search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா 26-ந்தேதி தொடங்குகிறது
    X

    சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சவுமியநாராயண பெருமாள்.

    திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா 26-ந்தேதி தொடங்குகிறது

    • மார்ச் 7-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.
    • 8-ந்தேதி சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடக்கிறது.

    திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தெப்பத்திருவிழா 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தெப்பத்திருவிழா தொடங்குகிறது. முன்னதாக 25-ந்தேதி மாலை சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மறுநாள் பெருமாள் திருமண மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து கொடிமரம் அருகே புறப்பாடாகி கொடிமரத்திற்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இதை தொடர்ந்து காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் இரவு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் பல்லக்கில் திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி தினந்தோறும் காலை சுவாமி புறப்பாடும், இரவு சிம்மம், அனுமன், கருடன், சேஷன், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. 6-ம் நாள் மாலை சூர்ணாபிஷேகம் மற்றும் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    மார்ச் 6-ந்தேதி 9-ம் திருநாள் அன்று வெண்ணைய்த்தாழி அலங்காரத்தில் சுவாமி தெப்பக்குளத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், இரவு தங்க பல்லக்கில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் 7-ந்தேதி தெப்ப உற்சவ திருநாள் அன்று காலை 10.46 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7.30 மணிக்கு இரவு தெப்பமும் நடக்கிறது. இந்த தெப்பத்திருவிழா அன்று பக்தர்கள் தெப்பக்குளத்தை சுற்றிலும் லட்சக்கணக்கான அகல்விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    மறுநாள் காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும், இரவு சுவாமி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தெப்ப திருவிழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகிநாச்சியார் தலைமையில் மேலாளர், கண்காணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். தெப்பத்திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×