search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி திருக்கல்யாண திருவிழா: ராமேசுவரம் கோவிலில் இருந்து சுவாமி-அம்பாள் மறுவீடு சென்றனர்
    X

    ஆடி திருக்கல்யாண திருவிழா: ராமேசுவரம் கோவிலில் இருந்து சுவாமி-அம்பாள் மறுவீடு சென்றனர்

    • சுவாமி-அம்பாள் மற்றும் பெருமாள் தங்க கேடயத்தில் எழுந்தருளினர்.
    • கோவிலில் பள்ளியறை பூஜை நடைபெற்று நடை சாத்தப்பட்டது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 3-ந்தேதி ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான நேற்று காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி-அம்பாள் மற்றும் பெருமாள் ஆகியோர் தங்க கேடயத்தில் எழுந்தருளினர்.

    பின்னர் தெற்கு, மேற்கு ரத வீதி சாலை, திட்டக்குடி சாலை வழியாக கெந்தமாதனபர்வதத்தில் உள்ள ராமர் பாத மண்டகப்படிக்கு மறுவீட்டிற்கு எழுந்தருளினர்.

    தொடர்ந்து அங்கு மாலை 6 மணிக்கு சுவாமி- அம்பாள், பெருமாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்ற பின்னர், மீண்டும் அங்கிருந்து தங்க கேடயத்தில் புறப்பாடாகி சுவாமி-அம்பாள் நேற்று இரவு 10 மணிக்கு மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கோவிலில் பள்ளியறை பூஜை நடைபெற்று நடை சாத்தப்பட்டது.

    கோவில் நடை அடைப்பு பற்றி தகவல் தெரியாததால் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கோவிலின் கிழக்கு வாசல் பகுதியிலும், ரதவீதிகளில் நின்றும் கோவிலை நோக்கியும், கோபுரத்தை நோக்கியும் தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.

    ஏராளமானோர், மறுவீடு நிகழ்ச்சி நடந்த ராமர்பாதம் மண்டகப்படிக்கு சென்று சுவாமி-அம்பாளை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    Next Story
    ×