search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்?
    X

    வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்?

    • வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நமக்கு காட்சி தருகிறார்.
    • வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது என்பது நம் முன்னோர்களின் கூற்று.

    வைகுண்டத்தில் தான் விஷ்ணு வசிக்கிறார். 'ஏகம்' என்பது 'ஒன்றை' குறிக்கின் றது. 'தசம்' என்பது பத்தை குறிக்கின்றது. ஒன்றையும் பத்தையும் கூட்டினால் 11. அமாவாசை வளர்பிறையில் பதினோராவது நாளில் ஒரு ஏகாதசியும், பவுர்ணமி தேய் பிறையில் பதினோராவது நாளில் மற்றொரு ஏகாதசி வருகிறது. மொத்தம் வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும்.

    இதில் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடி வருகிறோம். மற்ற ஏகாதசியில் நம்மால் விரதத்தை கடைபிடிக்க முடியவில்லை என்றாலும் இந்த மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது என்பது நம் முன்னோர்களின் கூற்று. ஏகாதசி விரதமானது முதலில் தொடங்கப்பட்ட மாதமும் மார்கழி தான்.

    பெருமாள் கோவில்களில் இருக்கும் சொர்க்க வாசல் என்று கூறப்படும் அந்த கதவினை குறிப்பாக ஏன் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கிறார்கள் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இன்னும் இருந்துதான் வருகிறது. அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக இந்த பதிவு.

    நம்முடைய இந்து புராண கதைகள் என்றாலே அது ஒருவருடைய கர்வத்தை அடக்குவதற்காகவோ அல்லது தீயவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்றுவதற்காகவோ அல்லது அதர்மத்தை அழிப்பதற்காகவோ தான் இருக்கும். நம் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக நம் முன்னோர்கள் நமக்கு கூறிவிட்டு சென்றுள்ள வழிபாடுகளும் விரதங்களும் நமக்கு நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு நல்ல புராணக்கதையைத்தான் நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

    ஒரு நாள் இந்த பூலோகத்தில் உயிர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் விஷ்ணுவிற்கு வந்தது. உயிர்களைப் படைக்கும் வேலையை செய்வதற்கு ஒரு வரை நியமிக்க வேண்டும் அல்லவா? அதற்காக பிரம்மனை படைத்தார். உயிர்களையெல்லாம் இந்த பூலோகத்தில், பிரம்மாவான நான் தான் படைக்கப் போகிறேன், என்ற கர்வமானது பிரம்மனுக்கும் வந்துவிட்டது. தலைக் கணம் ஏறிவிட்டது. இந்த பிரம்மனின் தலைக்கணத்தை அடக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்த விஷ்ணு தன் காதுகளில் இருந்து இரு அசுரர்களை வெளிக்கொண்டு வந்தார். அந்த இரண்டு அரக்கர்களின் பெயர் லோகன், கண்டன்.

    இந்த இரண்டு அசுரர்களின் கோரதாண்டவத்தை கண்ட பிரம்மாவின் கர்வமானது அடங்கி விட்டது. ஏனென்றால் இந்த இரண்டு அரக்கர்களும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டவர்கள் அல்லவா? இவர்களுக்கு சக்தி அதிகம். அதாவது ஒரு நல்ல செயலுக்காக உருவாக்கப்பட்ட அரக்கர்கள் இவர்கள்.

    'பிரம்மனின் தலைக் கணத்தை நீக்கிய உங்களுக்கு என்ன வரம் வேண்டும்' என்று விஷ்ணு அந்த இரண்டு அரக்கர்களையும் நோக்கி கேட்டார். அந்த இரண்டு அரக்கர்களும் வித்தியாசமான ஒரு வரத்தை விஷ்ணுவிடம் கேட்டனர். விஷ்ணு பகவானால் படைக்கப்பட்ட அரக்கர்கள் அல்லவா, இவர்களுக்கும் தலைக்கணம் வந்து விட்டது.

    அப்போது விஷ்ணு பகவானான நீங்கள் அரக்கர்களான எங்கள் இருவரிடமும் போர்புரிய வேண்டும்' என்ற ஒரு கோரிக்கையை வைத்தனர். விஷ்ணுவும் இதை ஏற்றுக் கொண்டார். விஷ்ணு பகவான் வடக்கு வாசலின் வழியாக வந்து இந்த இரண்டு அரக்கர்களிடமும் போரினை தொடங்கினார். விஷ்ணுவிடம் பரமபதத்தில் போரிட்ட அந்த இரண்டு அரக்கர்களும் தோல்வி அடைந்து விஷ்ணுவின் பாதங்களில் சரண் அடைந்தனர்.

    பகவானே! 'தங்களின் சக்தியால் உருவாக்கப்பட்ட நாங்கள் வைகுண்டத்தில் உன்னிடமே இருக்க வேண்டும்' என்று வேண்டி வரத்தை கேட்டனர். தோல்வியுற்ற இந்த இரண்டு அரக்கர்களும் வடக்கு வாசலின் வழியாக பெருமாளை சென்றடைந்தனர். இரண்டு அரக்கர்களும், பெருமாளை சென்றடைந்த இந்த நாளைத்தான் வைகுண்ட ஏகாதேசி திருநாளாக கொண்டாடி வருகிறோம். இரண்டு அரக்கர்களும் இன்றுவரை பெருமாளின் இருபுறங்களிலும் சங்கு சக்கரமாக மாறி காட்சி தருகின்றனர். இந்த வடக்குவாசல் தான் சொர்க்க வாசலாக கூறப்படுகிறது.

    இதன்மூலம் 'வைகுண்ட ஏகாதசிஅன்று சொர்க்க வாசல் வழியாக வெளியில் தரிசனத்திற்காக வரும் பெருமாளை தரிசிப்பவர்களுக்கும், பெருமாளை சொர்க்கவாசல் வழியாக பின் தொடருபவர்களுக்கும் பாவங்கள் நீங்கி முக்தி அளிக்க வேண்டும்' என்று அந்த அசுரர்கள் பெருமாளிடம் வரத்தை வாங்கிக்கொண்டனர். இதன் மூலமாகத்தான் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நமக்கு காட்சி தருகிறார்.

    அந்த விஷ்ணுவால் படைக்கப்பட்ட அசுரர்கள், தெரியாமல் செய்த தவறினை மன்னித்து அவர்களுக்கு மோட்சம் தந்து தன்னுடனே வைத்துக் கொண்ட அந்தப் பெருமாள், மனித பிறப்பு எடுத்து தெரியாமல் தவறு செய்யும் நம்மையும் மன்னித்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்வார். ஆகவே நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளில் இருந்து விமோசனம் பெற வேண்டுமென்றால் பெருமாளை இந்த ஏகாதசி அன்று சொர்க்க வாசலில் தரிசனம் செய்யுங்கள்.

    Next Story
    ×