search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுர மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுர மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    • யாகசாலை பூஜையில் தர்மபுர ஆதீனம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கோஷம் விண்ணையே முட்டியது.

    மண்ணச்சநல்லூர் :

    சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படுவது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்ததாக திகழ்வதால் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். பெண்கள் அதிக அளவில் விரதம் இருந்தும், பாதயாத்திரையாக வந்தும் வழிபடுகிறார்கள்.

    பல்வேறு பெருமைகளை கொண்டுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆகம விதிப்படி கடந்த 2016 பிப்ரவரி 6-ந்தேதி மூலவர் சன்னதி, உள், வெளி பிரகாரங்கள், மேற்கு, தெற்கு, வடக்கு கோபுரங்களுக்கு மட்டும் கும்பாபிஷேகம் நடந்தது.

    கிழக்கு ராஜகோபுரம் கல்காரம் எனப்படும் கருங்கற்களால் கட்டப்பட இருந்ததால் அதற்கு தனியாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன் படி பணிகள் தற்போது முழுமை அடைந்து இன்று (6-ந்தேதி, புதன் கிழமை) ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    101.6 அடி உயரம், 7 நிலைகள், 324 கதை சிற்பங்களுடன் கூடிய ராஜகோபுர கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 3-ந்தேதி இரவு தொடங்கியது. தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு மேல் இரவு 8.30 மணிக்குள் முதல் கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து ராஜகோபுரத்தின் உச்சியில் கும்ப கலசங்கள் பொருத்தப்பட்டன. நிகழ்ச்சியில் ராஜகோபுர உபயதாரர்களான பொன்னர், சங்கர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ராஜகோபுர கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடைவீதியில் உள்ள ஆண்டவர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். யாகசாலை பூஜையில் தர்மபுர ஆதீனம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.

    இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் மற்றும் நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 6 மணிக்கு மகாபூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் யாத்ராதானம் செய்யப்பட்டு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, மேள வாத்தியங்களுடன் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள், உபயதாரர்கள் தலையில் புனித நீர் சுமந்து வந்தனர்.

    ராஜகோபுரத்தில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சரியாக 7.15 மணிக்கு ராஜகோபுரத்தில் உள்ள 7 கலசங்களுக்கும் சிவாச்சார்யார்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். முன்னதான நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு விழாவில் கலந்துகொண்டு பச்சை கொடியசைத்து கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது அங்கு குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கோஷம் விண்ணையே முட்டியது. பின்னர் ஷவர் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட பக்தர்கள் கண்களில் ஒற்றிக்கொண்டனர்.

    விழாவையொட்டி இன்று காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் கட்டணமின்றி இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேகத்தைக் காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்ததால் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார் மேற்பார்வையில், டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவின் பேரில் எஸ்.பி. சுஜித்குமார் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், குற்ற சம்பவங்களைத் தடுக்கும் விதமாக சமயபுரம் நால்ரோடு பகுதி முதல் கோவில் வரை கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா அமைத்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    மேலும் தீயணைப்புத் துறையினர், தொற்று ஏற்படா வண்ணம் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் சார்பில் அதிக அளவில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    Next Story
    ×