search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் இன்று தேரோட்டம்: நாளை ஆருத்ரா தரிசனம்
    X

    சிதம்பரேஸ்வரர் வீதி உலா நடந்த போது எடுத்த படம்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் இன்று தேரோட்டம்: நாளை ஆருத்ரா தரிசனம்

    • இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், திருவாதிரை களி திருவிழாவும் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டுக்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இசை, பக்தி மெல்லிசை, சொல்லரங்கம், பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் கைலாசப்பர்வத வாகன நிகழ்ச்சியும், 8-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வந்த போது பேரம்பலம் திருக்கோவில் முன்பு நடராஜ பெருமான் ஆனந்தத் திருநடனம் ஆடினார். இதனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடினர்.

    மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 9-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று கங்காளநாதர் பிட்சாடனராக வீதி உலாவரும் நிகழ்ச்சியும், சுவாமியும் அம்பாளும், அறம் வளர்த்த நாயகியும், விநாயகரும் கோவிலில் இருந்து தட்டு வாகனங்களில் புறப்பட்டு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும் அம்பாளும், அம்மன் தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மனும், பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளுவார்கள்.

    அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவார்கள். நான்கு ரதி வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக உலா வரும் தேர் பின்பு வெடி முழக்கத்துடன் நிலைக்கு வந்து சேரும். அதன் பின்னர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தேரோட்டத்தை காண குமரி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பக்தர்கள் சுசீந்திரத்திற்கு வருவார்கள்.

    இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், திருவாதிரை களி திருவிழாவும் நடைபெறுகிறது.

    விழாவையொட்டி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபடுகிறார்கள். மேலும் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் துப்புரவு பணிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுசீந்திரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.

    Next Story
    ×