search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
    X

    தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

    • நாளை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 8-ந்தேதி தியாகராஜர் பந்தம் பறி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர் சந்திரசேகரர்-திரபுரசுந்தரி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினர்.

    பின்னர் பரிவார பூஜைகள் செய்யப்பட்டு காலை 8.45 மணியளவில் 41 அடி உயரமுள்ள அலங்கரிக்கப்பட்ட தேர், சன்னதி தெருவிலுள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து கைலாய வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் பச்சைக்கொடி அசைக்க புறப்பட்டது.

    இதில் தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், திருவொற்றியூர் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, வடசென்னை மாவட்ட பா.ஜ.க. செயலாளர் ஜெய்கணேஷ் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டு திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வந்து தெற்கு மாட வீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதிகள் வழியாக மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சன்னதி தெரு வந்து பகல் 2 மணியளவில் நிலையை வந்தடைந்து.

    தேருக்கு முன்பு சங்க நாதம் முழங்க சிவனடியார்கள் நடனமாடியபடியும், பள்ளி மாணவிகள் கோலாட்டம், பரதநாட்டியம் ஆடிய படியும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தேரை வரவேற்றபடி சென்றனர்.

    தேர் செல்லும் வழியில் ஆங்காங்கே நின்றிருந்த பக்தர்கள் தீபாராதனை காட்டி வழிபட்டனர். தேர் செல்லும் வழியில் வெப்பத்தை தணிக்க மாநகராட்சி சார்பில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு உபயதாரர்கள் நீர்மோர் வழங்கினர்.

    தேரானது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் 45 அடிக்கும் உயரமாக அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் தூண்களுக்கு இடையே சென்றதை பக்தர்களும், பொதுமக்களும் ஆச்சரியமாக பார்த்து வணங்கி சென்றனர்.

    விழாவில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் செல்லும் நேரத்தில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. விழாவில் வருகிற 6-ந்தேதி திருக்கல்யாணம், 8-ந்தேதி இரவு 18 திருநடனம், தியாகராஜர் பந்தம் பறி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகின்றது.

    Next Story
    ×