search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தங்கக்குதிரையில் வந்து 70 மண்டபங்களில் எழுந்தருளிய முருகப்பெருமான்
    X

    தங்கக்குதிரையில் வந்து 70 மண்டபங்களில் எழுந்தருளிய முருகப்பெருமான்

    • மொட்டையரசு திடலை 7 முறை சுற்றி வந்த பஞ்ச உபசார நிகழ்வு நடந்தது.
    • பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 3-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி கடந்த 9 நாட்களாக தினமும் இரவு 7 மணி அளவில் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் விசாக விழா விசேஷமாக கொண்டாடப்பட்டது. திருவிழாவின் நிறைவாக நேற்று மொட்டையரசு உற்சவம் நடந்தது. இதனையொட்டி முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்கக்குதிரையில் அமர்ந்து கோவில் வாசலில் இருந்து புறப்பட்டு என்ஜினீயர் கல்லூரி வளாகத்தில் உள்ள மொட்டையரசு திடலுக்கு வந்தார்.

    இதனை தொடர்ந்து மொட்டையரசு திடலை சேர்ந்து உள்ள 70 மண்டபங்களிலும் முருகப்பெருமான் எழுந்தருளினார். ஒவ்வொரு மண்டபத்திலும் சுவாமிக்கும், அம்பாளுக்குமாக சிறப்பு பூஜையும், தீப, தூப, ஆராதனையும் நடந்தது. காலையில் இருந்து இரவு வரை மொட்டையரசு திடலிலே சுவாமி தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அங்கு ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் மதிய வேளையில் கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக வெள்ளரி, பானக்கரம், நீர்மோர் மற்றும் பாகற்காய் குழம்பு படைத்து நெய்வேத்தியம் நடைபெற்றது. இதனையடுத்து மொட்டையரசு திடலை 7 முறை சுற்றி வந்த பஞ்ச உபசார நிகழ்வு நடந்தது. மேலும் பவுர்ணமியையொட்டி நிலா சோறு வைபவம் நடந்தது.

    இதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் மொட்டையரசு திடலில் இருந்து கோவில் இருப்பிடம் வரை பூப்பல்லக்கில் சுவாமி வலம் வந்தார். சுவாமி புறப்பாட்டில் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுரைமாநகர் உதவி கமிஷனர் அலுவலகம் என்று பல இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த திருக்கண்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.

    Next Story
    ×