்கு வெளியே 92 சி.சி.டி.வி. கேமராக்களும் என மொத்தம் 209 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    Next Story
    ×