search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி கோவில் கும்பாபிஷேகத்திற்காக புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்
    X

    சுருளியிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    பழனி கோவில் கும்பாபிஷேகத்திற்காக புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்

    • வருகிற 27-ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 2 ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் வருகிற 27-ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு நேற்றுமுதல் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. பழனி மலைக்கோவில் மற்றும் உட்புற சன்னதிகளில் உள்ள 50 கோபுர கலசங்கள் ஸ்தாபனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்றுகாலை 9 மணிக்கு நன்மங்கல இசை, திருமுறை விண்ணப்பம், விநாயகர் அகவல், முதல்நிலை வேள்வி, 16 வகை திருநாமவேள்வி, ஞானசிறுவர்கள் வழிபாடு, நிறைவேள்வி ஆகியவை நடைபெற்றது.

    மேலும் கந்தபுராணம், திருப்புகழ், வேல்விருத்தம், மயில் விருத்தம், திருமுறை முற்றோதல் ஆகியவையும் நடைபெற்றது. இன்றுமாலை 7ம் கால வேள்வி வழிபாடு துவக்கம் ஆணைமுகன் வழிபாடு, முளைப்பாழிகை இறைவழிபாடு, மங்கல இசை, அறுசுவை காரங்கள் சமித்து ஆகிய 96 ஆகுதி வேள்வி ஆகியவை நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்திற்காக காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, சுருளி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து தீர்த்தங்கள் எடுத்து வரலாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலிருந்து பக்தர்கள் குடங்களில் தீர்த்தங்கள் எடுத்து பாதையாத்திரையாக பழனிக்கு புறப்பட்டனர்.

    இதேபோல பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்தும் தீர்த்தங்கள் எடுத்துவரும் பணி நடந்து வருகிறது. இதனிடையே கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு இணையத்தில் நேற்று தொடங்கி இன்றுமாலையுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பல்வேறு ஊர்களிலிருந்தும் பாதையாத்திரையாக ஏராளமான பக்தர்கள் பழனி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது இவர்கள் பழனி நோக்கி அரோகரா கோசம் முழங்க வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் ஆங்காங்கே கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×