search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உள்ளம் மகிழும் உவரி விசாகம்
    X

    உள்ளம் மகிழும் உவரி விசாகம்

    • மக்கள் உவரியில் பவுர்ணமி தீர்த்தமாடி சுயம்புலிங்க சுவாமியை வழிபடுவது வழக்கம்.
    • நான்கு கால பூஜையும் முடிந்த பின் உற்சவ மூர்த்தி வீதிவுலா நடைபெறும்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் வைகாசி விசாக திருவிழா தனித் தன்மை கொண்டது. இதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள்.

    அன்றைய காலத்தில் கூண்டு வண்டிகளில் கட்டுச் சோற்றினை கட்டித்தொங்க விட்டு கூண்டின் மேல் சமையலுக்குத் தேவையான விறகு, பாத்திரங்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை ஏற்றி வைத்திருப்பார்கள். அவல், மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், அரிசிமாவு போன்றவற்றை பைகளில் வைத்திருப்பார்கள், வண்டியின் மேலும், உள்ளும் அடியிலும் வைக்கோலைக்கட்டி வைத் திருப்பார்கள்.

    அரிக்கேன் விளக்கு வண்டியின் அடியில் தொங்கும் அந்த விளக்கொளியில் குமரி மாவட்டத்தின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் முப்பது, நாற்பது வண்டிகள் முற்காலத்தில் உவரி விசாகத்திற்கு வந்து செல்வார்கள்.

    வழியில் கூடன்குளம் சிரட்டைப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அவரையும், சுடலைமாடனையும் மனம் உருக வணங்கி தங்கள் குறைகளை எடுத்துக்கூறி ஆறுதலைப்பெற்று அம்மனிடம் வழிபாடு செய்து தேங்காய் உடைத்து, அதில் தேங்காயை மட்டும் எடுத்துச் கொண்டு சிரட்டையை கோவிலிலேயே விட்டு விடுவர். ஆலயத்தில் சுடலைமாடசுவாமியின் அருள் பெற்று மீண்டும் மக்கள் புறப்படுவர்.

    விசாகத்திற்கு முந்தைய நாள் காலைப்பொழுது புலரும் வேளையில் நாட்டாறு கடந்து பத்திரகாளியம்மன் கோவில் வந்து சேர்வார்கள். அங்கே காலையில் பல் துலக்கி, அம்மனை வழிபட்டு, பதநீர் அருந்தியபின் உவரி வந்து சேர்வார்கள், முற்காலத்தில் உவரி செல்லும் வழி முழுவதும் இலவசமாக பதநீர் குடிக்க கிடைக்கும். வழி நெடுக கனி வகைகளை உண்டு மகிழ்வார்கள். குறிப்பாக இது கோடை காலம் மாம்பழம் அதிகம் கிடைக்கும் கால மாதலால் மாம்பழம், வாழைப்பழமும் சாப்பிடுவார்கள்.

    முற்காலத்தில் மட்டுமின்றி இன்றும் ஏராளாமான மக்கள் விசாக நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து உவரி சுயம்புநாதரை வந்து வழிபடுகின்றனர்.

    உவரி விசாகத்திற்கு வரும் மக்கள் விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் தங்கமாகிய கடல் மண்ணை எடுத்து சுயம்பு நாதர் ஆலயத்தின் அருகில் தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து குவிப்பார்கள். இதனால் தீரும் பாவ வினைகளும், நோய்களும், கஷ்டங்களும் ஏராளம்.

    செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும்.

    கடல் குளித்த பின் விநாயகரை வழிபட்டு மும்முறை வலம் வந்து, சுயம்பு நாதர் ஆலயத்தை சுற்றி வந்து வணங்கி, முன்னோடியைத் தொழுது பிரம்மசக்தியம்மன், இசக்கியம்மாள் ஆலயங்களை வலம் வந்து சாஸ்த்தாவை வழிபடுவார்கள். தெப்பக்குளம் அல்லது கிணற்று நீரில் நீராடி தூய ஆடை அணிந்து சுயம்பு நாதர் ஆயலத்தினுள் சென்று மூலஸ்தானத்தை மூன்று முறை வலம் வந்து அர்ச்சனை செய்து கொடி மரத்தைத் தொழுது பிரார்த்தனை செய்வார்கள்.

    குமரி மாவட்ட மக்கள் உவரியில் தங்குவ தற்கும்,சமையல் செய்து பரிமாறுவதற்கும், பாதுகாப்பிற்காகவும் மடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு கால பூஜையும் முடிந்த பின் உற்சவ மூர்த்தி வீதிவுலா நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்று உற்சவ மூர்த்தி ஆலயத்தினுள் எழுந்தருளும் போது விடியும் நேரம் ஆகிய விடும் அதன் பின் மக்கள் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுச் செல்வர். விசாகத்திற்கு மறுநாள் பவுர்ணமி ஆகும். பெரும்பான்மையான மக்கள் உவரியில் பவுர்ணமி தீர்த்தமாடி சுயம்புலிங்க சுவாமியை வழிபடுவது வழக்கம். பணங்கிழங்கும், வேர்க்கடலையும் வளியில் அதிகம் வாங்கிச் சாப்பிடுவர். தங்கள் உறவினர்களை எல்லாம் கண்டு கடற்கரையில் அமர்ந்து பேசி மகிழ்வர். வைகாசி விசாக திருவிழா முடிவில் ஒரு வருடத்திற்கான புண்ணியத்தை ஒரே நாளில் உவரியில் பெற்ற திருப்தி ஒவ்வொரு பக்தனுக்கும் உண்டாகும்.

    Next Story
    ×