search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராமேசுவரம் கோவிலில் தேரோட்டம்: பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தரிசனம்
    X

    சுவாமி தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்த காட்சி.

    ராமேசுவரம் கோவிலில் தேரோட்டம்: பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தரிசனம்

    • சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
    • கோடிலிங்க ரவி சாஸ்திரி மண்டகப்படிக்கு எழுந்தருளினர்

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.

    இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் 9-வது நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. அதற்காக கோவிலில் இருந்து நேற்று காலை சுவாமி பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், அம்பாள் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் மற்றும் சுவாமி-அம்பாள் தேரை கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், நகரசபை தலைவர் நாசர்கான், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கிய சுவாமி-அம்பாள் தேரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவாய நம, சிவாய நம என பக்தி கோஷத்துடன் இழுத்து வந்தனர்.

    கிழக்கு வாசல் இருந்து புறப்பட்ட தேரானது தெற்கு, மேற்கு, வடக்கு ரதவீதி சாலை வழியாக பகல் 12.20 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் தேருக்கு முன்பாக தங்க முகப்பட்டை அணிந்து கம்பீரமாக கோவில் யானை ராமலட்சுமி வலம் வந்தது பக்தர்களை பரவசமடைய வைத்தது.

    இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி-அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் திட்டக்குடியில் உள்ள கோடிலிங்க ரவி சாஸ்திரி மண்டகப்படிக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து மீண்டும் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி கோவிலுக்கு வந்தடைந்தனர். திருவிழாவின் 10-வது நாள் மற்றும் மாசி அமாவாசையை முன்னிட்டு இன்று பகல் 12 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்த வாரி வழங்கும் நிகழ்ச்சிக்கு எழுந்தருளுகின்றனர்.

    Next Story
    ×